சீனாவில் இருந்தபடி ஹைதராபாத்தில் ஆபரேஷன்! 3,000 கிமீ தொலைவில் ரோபோவை கண்ட்ரோல் செய்த இந்திய டாக்டர்

  • ஹைதராபாத்: இந்திய மருத்துவ உலகின் வரலாற்றுச் சாதனையாகவும், சர்வதேச தொழில்நுட்பப் புரட்சியாகவும் பார்க்கப்படும் ஒரு மிரட்டலான 'ரோபோடிக் அறுவை சிகிச்சை' வெற்றிகரமாக அரங்கேறியுள்ளது. சீனாவில் இருந்து கொண்டு, சுமார் 3,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹைதராபாத் நோயாளிக்குச் சிறுநீரகவியல் மருத்துவர் துல்லியமாக அறுவை சிகிச்சையைச் செய்து, உலக நாடுகளை வியக்க வைத்திருக்கிறார்.

    Advertisement

    இந்த நவீன உலகில் பல முக்கியமான மாற்றங்கள் நடந்து வருகிறது. இதெல்லாம் சாத்தியம் தானா என நாம் ஒரு காலத்தில் கேட்டது கூட இப்போது அசால்டாக நடந்து வருகிறது. அப்படியொரு அதிசயம் தான் இப்போது நடந்துள்ளது. அதாவது சீனாவின் வுஹானில் உள்ள டோங்ஜி மருத்துவமனையில் இருந்தபடி, ஹைதராபாத்தில் ஆபரேஷன் செய்துள்ளனர்.

    Advertisement

    அறுவை சிகிச்சை

    இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் சையத் முகமது கவுஸ் என்பவர் சீனாவில் இருந்தபடி ஹைதராபாத்தில் உள்ள ஒரு நோயாளிக்குச் சிறுநீர்க்குழாய் மறு இணைப்பு அறுவை சிகிச்சையைச் செய்துள்ளார். ரோபோக்கள் உதவியுடன் சுமார் 3000 கிமீ தொலைவில் இருந்தாலும் துல்லியமாக இந்த அறுவை சிகிச்சையைச் செய்துள்ளார். வெறும் 90 நிமிடங்களில் இந்த ஆபரேஷன் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த அசாத்தியச் சாதனையை இந்தியாவில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யு ஜிங் தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.

    சீனாவின் 'சீனா டெய்லி' ஊடகமும் இது தொடர்பான செய்தியைப் பதிவிட்டுள்ளது. இந்த ஹைடெக் அறுவை சிகிச்சை பக்கா திட்டமிடலுடன் துல்லியமாக நடந்துள்ளது. ஆபரேஷனுக்கு முன்பாக வுஹான் மற்றும் ஹைதராபாத் மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஒருங்கிணைந்து, நோயாளியின் மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்து, ரோபோடிக் கரங்களின் நகர்வுப் பாதையைத் துல்லியமாகத் திட்டமிட்டனர்.

    Advertisement

    3டி கேமரா

    ஹைதராபாத்தில் இருந்த மருத்துவக் குழுவினர் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்து, அதிநவீன 3D கேமராக்கள் மற்றும் நுட்பமான அறுவை சிகிச்சை கருவிகள் கொண்ட ரோபோடிக் அமைப்பைத் தயார் நிலையில் வைத்தனர். வுஹான் டோங்ஜி மருத்துவமனையின் கன்சோலில் அமர்ந்து கொண்ட டாக்டர் கவுஸ், ஹைதராபாத் ஆபரேஷன் தியேட்டரின் நேரடி 3D காட்சிகளைப் பார்த்தவாறே ரோபோடிக் கைகளை கட்டுப்படுத்தினார். அதிவேக 5G தொழில்நுட்பத்தின் உதவியோடு, வெறும் 200 மில்லிசெகண்டிற்குள் அவரது கைகளின் அசைவுகளை அப்படியே பிரதிபலித்து, ஹைதராபாத் ரோபோ வேலை செய்தது.

    அவசரக்காலம்

    ஏதேனும் அவசரக்காலம் ஏற்பட்டால் உடனடியாகக் களமிறங்க ஹைதராபாத் மருத்துவர்களும் ஆபரேஷன் தியேட்டரிலேயே தயார் நிலையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச ஹெபடோ-பான்க்ரியாட்டோ-பிலியரி அசோசியேஷனின் 10வது மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த ரிமோட் ஆபரேஷன் உலகிற்கு நேரலையாகச் செய்து காட்டப்பட்டது.

    Advertisement

    சர்வதேச சாதனை

    மாநாட்டில் செய்து காட்டப்பட்ட 26 அறுவை சிகிச்சைகளில், 5 மட்டுமே சர்வதேச அளவிலான நேரடி ரிமோட் இணைப்புகள் மூலம் நடத்தப்பட்டன. இந்தியா, பிரேசில், கிரீஸ், ஜார்ஜியா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் இதில் பங்கேற்றனர். இது தொடர்பாக டோங்ஜி மருத்துவமனையின் அறுவை சிகிச்சைப் பிரிவு இயக்குநர் சென் சியோபிங் கூறுகையில், "செயற்கை நுண்ணறிவு, 5G மற்றும் 6G தகவல் தொடர்பு மற்றும் ரோபோ தொழில்நுட்பங்கள் தற்போதைய மருத்துவத் துறையை அடுத்தகட்டப் புரட்சியை நோக்கி மிக வேகமாக அழைத்துச் செல்கின்றன" என்றார்.

    Advertisement

    "மருத்துவர் அருகில் இருந்தால்தான் ஆபரேஷன் நடக்கும்" என்ற விதியை உடைத்துக் காட்டும் வகையில் இந்த 5G ரோபோடிக்ஸ் ஆபரேஷன் நடந்துள்ளது. சுமார் 4000 கிமீ தொலைவில் இருந்தாலும் துல்லியமாக இந்த ஆபரேஷன் நடந்துள்ளது. வரும் காலத்தில் மருத்துவம் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே இது அமைகிறது.!

    English Summary

    Dr. Syed Mohammed Ghouse successfully performed a 90-minute remote urological robotic surgery on a patient in Hyderabad while operating from China(சீனாவில் இருந்தபடி இந்தியாவில் மருத்துவ சாதனை): India China Robotic Surgery latest news in tamil.