ஹைதராபாத்: "அம்மா, என்னை இங்கிருந்து கூட்டிட்டு போங்க... எனக்குப் பயமாக இருக்கு!" என்று தெலுங்கானா மாநிலத்தில் உள்ள குழந்தைகள் நல மையத்தில் மூன்று வயது சிறுவன் ஒருவன், தன் பெற்றோருக்காக ஏங்கி அழுத வீடியோ வைரலானது. குழந்தையை முறைப்படி தத்தெடுக்கவில்லை என்று குழந்தையை அதிகாரிகள் பிரித்து சென்றதை பலரும் விமர்சித்தனர். இந்நிலையில் திரும்ப ஒப்படைக்குமாறு தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தெலங்கானாவின் ஜக்தியால் மாவட்ட நிர்வாகத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, மூன்று வயது சிறுவன் ருத்ரா மகேஷ், அவனை கடந்த மூன்று ஆண்டுகளாக வளர்த்த தம்பதியினருடன் திங்கள்கிழமை மாலை மீண்டும் இணைந்தான்.
முன்னதாக தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் உள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில், அந்தச் சிறுவன் அழுதுகொண்டிருக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானபோது, "அம்மா, என்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க... எனக்குப் பயமா இருக்கு!" என்று அவன் உருக்கமாகக் கெஞ்சிய காட்சி பலரையும் நெகிழ வைத்தது.
குழந்தை இல்லாத தம்பதியினரான கசரபு ஸ்ரீனிவாஸ் மற்றும் சரிதா ஆகியோர், அந்தச் சிறுவன் பிறந்த ஐந்தாவது நாளிலேயே அவனைத் தங்கள் பொறுப்பில் எடுத்து, கடந்த மூன்று ஆண்டுகளாகத் தங்கள் சொந்தக் குழந்தையைப் போல பாசம் காட்டி வளர்த்து வந்தனர். அவர்கள் இந்து முறைப்படிதான் குழந்தையைத் தத்தெடுத்ததாக அவர்கள் வாதிட்டனர். ஆனால், இந்தத் தத்தெடுப்பின் சட்டப்பூர்வத்தன்மை குறித்து யாரோ ஒருவர் அளித்த புகாரின் பேரில், அதிகாரிகள் கேள்வி எழுப்பினார்கள். இதையடுத்து அந்தச் சிறுவன் கரீம்நகரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு மாற்றப்பட்டான். அந்த வீடியோவில், அந்த சிறுவன் தனது வளர்ப்பு தாய் சரிதாவிடம் தன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கெஞ்சுவது பதிவாகியிருந்தது. அந்தத் தம்பதியினரும் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பதையும் அந்த வீடியோவில் காண முடிந்தது. இதையடுத்து குழந்தையைத் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி, அந்தத் தம்பதியினர் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். அவர்களது தகவல்படி, அக்டோபர் 16, அன்று பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவில, குழந்தையை மீண்டும் அந்தத் தம்பதியினரின் பொறுப்பில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நீதிமன்ற உத்தரவை அக்டோபர் 28 அன்று குழந்தைகள் நலக் குழுவிடம் சமர்ப்பித்த போதிலும், குழந்தையை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக அந்தத் தம்பதியினர் குற்றம் சாட்டினர். இந்தத் தாமதம் குறித்து அவர்கள் மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகியதுடன், கடந்த திங்கள்கிழமை அன்று தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நிகழ்ச்சியிலும் இது குறித்து மனு அளித்தனர். இந்தச் சம்பவம் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ள உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி குழந்தை ஒப்படைக்கப்படும் என்று ஜக்தியால் மாவட்ட ஆட்சியர் சத்ய பிரசாத் தெரிவித்தார். குழந்தைகள் நலக் குழுவின் அனுமதி மற்றும் நிர்வாக நடைமுறைகள் காரணமாகவே இந்தத் தாமதம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட மாவட்ட கலெக்டர், திங்கள்கிழமை இரவு அல்லது செவ்வாய்க்கிழமை காலைக்குள் இந்த நடைமுறை முழுமையடைந்துவிடும் என்று உறுதியளித்தார். இந்த உறுதிமொழியைத் தொடர்ந்து, நவம்பர் 2-ஆம் தேதியான திங்கட்கிழமை மாலையில், அந்தச் சிறுவன் மீண்டும் அத்தம்பதியினருடன் இணைந்தான். பல வாரங்களாக நீடித்த கவலையும் பிரிவும் முடிவுக்கு வந்தது. குழந்தையை பிரிந்த ஸ்ரீனிவாஸுக்கும் சரிதாவுக்கும் இந்த மறுஇணைப்பு பெரும் நிம்மதியை அளித்தது. சிறுவன் ருத்ரா மகேஷைப் பொறுத்தவரை, இது தான் ஏங்கிக் கொண்டிருந்த, தனக்கு நன்கு பரிச்சயமான அந்த அரவணைப்பிற்குத் திரும்பி உள்ளார்.தமிழ்நாடு முழுவதும் கொத்துக் கொத்தாக டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட்.. வெளியான லிஸ்ட்
பரனூர், ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடிகளில் இனி இவர்களுக்கு கட்டணமில்லை.. மத்திய அரசு திட்டம்