“பாய் ஃபிரண்ட் வாடகைக்கு..” இளம்பெண்களை குறிவைத்து நடக்கும் புதிய சைபர் மோசடி! உஷார்

  • ஹைதராபாத்: 'பாய் பிரண்ட் வாடகைக்கு' என்ற பெயரில் மிக பெரிய மோசடி நடந்து வருகிறதாம். இளம் பெண்களை குறிவைத்து நடக்கும் இந்த மோசடியில் பெரும் தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது. மேலும், இதனால் பெண்களுக்கு தொல்லை, பிளாக்மெயில் போன்ற ஆபத்துகளும் ஏற்படலாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

    Advertisement

    இந்த காலத்தில் தொழில்நுட்பம் நமக்கு எந்தளவுக்கு பயன் தருகிறதோ.. அதே அளவுக்கு அது ஆபத்தானதாகவும் மாறுகிறது. தொழில்நுட்பத்தை வைத்து பல்வேறு மோசடிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அப்படியொரு புதிய வகையான மோசடி தான் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

    Advertisement

    மோசடி

    சமூக வலைத்தளங்களில் 'பாய் பிரண்ட் வாடகைக்கு' என்ற பெயரில் நடைபெறும் ஆன்லைன் மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கு ஹைதராபாத் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு, பெண்களை ஏமாற்றி பணம் மற்றும் பிரைவேட் தகவல்களை பறிக்கும் முயற்சிகள் நடைபெறுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஹைதராபாத் நகர காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனார், இதுதொடர்பான எச்சரிக்கையை தனது சமூக வலைத்தள பக்கத்தில் விடுத்துள்ளார். 'Rent Boyfriend - Your Personal Companion' என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் விளம்பரங்களை வெளியிட்டு சைபர் மோசடி நடப்பதாக அவர் கூறியுள்ளார்.

    Advertisement

    ஏமாற்றும் விளம்பரம்

    இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டெலிகாரம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமான இளைஞர்களின் போட்டோக்களுடன் இந்த விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. சில போட்டோக்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டவை.. இன்னும் சில போட்டோக்கள் இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்யப்பட்டவை.. இதை வைத்தே மோசடிகளை செய்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    'காபி டேட்', 'மூவி கம்பெனியன்', 'ஷாப்பிங் கம்பெனியன்' உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படும் என்றும் அதற்கு சிறப்பு சலுகைகள் இருப்பதாகவும் விளம்பரங்களில் குறிப்பிடப்படுகிறது. இது போன்ற விளம்பரங்களைப் பார்த்து பெண்கள் தொடர்பு கொள்ளும்போது, மோசடி கும்பல் முதலில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பேசுவார்களாம். பின்னர் சர்வீஸை புக் செய்வதற்காக பதிவுக் கட்டணம், பாதுகாப்பு டெபாசிட் அல்லது முன்பணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்துமாறு கேட்கின்றனர்.

    Advertisement

    மோசடி

    இதற்காக க்யூஆர் கோட் அல்லது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலம் பணம் அனுப்புமாறு கூறுகின்றனர். பணம் கிடைத்ததும், மோசடி நபர்கள் தொடர்பை துண்டித்து, பாதிக்கப்பட்டவர்களின் கால்கள் மற்றும் மெசேஜ்களுக்கு பதிலளிக்காமல் அவர்களை பிளாக் செய்து விடுகின்றனர். இது போன்ற மோசடி மூலம் பணத்தை இழப்பது மட்டுமின்றி, பல்வேறு ஆபத்துகளும் ஏற்படலாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

    பிளாக் மெயில்

    தொலைப்பேசி எண், போட்டோ, முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை தெரியாத நபர்களிடம் பகிர்ந்தால், பின்னர் அவற்றை பயன்படுத்தி பிளாக்மெயில், ஆன்லைன் தொல்லை அல்லது மிரட்டல் போன்றவற்றில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களில் அறிமுகமாகும் நபர்களை நேரில் சந்திக்க செல்வதும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

    Advertisement

    பெண்கள் மட்டுமின்றி, பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் சமூக வலைத்தளங்களில் என்ன பார்க்கிறார்கள் என்பது குறித்து கவனமாக இருக்க வேண்டும் என காவல் ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்துள்ளார். குழந்தைகள் சமூக வலைத்தளங்களில் என்ன மாதிரியான பதிவுகளை பார்க்கிறார்கள், யாருடன் பேசுகிறார்கள், யாரை நேரில் சந்திக்கிறார்கள் என்பது குறித்து பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

    ஏமாற வேண்டாம்

    எனவே சமூக வலைத்தளங்களில் தெரியாத நபர்களை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் இதுபோல சர்வீஸ் என சொல்வோருக்கு பணம் கொடுக்க வேண்டாம் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். இது போன்ற சைபர் மோசடியில் யாரேனும் சிக்கினால் உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலமாகவும் புகாரை பதிவு செய்யலாம்.

    English Summary

    Hyderabad Police have warned women and young girls about the viral boyfriend for rent scam on social media(ஹைதராப்த்தில் அரங்கேறும் புதிய வகை மோசடி): Hyderabad latest news in tamil.