தலைமை ஆசிரியை வீட்டில் நள்ளிரவில் நுழைந்த 2 மாணவர்கள்! நடக்கக்கூடாத சம்பவம்.. ஹைதராபாத்தில் அதிர்ச்சி

  • ஹைதராபாத்: தெலங்கானாவில் தலைமை ஆசிரியை வீட்டில் நள்ளிரவில் நுழைந்த மாணவர்கள் இருவர், அவரை கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வழக்கில் ஆசிரியை பேசிய கடைசி வார்த்தையை வைத்து போலீசார் குற்றவாளிகளை கைது செய்திருக்கின்றனர்.

    Advertisement

    தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. கொண்டமல்லேப்பள்ளி பகுதியில் உள்ள நாகார்ஜுனா பப்ளிக் பள்ளியின் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ரூபா ரெட்டி.

    Advertisement

    கடைசி வார்த்தை

    இவர் கடந்த ஆக.11ம் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மொத்தம் 27 கத்தி குத்துகள். ரத்த வெள்ளத்தில் சடலம் மீட்கப்பட்டிருக்கிறது. கொலையாளி யார்? நோக்கம் என்ன? என்பதை கண்டுபிடிக்க 5 தனிப்படைகளை அமைத்தது போலீஸ். கொலை நடந்த தினத்தின் ரூபாவின் கணவர் வெளியூர் சென்றிருக்கிறார். வீட்டில் யாரும் இல்லை. இந்த நேரத்தில்தான் கொலை சம்பவம் நடந்திருக்கிறது. கொலை குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். ஆனால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போதுதான் ரூபா, கடைசியாக யாருடன் போனில் பேசினார் என்பது குறித்து ஆய்வு செய்ய தொடங்கினர்.

    Advertisement

    போலீஸ் விசாரணை

    கடைசியாக தனது அத்தையுடன் ரூபா பேசியிருக்கிறார். அவரது செல்போன் இணைப்பு துண்டிக்கப்படுதற்கு முன்னர் ரூபா 'பாபு' என்று கூறியிருக்கிறார். தெலுங்கில் அன்பானவர்களை அழைக்க பாபு என்கிற வார்த்தை பயன்படுத்தப்படுவதுண்டு. நம்மூரில் தம்பி என்று சொல்கிறோமே.. அதுபோல தெலுங்கில் பாபு என்று சொல்வார்கள். ரூபா தனது மாணவர்களை வழக்கமாக பாபு என்றுதான் அழைப்பார். அப்படியெனில், மாணவர்கள்தான் இந்த கொலையை செய்தார்களா? என்கிற கோணத்தில் விசாரணையை தொடங்கியது போலீஸ்.

    சிக்கிய மாணவர்கள்

    சம்பவம் நடந்ததிலிருந்து எத்தனை மாணவர்கள் பள்ளிக்கு லீவு போட்டிருக்கிறார்கள் என்கிற லிஸ்ட் எடுக்கப்பட்டது. இதில் மாணவர்கள் லீவு போட்டதற்கான காரணங்கள் விசாரிக்கப்பட்டன. அதில் இரண்டு மாணவர்கள் மட்டும், மற்ற மாணவர்களுக்கு பார்டி வைத்திருக்கின்றனர். வழக்கமாக இந்த மாணவர்களிடம் ரூ.500 பணம் இருப்பதே பெரிய விஷயம். பார்டி வைக்கும் அளவுக்கு ஏது இவ்வளவு பணம் என்று.. இரண்டு மாணவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    Advertisement

    பணத்துக்காக கொலை

    விசாரணையில் அந்த 2 மாணவர்கள்தான் பணத்திற்காக தலைமை ஆசிரியையை கொலை செய்திருப்பது உறுதியானது. பள்ளியின் அட்மிஷன் நேரம் இது. எனவே நிறைய பணம் இருக்கும் என்று கணக்கு போட்டு.. தலைமை ஆசிரியரின் வீட்டிற்குள் நுழைந்திருக்கின்றனர். ஆசிரியை ரூபாவை கொலை செய்துவிட்டு.. அங்கிருந்து ரூ.1.51 லட்சம் தொகை மற்றும் ஒரு ஐபோனை மாணவர்கள் எடுத்து சென்றிருக்கின்றனர்.

    முன் விரோதம்

    மாணவர்களிடமிருந்து மீட்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் ரத்தக்கறை படிந்திருக்கிறது. சோதனையில் அந்த ரத்தம் ஆசிரியை ரூபாவினுடையது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுதான் அவர்களை காட்டி கொடுத்திருக்கிறது.

    பிடிபட்ட மாணவர்களில் ஒருவர் ஏற்கெனவே விடுதியில் தங்கி படித்தி வந்திருந்தார். அப்போது அவர் செல்போனை பயன்படுத்தியிருந்தார். இதை கண்டித்த ரூபா.. அவரை பள்ளி விடுதியிருந்து நீக்கியிருந்தார். இந்த ஆத்திரம் காரணமாகத்தான் மாணவர்கள் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். நல்கொண்டா மாவட்ட எஸ்பி சரத் சந்திர பவார் தலைமையிலான போலீசார் மாணவர்களை கைது செய்து சீர்திருத்த பள்ளியில் அடைத்திருக்கின்றனர்.

    English Summary

    Students: The murder of a headmistress in Telangana by two students who broke into her home at midnight has caused shock. Police arrested the culprits based on the last words spoken by the teacher.