லேடி தாசில்தார் வீட்டில் 50 கோடி சொத்து.. கிலியில் ஜுட் விட்ட சக தாசில்தார்கள்.. ஹைதராபாத் அதிர்ச்சி

  • ஹைதராபாத்: ஹைதராபாத் அருகே லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் ஆன பெண் தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. இப்போதுவரை சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள கணக்கில் வராத சொத்துக்கள் மற்றும் சொகுசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தற்போது ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் பொதுமக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. என்னதான் நடக்கிறது ஹைதராபாத்தில்? யாரிந்த பெண் தாசில்தார்?தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஷாமிர்பேட்டை பகுதியில் தாசில்தாராகப் பணியாற்றி வந்தவர் தும்மகோமா சுசரிதா. இவர் மீது கடந்த மாதம் நில விவகாரம் தொடர்பாக லஞ்சப் புகார் ஒன்று எழுந்தது.

    Advertisement

    பெண் தாசில்தார்: அதாவது, 30 ஏக்கர் விவசாய நிலத்தை, விவசாயம் அல்லாத நிலமாக (NALA) மாற்றி தருவதற்காக நிலத்தின் உரிமையாளரிடமிருந்து தாசில்தார் சுசரிதா 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டாராம்.. லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நில உரிமையாளர், இதுகுறித்து தெலுங்கானா மாநில லஞ்ச ஒழிப்புத் துறை (ACB) அதிகாரிகளிடம் முறைப்படி புகார் தந்துவிட்டார்..

    Advertisement

    இந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், தாசில்தாரை கையும் களவுமாக பிடிக்க திட்டம் தீட்டினார்கள். அதன்படி, முதற்கட்டமாக 2 லட்சம் ரூபாய் அட்வான்ஸாக நில உரிமையாளர் தாசில்தார் சுசரிதாவிடம் தந்தபோது, அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பொதுவெளியில் தாசில்தார் லஞ்சம் வாங்கி அசிங்கப்பட்டதுமே, அவர் உடனடியாகப் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டார்.

    நில உரிமையாளர் தந்த புகார்: கைது செய்யப்பட்ட பெண் தாசில்தார் சுசரிதாவிடம் அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போதுதான், ஒரு சாதாரண அரசு அதிகாரியான இவருக்கு, அரசு சம்பளத்தைத் தாண்டி கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் இருப்பது விசாரணையில் அம்பலமானது.

    Advertisement

    இதையடுத்து வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அவர் மீது இன்னொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிறகு சுசரிதாவின் வீடு, அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள், பண்ணை வீடுகள், தோட்டங்கள் என அவர் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையை ஆரம்பித்தனர்.

    அப்பார்ட்மென்ட், சொகுசு கார்கள்: இதில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்களை பார்த்து அதிகாரிகளுக்கு தலை சுற்றிவிட்டதாம். ஏனென்றால் ஹைதராபாத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கியப் பகுதிகளில் மட்டும் 5.05 கோடி ரூபாய் அரசு வழிகாட்டி மதிப்பில் 3 அடுக்குமாடி குடியிருப்புகளும், 2 சொகுசு வீட்டு மனைகளும் வாங்கப்பட்டதற்கான அசல் ஆவணங்கள் சிக்கின.இதனை தவிர,

    Advertisement

    சித்திபேட்டை மாவட்டத்தில் 2.17 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலமும் கண்டறியப்பட்டுள்ளது. இப்போதைக்கு மார்க்கெட் நிலவரப்படி இந்த அசையா சொத்துக்களின் மதிப்பு 20 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று அதிகாரிகள் கணித்துள்ளனர். அசையா சொத்துக்கள் மட்டுமல்ல, ஆடம்பர வாழ்க்கைக்குப் பயன்படுத்தப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள பொருட்களும் இந்தச் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    தாசில்தார் சஸ்பெண்ட்: சுசரிதாவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.12 லட்சம் ரொக்கப் பணம், வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.38 லட்சம் வைப்புத்தொகை, 2 ஆடம்பர கார்கள் மற்றும் ரூ.1.20 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆவணங்களின்படி சுசரிதாவின் சொத்து மதிப்பு ரூ.5,05,52,465 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    இருந்தாலும் இது பதிவு விலையின் அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்பட்டதால், தற்போதைய நிலவரப்படி இதன் உண்மையான சந்தை மதிப்பு ரூ.50 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆனால், லஞ்சம் மற்றும் முறைகேடான வழிகளில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு, ஹைதராபாத்தின் பிரதான பகுதிகளில் சுசரிதா இந்தச் சொத்துக்களை வாங்கிப் போட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சொத்து ஆவணங்கள் என்னென்ன: இப்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள சொத்து ஆவணங்களின் உண்மையான சந்தை மதிப்பைத் துல்லியமாகக் கணக்கிடும் பணியில் வருவாய்த் துறையினரும் லஞ்ச ஒழிப்புத் துறையினரும் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர, சுசரிதா தனது பெயரில் மட்டுமின்றி பினாமி பெயர்களிலும் வேறு எங்காவது சொத்துக்களை வாங்கிப் போட்டுள்ளாரா, அல்லது வேறு மாநிலங்களில் முதலீடு செய்துள்ளாரா என்பது குறித்தும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    Advertisement

    ஏற்கனவே லஞ்ச வழக்கில் சிக்கிய சுசரிதாவுக்கு, வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கும் சேர்ந்துள்ளதால் சட்டத்தின் பிடியில் வசமாக சிக்கி உள்ளார்.. அரசுப் பதவியை பெண் அதிகாரி, தவறாக பயன்படுத்தி, மக்களை ஏமாற்றி கோடி கோடியாக லஞ்சம் வாங்கிய இந்த சம்பவம் தெலுங்கானாவில் மிகுந்த பரபரப்பை தந்து வருகிறது.

    சிதறிய ஓடும் தாசில்தார்கள்: இதனிடையே, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் சுசரிதா சிக்கி விட்ட தகவல் மாவட்டம் முழுவதும் எதிரொலித்து, மாவட்ட வருவாய் அதிகாரிகளின் மத்தியில் பெரும் அதிர்வலையை உண்டுபண்ணி விட்டது. ஏற்கனவே பல தாசில்தார்கள் லீவில் சென்றுள்ள நிலையில், மேலுர் சிலர் அலுவலகங்களுக்கு வருவதை தவிர்க்கிறார்களாம்.. இதில் ஒரு தாசில்தாருக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்..!!

    English Summary

    A female Tahsildar from Shamirpet, near Hyderabad, was arrested for demanding a 30 lakh rupee bribe. Subsequent Anti-Corruption Bureau (ACB) raids on her properties uncovered over 50 crore rupees in disproportionate assets, including luxury homes, gold, diamonds, and vehicles, triggering a major controversy across the state administration.