ஹைதராபாத்: காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், அந்த திருமணத்தைத் தடுக்க பெண்ணின் போட்டோவுடன் கூடிய அவதூறு போஸ்டர்கள் ஒட்டிய சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக குற்றவாளி மற்றும் அவருக்கு உதவியவர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த காலத்தில் காதலிக்கும் இளைஞர்கள், அது தோல்வியில் முடியும் போது ஏற்கும் பக்குவத்திற்கு வந்துவிட்டனர். ஆனாலும், உருகி உருகி காதலிக்கும் சில இளைஞர்கள் செய்யும் செயல்கள் பெண்களின் கண்ணியத்தைப் பாதிக்கும் வகையில் இருக்கிறது. அப்படியொரு சம்பவம் தான் தெலுங்கானாவில் நடந்துள்ளது. இது தொடர்பாக நாம் பார்க்கலாம்.
தெலுங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டத்தை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர் 29 வயதான டோட்லா வெங்கடேஷ்.. இவர் என்சன்பள்ளி கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த பெண்ணின் குடும்பத்தினர் வேறு ஒரு அந்த பெண்ணுக்கு இளைஞருடன் திருமணத்தை நிச்சயித்தனர். இதனால் மனமுடைந்த வெங்கடேஷ், "அந்த பெண் தனக்கு கிடைக்காவிட்டால் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது" என்ற மோசமான முடிவை எடுத்திருக்கிறார். இதற்காக அவர் திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என திட்டமிட்டிருந்திருக்கிறார். அதன்படி பெண்ணின் போட்டோவை வைத்து சில அவதூறான போஸ்டர்களை ரெடி செய்துள்ளார். தனது நண்பர்களின் உதவியுடன் போஸ்டர்களை அச்சடித்து, ஜூலை 7ஆம் தேதி இரவு தங்கலப்பள்ளி மற்றும் என்சன்பள்ளி கிராமங்களின் பல்வேறு இடங்களில் இரவோடு இரவாக ஒட்டியுள்ளார். அவை கிராமம் என்பதால் இந்த போஸ்டர்கள் மக்களிடையே வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த உள்ளூர் போலீசார், விசாரணை நடத்தினர். பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் பெண்களை அவமதித்தல், மிரட்டல், அவதூறு மற்றும் கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை அடையாளம் கண்டனர். இதையடுத்து வெங்கடேஷுடன் சேர்ந்து மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையின்போது குற்றவாளிகள் தங்களது செய்த தவறை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த குற்றச்செயலில் பயன்படுத்தப்பட்ட செல்போன்கள், போஸ்டர்கள் ஒட்டப் பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து பேசிய அப்பகுதியைச் சேர்ந்த போலீசார் கூறுகையில், "பெண்களுக்கு எதிராக அவதூறு தகவல்களை பகிர்வது சட்டப்படி கடுமையான குற்றம். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அச்சக உரிமையாளர்களும் எல்லாவற்றையும் அச்சிட்டு கொடுத்துவிடக்கூடாது. அதில் என்ன இருக்கிறது என்பதைப் படித்து பார்த்து அச்சிட வேண்டும்" என்றார். பொதுவாகக் காதலில் முறிவு ஏற்பட்டால், அதை அங்கேயே விட்டுவிட்டு வேண்டும். அதை விட்டுவிட்டு பெண்ணை பாதிக்கும் வகையிலும் அவரது கண்ணியத்தைக் குலைக்கும் வகையிலும் இதுபோல செய்வது கேவலமான ஒரு செயல்!காதல்
போஸ்டர்
விசாரணை
கடும் நடவடிக்கை