ஹைதராபாத்தில் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி கொலை.. வேலைக்கார பெண்ணின் பின்னால் இருந்து பெரிய கும்பல்

  • ஹைதராபாத்: 2026 மே மாதம் ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரே வினய் ரஞ்சனின் மனைவி தனுஜா ரஞ்சன் கொலை தொடர்பாக, வீட்டுப் பணிப்பெண் தர்மா திருவா என்ற கல்பனா உள்ளிட்ட நான்கு பேரை ஹைதராபாத் போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர். வீட்டின் அன்றாடம் என்ன நடக்கும், வீட்டின் உரிமையாளர் வெளியூர் சென்றிருப்பது, வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்கள் குறித்த தகவல்கள் ஆகியவற்றை வீட்டில் வேலை செய்து வந்த கல்பனா மூலம் நன்கு அறிந்து கொண்ட நேபாள கும்பல், கொள்ளையடிக்கத் திட்டமிட்டது. அதற்காக இறுதியில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியின் மனைவியை கொன்றுள்ளனர்.

    Advertisement

    தெலுங்கானா மாநிலத்தையே உலுக்கிய இந்த கொலைக்கு பின்னணியில் இருந்தவர்கள், ஹைதராபாத்தின் நம்பள்ளி ரயில் நிலையம் அருகே அக்டோபர் 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். பல மாநிலங்களிலும் இந்தியா - நேபாள எல்லைப் பகுதிகளிலும் பல மாதங்களாக நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர்.

    Advertisement

    கொலை எப்போது நடந்தது

    கடந்த 2026, மே 8-ஆம் தேதி அதிகாலையில் ஹைதராபாத் நகரின் பிரசாசன் நகர் பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த நேபாள கும்பல், தனுஜாவை துணியால் முகத்தை அமுக்கி கொலை செய்தனர். அங்கிருந்து 225 கிராம் தங்க நகைகள் மற்றும் பிற விலை உயர்ந்த பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமிருந்து ரூ.51,130 ரொக்கப் பணம் மற்றும் பிற பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கொள்ளைத் திட்டம் உருவானது எப்படி?

    ஹைதராபாத் போலீசார் தெரிவித்த தகவல்களின்படி, நேபாளத்தைச் சேர்ந்த கல்பனா, உறவினர் ஒருவர் மூலம் 2025 ஜூன் மாதம் ஹைதராபாத்துக்கு வந்தார். பின்னர் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியின் வீட்டில் மாதம் சுமார் ரூ.20,000 சம்பளத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார். அங்கு வேலை செய்த காலத்தில், கல்பனாவிற்கு புனேவில் வசித்து வந்த விகாஸ் என்ற நேபாள நாட்டவருடன் காதல் இருந்துள்ளது.

    Advertisement

    கல்பானவிடம், வேலை செய்யும் வீட்டின் உரிமையாளர், வீட்டில் உள்ள சொத்துகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் குறித்த விவரங்களை விகாஸ் தொடர்ந்து கேட்டாராம்.இறுதியில், அந்த வீட்டில் கொள்ளையடித்தால் கிடைக்கும் பொருட்களில் ஒரு பங்கைத் தருவதாகக் கூறி, கல்பனாவிடம் விகாஸ் கொள்ளைத் திட்டத்தை முன்வைத்தாராம். 2026 ஏப்ரல் மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தனது தந்தையைப் பார்ப்பதற்காக கல்பனா புனே சென்றார். அப்போது கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மற்றவர்களுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

    மே 4-ஆம் தேதி அவரது முதலாளி பெங்களூருவுக்குச் சென்றபோது, அந்தத் தகவலை கல்பனா கொள்ளைக் கும்பலுக்குத் தெரிவித்துள்ளார். இதையடுத்து கணேஷ் பகதூர் ஷாஹி, ஷங்கர் சந்திர லாமா, சுனில் பரியார் ஆகியோர் மே 4-ஆம் தேதி கலம்போலியில் சந்தித்தனர். பின்னர் வாடகைக்கு எடுக்கப்பட்ட மாருதி எர்டிகா காரில் புனேவுக்குச் சென்றனர்.

    Advertisement

    அடுத்த நாள், கணேஷ் பி.கே. உள்ளிட்ட கூட்டாளிகளைச் சந்தித்துவிட்டு ஹைதராபாத் நோக்கிப் புறப்பட்டுள்ளனர். கும்பலைச் சேர்ந்த சிலர் காரிலும், மற்றவர்கள் பேருந்து அல்லது தனித்தனியான வழிகளிலும் பயணம் செய்துள்ளார்களாம். மே 7-ஆம் தேதி காலையில், கணேஷ் பி.கே. மற்றும் சுரேஷ் ஷாஹி ஆகியோர் கல்பான வேலை செய்த வீட்டின் அருகே அவரைச் சந்தித்தனர். அப்போது வீட்டைச் சுற்றிப் பார்த்து, உள்ளே நுழைவது எப்படி என்பது குறித்து கூடி பேசியுள்ளனர்.

    இரண்டு குழுக்களாகப் பிரிந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல்

    மே 7-ஆம் தேதி மாலை, மகாத்மா காந்தி பேருந்து நிலையப் பகுதியிலுள்ள ரவீந்திரா பார் அருகே கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடியுள்ளனர். சுஜன் ஷாஹி என்ற சுரேஷ் ஷாஹி வகுத்த திட்டத்தின்படி, அவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்தனர். முதல் குழு; கணேஷ் பி.கே., சுரேஷ் ஷாஹி, ஷங்கர் லாமா ஆகியோர் வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையடிக்கும் பணியில் ஈடுபடத் திட்டமிடப்பட்டது.

    Advertisement

    இரண்டாவது குழு: கணேஷ் பகதூர் ஷாஹி, சுனில் பரியார், நேத்ரா ஷாஹி ஆகியோர் நம்பள்ளி ரயில் நிலையம் அருகே தங்கி, மற்றவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடத் திட்டமிடப்பட்டதாம். மே 7-ஆம் தேதி நள்ளிரவு முதல் மே 8-ஆம் தேதி அதிகாலை வரையிலான நேரத்தில், கல்பனா வீட்டின் கதவைத் திறந்து மற்றவர்களை உள்ளே அனுமதித்துள்ளாராம், அப்போது தனுஜா கண்விழித்துள்ளார். இதையடுத்து, அவரைத் துணியால் வாயை மூடி, கட்டுப்படுத்தியதில் மூச்சுத்திணறி இறந்து போயிருக்கிறார்.

    பின்னர் வீட்டிலிருந்த அலமாரிகளை உடைத்து, தங்க நகைகள் மற்றும் பிற விலை உயர்ந்த பொருட்களைக் கொள்ளையடித்துள்ளனர். வீட்டின் பின்பக்க வாசல் வழியாக வெளியேறிய அவர்கள் நம்பள்ளி பகுதிக்குச் சென்று, அங்கு காத்திருந்த மற்றொரு குழுவினருடன் இணைந்துள்ளனர். அங்கிருந்து வாரங்கல் மாவட்டத்தின் காசிபேட் பகுதியை நோக்கிச் சென்ற கும்பல், பின்னர் ஆள் நடமாட்டம் குறைவான மலைப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு கொள்ளையடித்த பொருட்களை ஒன்பது சம பங்குகளாகப் பிரித்துக்கொண்டுள்ளனர். பின்னர் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்த அவர்கள், நேபாளத்தை நோக்கித் தப்பிச் சென்றுள்ளனர். கொள்ளையடித்த பொருட்களை வெவ்வேறு இடங்களில் விற்றுள்ளனர்.

    Advertisement

    குற்றவாளிகளைப் போலீசார் கண்டுபிடித்தது எப்படி?

    கொலைச் சம்பவம் தொடர்பாக ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் முதலில் அதிரடிப் படை மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. குற்றவாளிகள் சென்ற பாதைகள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டன.

    மேலும், செல்போன் அழைப்பு விவரங்கள் மற்றும் பிற தொழில்நுட்பத் தகவல்கள் மூலம் சந்தேக நபர்களின் பயண வழித்தடங்களையும் அவர்கள் தங்கியிருந்த இடங்களையும் கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    மே 19-ஆம் தேதி, தெலங்கானாவின் மூன்று காவல் ஆணையரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நேபாளத்தைச் சேர்ந்த கும்பல்களால் நடத்தப்படும் சொத்துக் குற்றங்களை விசாரிப்பதற்காகத் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் ஓர் ஆய்வாளர், இரண்டு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 16 காவலர்கள் இடம்பெற்றிருந்தனர். காவல் ஆணையரகத்தின் அதிரடிப் படையைச் சேர்ந்த துணைக் காவல் ஆணையர் வைபவ் ரகுநாத் கெய்க்வாட் மேற்பார்வையில் இந்த விசாரணை நடந்தது.

    ஹைதராபாத் மாநகர காவல்துறையின் தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர் ஜி.எஸ். டேனியல் சாந்தி குமார் இதற்கு தலைமை தாங்கினார். மே 22-ஆம் தேதி, அதிரடிப் படையினர் சுனில் பகதூர் அவுஜி என்ற சுனில் பரியார் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை வாங்கியதாகக் கூறப்படும் திலீப் பகதூர் மிஜார் என்ற சோனார் ஆகியோரைக் கைது செய்தார்கள். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில் 26 கிராம் அளவிலான தங்கம் மீட்கப்பட்டன. தொடர்ந்து பெங்களூரு, மும்பை, புனே, சூரத், பாட்னா, டெல்லி, லக்னோ மற்றும் உத்தராகண்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தப்பட்டது. இந்திய - நேபாள எல்லைப் பகுதிகளிலும் தனிப்படையினர் கள ஆய்வு மேற்கொண்டனர். தொலைதூர மலைப்பகுதிகளில் ஐந்து மாதங்களுக்கும் மேலாகத் தகவல்களைச் சேகரித்தனர்.

    உள்ளூர் தகவல் அளிப்பவர்கள் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மறைவிடங்கள், பயண வழித்தடங்கள், வேலை செய்யும் இடங்கள் மற்றும் தொடர்புகள் குறித்த தகவல்களைப் போலீசார் சேகரித்தனர். இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 26-ஆம் தேதி நம்பள்ளி ரயில் நிலையம் அருகே நான்கு பேரைத் தனிப்படையினரும் ஜூப்ளி ஹில்ஸ் போலீசாரும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட நான்கு பேர் யார்?

    தர்மா திருவா என்ற கல்பனா, வயது 2

    நேபாளத்தின் சுர்கெட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கொலை செய்யப்பட்ட தனுஜா ரஞ்சனின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்தவர்.

    2. கணேஷ் பி.கே. என்ற கணேஷ் விஸ்வகர்மா என்ற தினேஷ் தாபா, வயது 31

    கூலித் தொழிலாளி. மகாராஷ்டிர மாநிலம் புனேவின் ஹடாப்சர் பகுதி அவரது இந்திய முகவரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    3. சந்திர பகதூர் தமாங் என்ற ரஞ்சீத் தாபா என்ற ஷங்கர் சந்திர லாமா என்ற காஞ்சா, வயது 44

    சமையல்காரராகப் பணியாற்றியவர். ஹரியானா மாநிலம் குருகிராம் அவரது இந்திய முகவரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    4. கணேஷ் பகதூர் ஷாஹி, வயது 37

    காவலாளியாகப் பணியாற்றியவர். புனேவின் தேஹு சாலைப் பகுதி அவரது இந்திய முகவரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் மேலும் இரண்டு பேர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    பெங்களூரு, டெல்லியிலும் இதேபோன்று கொள்ளையடிக்க திட்டம்?

    கைது செய்யப்பட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள், வீட்டுப் பணியாளர்களைப் பயன்படுத்தி வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளையடிக்கும் இதேபோன்ற குற்றங்களை பெங்களூரு மற்றும் டெல்லியிலும் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    English Summary

    Murder of an IPS officer’s wife in Hyderabad: How did the gang from Nepal plan it, and how did the police uncover it?