அது மட்டன் இல்லை, மாட்டுக்கறி.! ஏமாற்றி விற்ற இருவர் அதிரடி கைது.. சுமார் 50 கிலோ பறிமுதல்!

  • ஹைதராபாத்: மட்டன் விலை அதிகம் என்பதால் ஓரிரு இடங்களில் மாட்டுக்கறியை மட்டன் எனச் சொல்லி விற்கும் நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. மட்டன் என்ற பெயரில் மாட்டிறைச்சியை விற்றதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

    Advertisement

    ஹைதராபாத் என்றால் பலருக்கும் நினைவுக்கு வருவது அங்குக் கிடைக்கும் பிரியாணி தான். ஒவ்வொரு ஏரியாவுக்கும் குறைந்தது 2, 3 பேமஸ் பிரியாணி கடைகள் இருக்கும். எல்லாவற்றிலும் கூட்டமும் கூட அலை மோதும். இதற்கிடையே அங்கு ஹோட்டல்களுக்கு ஆட்டிறைச்சி (மட்டன்) என்ற பெயரில் மாட்டிறைச்சியை சப்ளை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Advertisement

    மாட்டிறைச்சி

    ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு இதுபோல மாட்டிறைச்சியை விநியோகம் செய்த வழக்கில், இரண்டு பேரை ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் நடத்திய அதிரடி ரெய்டு நடவடிக்கையின் போது சுமார் 50 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக போலீசார் கூறுகையில், ஹைதராபாத் உணவு கலப்பட கண்காணிப்பு பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர் மற்றும் ஹபீப் நகர் போலீசார் இணைந்து ஜூலை 1ஆம் தேதி மல்லேப்பள்ளி பகுதியில் உள்ள ஒஸ்மான் மீட் ஷாப் என்ற கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது முகமது உஸ்மான் மற்றும் முகமது ஜஹாங்கிர் ஆகிய இருவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

    Advertisement

    50 கிலோ

    விசாரணையில், அவர்கள் மாட்டிறைச்சியை ஆட்டிறைச்சி எனக் கூறி ஹைதராபாத்தில் உள்ள சில ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு விநியோகம் செய்தது தெரிய வந்தது. சோதனையின் போது கைப்பற்றப்பட்ட சுமார் 50 கிலோ இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அதை முழுமையாக அழித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இறைச்சி எந்தெந்த ஹோட்டல்களுக்கு விநியோகிக்கப்பட்டது, இதில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜா சிங்

    இது குறித்து பாஜக எம்எல்ஏ டி. ராஜா சிங் கூறுகையில், "இது மிகவும் தீவிரமான பிரச்சினை.. மட்டன் பிரியாணி என நம்பி சாப்பிட்ட பலருக்கு உண்மையில் பீப் இறைச்சி வழங்கப்பட்டிருக்கலாம். இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து ஹோட்டல்களையும் கண்டறிந்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

    Advertisement

    போலீஸ் விசாரணை

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேநேரம் இந்த விவகாரத்தில் எந்தெந்த ஹோட்டல்களுக்கு மாட்டிறைச்சி போய் இருக்கிறது என்ற தகவல்களை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை. சப்ளை செயினை முழுமையாக ஆய்வு செய்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஹோட்டல்களுக்கு தெரியாமல் மாட்டிறைச்சி வழங்கப்பட்டதா.. அல்லது ஹோட்டல்களுக்கு தெரிந்தே இது நடந்ததா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால், மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Hyderabad police have arrested two men for allegedly supplying beef as mutton to hotels and restaurants in the city(மாட்டுக்கறியை மட்டன் என சொல்லி விற்றவர் கைது): Hyderabad police arrests for selling beef as mutton.