தலைமை நீதிபதி முன்பு தாலியை கழற்றிய பெண்.. எங்களால் முடியல.. உச்ச நீதிமன்றத்தில் ஒரு நொடி பரபரப்பு

  • ஹைதராபாத்: உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஹைதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது வழக்கு 15 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதாக தலைமை நீதிபதியிடம் முறையிட்டார். வழக்கு இத்தனை காலம் நிலுவையில் இருப்பதால் தனது குடும்பம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் சொல்லிய அந்த பெண், வழக்கை சீக்கிரம் விசாரிக்க வேண்டும் என்று தாலியை கழற்றி முறையிட்ட சம்பவம் பேசுபொருளானது..

    Advertisement

    நமது நாட்டில் நீண்ட காலமாக வழக்குகள் நிலுவையில் இருப்பது பெரிய பிரச்சனையாகவே உள்ளது. தாமதிக்கப்பட்ட நீதியும் மறுக்கப்பட்ட நீதி தான் என்பது இங்கு கிட்டத்தட்ட அனைவரும் ஒப்புக்கொள்ளும் விஷயமாகவே இருக்கிறது. இதுபோல வழக்குகள் தாமதம் ஆவதால் பலரும் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். இந்தச் சூழலில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

    Advertisement

    முறையிட்ட பெண்

    நேற்றைய தினம் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு வழக்குகளை விசாரித்து கொண்டு இருந்தது. அப்போது வழக்கறிஞர் இல்லாமல் நேரடியாக ஆஜரான தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர், "நான் ஹைதராபாத்தில் இருந்து வருகிறேன். கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் வாழ்க்கையே வாழ முடியாமல் தவிக்கிறோம். எங்கள் குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்" என்று நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் சிவில் வழக்கு குறித்து முறையிட்டார்.

    அப்போது அதை கேட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கு அடுத்த திங்கட்கிழமை சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று தெரிவித்தார். மேலும், வழக்கு விசாரணைக்கு நேரில் வந்து காசு செலவழிக்க வேண்டாம் எனச் சொன்ன தலைமை நீதிபதி, ஆன்லைன் மூலமாக ஆஜராகலாம் என்றும் தெரிவித்தார். மேலும், விசாரணையில் அவர் தரப்பு வாதத்தை கேட்க தேவையான அளவு நேரம் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

    Advertisement

    தாலியை கழற்றி வேதனை

    தொடர்ந்து அந்த பெண் தனது குடும்பத்தின் நிலையை தலைமை நீதிபதியிடம் விளக்கினார். அவர், "நீண்ட காலமாக வழக்கு நிலுவையில் இருப்பதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். குழந்தைகளுக்கு உணவு கூட வழங்க முடியவில்லை. அவர்களின் கல்விச் செலவையும் ஏற்க முடியாத நிலை உள்ளது" என்று கண்ணீருடன் கூறினார். அப்போது தனது கழுத்தில் அணிந்திருந்த தாலியை அகற்றிய அந்த பெண், "எங்களிடம் இதை தவிர வேறு எதுவுமே இல்லை.. அந்தளவுக்கு கஷ்டத்தில் இருக்கிறோம்" குடும்பம் சந்திக்கும் துயரத்தை பற்றி கண்ணீர்விட்டார். அவர் திடீரென தனது தாலியை அகற்றியதால் நீதிமன்றத்தில் சில நிமிடங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    உறுதியளித்த தலைமை நீதிபதி

    அப்போதும் கோபப்படாத தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் வழக்குப் பட்டியலில் முதல் வழக்காக விசாரிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். அதன் பிறகே அந்த பெண் சற்றே ஆறுதல் அடைந்தார். இது தொடர்பான வீடியோ, போட்டோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதேநேரம் 15 ஆண்டுகளாக நடக்கும் அந்த வழக்கு என்ன.. அதன் பின்னணி குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    புதிய திட்டம்

    சமீபத்தில் தான் உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் பழைய வழக்குகளை விரைந்து விசாரிக்கும் திட்டம் உச்ச நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிக்க தலைமை நீதிபதி சூர்யகாந்த் நான்கு சிறப்பு அமர்வுகளை அமைத்திருந்தார். சுமார் 800 பழைய வழக்குகளை முன்னுரிமை அடிப்படையில் விசாரித்து முடிப்பதே இதன் நோக்கமாகும்.

    Advertisement

    15 ஆண்டுகளாக நீதிக்காக காத்திருப்பதாக கூறிய ஹைதராபாத் பெண்ணின் உணர்ச்சிபூர்வ கோரிக்கை, சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

    English Summary

    Hyderabad woman made an emotional plea before the Supreme Court(உச்ச நீதிமன்றத்தில் தாலியை கழற்றி முறையிட்ட ஹைதரபாத் பெண்): Woman removed her mangalsutra in court as she urged Chief Justice Surya Kant for urgent relief.