ஹைதாராபாத்: ஆந்திராவில் உருகி உருகி இளைஞர் ஒருவரை காதலித்தார் மகாலட்சுமி.. இந்த காதல் விவகாரம் இப்படியொரு கொடூர முடிவை சந்திக்கும் என்று அந்த 19 வயது பெண்ணும் எதிர்பார்த்திருக்க மாட்டார்.. 2 வருடத்துக்கும் மேலாக காதலித்த 2 பேருக்குள் ஏற்பட்ட ஒரு சின்ன பிரச்சனை, கடைசியில் உயிரையே பறிக்கும் அளவுக்கு போய்விட்டது. அப்படி என்ன நடந்தது ஹைதராபாத்தில்?
விஜயவாடா அஜித் சிங் நகர், நியூ ராஜராஜேஸ்வரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் படாலா மகாலட்சுமி. 19 வயதான இவர், ராஜீவ் கிரககல்ப் அப்பார்ட்மெண்ட்டில் தனது பாட்டி சாந்தம்மாவுடன் வசித்து வந்தார்.
மகாலட்சுமியின் அப்பா தமிழகத்தைச் சேர்ந்தவர். மகாலட்சுமியின் அம்மா ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், அவரது அப்பா 2-வது கல்யாணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தார். மகாலட்சுமி பாஞ்சா சென்டரில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இதே அடுக்குமாடிக் குடியிருப்பின் C பிளாக்கில், ஸ்ரீகாகுளம் மாவட்டம் குப்பிடிப்பேட்டையைச் சேர்ந்த மக்கு சின்ன ராவ், தனது அண்ணன் மகேஷுடன் வசித்து வந்தார்... 22 வயதான சின்ன ராவ், சுப நிகழ்ச்சிகளுக்காக மண்டபங்களை டெக்கரேஷன் செய்யும் வேலையை செய்து வந்தார். மகாலட்சுமியும் சின்ன ராவும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள்.. அதனால் 2 பேரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது... 2 பேரும் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் 2 பேரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தார்கள். இதுபற்றி 2 வீட்டாருக்கும் தெரியவந்து, திருமணம் தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது. இந்நிலையில்தான் சமீபத்தில் அந்த பகுதியில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடந்தது... இதில் மகாலட்சுமி வேறு ஒரு இளைஞருடன் சேர்ந்து டான்ஸ் ஆடியதாக கூறப்படுகிறது... இதைப் பார்த்த சின்ன ராவுக்கு பயங்கரமாக கோபம் வந்துள்ளது.. மகாலட்சுமியின் நடத்தையிலும் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்சனைக்குப் பிறகு மகாலட்சுமியும் சின்ன ராவை வெறுக்க தொடங்கிவிட்டாராம்.. ஒருகட்டத்தில் அவரை சந்திக்கவும் மறுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், மகாலட்சுமியின் பாட்டி சாந்தம்மாவும் இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காதலி மீது கோபப்பட்டாரே தவிர, சின்ன ராவால் காதலில் இருந்து அவ்வளவு எளிதாக வெளியே வர முடியவில்லை. மகாலட்சுமியை சந்திக்க முடியாததால் தொடர்ந்து செல்போனில் மெசேஜ்களை அனுப்பிக் கொண்டே இருந்துள்ளார். ஆனால் மகாலட்சுமி எந்த பதிலும் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் இன்னும் அதிகமாகியுள்ளது. ஒருகட்டத்தில் மகாலட்சுமியை கொலை செய்ய சின்ன ராவ் முடிவு கட்டினார்.. அதன்படி, சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து தேங்காய் வெட்டும் கத்தியை எடுத்துக்கொண்டு மகாலட்சுமியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது மகாலட்சுமி வீட்டுக்கு வெளியே சமையல் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தார். அங்கு சென்ற சின்ன ராவ், திடீரென மகாலட்சுமியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த மகாலட்சுமி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடித்துள்ளார். பிறகு சின்ன ராவ் அங்கிருந்து அதே அப்பார்ட்மெண்ட்டின் 3-வது மாடிக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து தலைகீழாக கீழே குதித்துவிட்டார்.. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், மூச்சுத்திணறிக் கொண்டிருந்த மகாலட்சுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிறிது நேரத்திலேயே மகாலட்சுமியும் உயிரிழந்தார். தகவலறிந்து அஜித் சிங் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 2 பேரின் உடல்களையும் மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 2 பேரின் வீடுகளும் அருகருகே இருந்ததால், இறுதிச்சடங்கின்போதுமீண்டும் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக போலீசார் தடுப்பு அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 2 வருடங்களுக்கும் மேலாக காதலித்து, திருமணம் செய்து கொள்ள நினைத்த 2 பேரின் வாழ்க்கை.. ஒரு கட்டத்தில் ஏற்பட்ட கோபம், சந்தேகம், தகராறு என்று போய்.. கடைசியில் 2 பேரின் உயிரையும் பறித்திருக்கிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...!!மகாலட்சுமி காதலன்
அப்பார்ட்மெண்ட் காதல் ஜோடி
ஆண் நண்பருடன் டான்ஸ்
தேங்காய் வெட்டும் கத்தி