ஹைதராபாத்: தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவின் மகளும் அரசியல் தலைவருமான கே. கவிதா, முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிட ஆலோசகர் ரத்தன் பண்டிட்டை தனது இல்லத்தில் வைத்து சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்று இருக்கிறது. இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. 2028ல் தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தெலங்கானா ரக்ஷண சேனா தலைவரும் முன்னாள் எம்.பி-யுமான கல்வகுண்ட்லா கவிதா, புதிதாகத் தொடங்கப்பட்ட தனது கட்சியின் எதிர்காலம் குறித்த ஜோதிட ஆலோசனைகளைப் பெற்று வருவதாக சொல்லப்படுகிறது. மூத்த அரசியல் தலைவர்கள் மத்தியில் தனது கட்சிக்கு போதிய வரவேற்பு இல்லா நிலை எழுந்துள்ளதாம். இதனால் அந்த புதிய அமைப்பை பூஜ்ஜியத்திலிருந்து கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் கவிதா இருக்கிறாராம்.
இந்த சூழலில் கவிதா சமீபத்தில் பிரபல ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேலைச் சந்தித்துள்ளார். இவர்தான் தமிழ்நாட்டின் நடிகரும், தற்போதைய முதலமைச்சருமான ஜோசப் விஜய்க்கு அரசியல் ஆலோசனைகளை வழங்கியவர் ஆவார. விஜய்யின் அரசியல் வெற்றிக்குப் பிறகு ஜோதிடர் ராதன் பண்டிட் அதிக கவனம் பெற்றவர் ஆவார். கவிதா தனது மகன் மற்றும் சில நெருங்கிய ஆதரவாளர்களுடன் சென்று அந்த ஜோதிடரைச் சந்தித்து, தனது அரசியல் எதிர்காலம், புதிய கட்சியின் வாய்ப்புகள், தனது ஜாதகத்தில் உள்ள தடைகள் மற்றும் அதற்கான பரிகாரங்கள் குறித்து விவாதித்ததாக சொல்லப்படுகிறது. கவிதா கட்சி தொடங்கி ஐந்து மாதங்கள் ஆகப்போகும் நிலையிலும், முக்கிய அரசியல் தலைவர்கள் யாரும் அவரது கட்சியில் இணையவோ அல்லது கூட்டணியாகச் செயல்படவோ பெரிய அளவில் ஆர்வம் காட்டாததால் இந்தச் சந்திப்பு கவனம் பெற்று இருக்கிறது. கவிதாவே தனது கட்சியைத் தனியாகக் கட்டியெழுப்ப வேண்டிய கடினமான சூழலை எதிர்கொண்டிருக்கிறார் அவரது அரசியல் செயல்பாடுகளுக்கு மக்களிடம் ஓரளவு வரவேற்பு இருந்தாலும், அவர் எதிர்பார்த்த வேகத்தை இன்னும் புதிய கட்சியால் இன்னும் எட்ட முடியவில்லை. நிதி நெருக்கடி மற்றும் எதிர்பார்த்த அளவிற்கு நிதியுதவிகள் வராததும் கூடுதல் சவால்களாக சொல்கிறார்கள். ஈரோட்டைச் சேர்ந்த ராதன் பண்டிட் வெற்றிவேல், வேத ஜோதிடத்தைப் பின்பற்றுபவர். விஜய்யுடனான தொடர்பிற்குப் பிறகு இவர் மிகவும் பிரபலமானார். இவரது வாடிக்கையாளர்களில் பல முக்கிய அரசியல் தலைவர்களும் பிரபலங்கள் என்று சொல்கிறார்கள். இந்த ஆலோசனையின் போது விவாதிக்கப்பட்ட முக்கிய விஷயங்களில் ஒன்று, கவிதாவின் பெயர் மற்றும் "கல்வகுண்ட்லா" என்ற குடும்பப் பெயரை பயன்படுத்த போகிறார்களாம். பொது வாழ்க்கையில் "கல்வகுண்ட்லா" என்ற குடும்பப் பெயரிலிருந்து முற்றிலும் விலகி இருக்குமாறும், தனது பெயரைப் பயன்படுத்தும் முறையை மாற்றுமாறும் ஜோதிடர் அவருக்கு அறிவுறுத்தியதாக சொல்கிறார்கள். பாரம்பரியமாக, திருமணத்திற்குப் பிறகு கவிதாவின் குடும்பப் பெயர் அவரது கணவர் குடும்பமான "தேவனபள்ளி" என்ற பெயருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், அவர் தனது தந்தையும் முன்னாள் தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ் உடனான அரசியல் அடையாளத்திற்காகத் தனது இயற்பெயரான "கல்வகுண்ட்லா" என்ற பெயரையே தொடர்ந்து பயன்படுத்தி வந்தார். தெலங்கானா இயக்கம் மற்றும் கேசிஆரின் அரசியல் பாரம்பரியத்துடன் தொடர்புடையது என்பதால், கல்வகுண்ட்லா என்ற பெயர் தெலங்கானா சமூகத்தின் சில பிரிவினரிடையே உணர்வுபூர்வமான மதிப்பைக் கொண்டிருக்கிறது. கவிதாவிற்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் பிஆர்எஸ் கட்சித் தலைமையுடனான மோதல்களுக்கு பிறகு, கல்வகுண்ட்லா என்ற பெயரை நீக்குவது குறித்து கவிதா ஏற்கனவே பரிசீலித்து வந்தாராம். ஆனால் அதன் அரசியல் சாதக பாதகங்களைக் கணக்கிட்டு அந்த முடிவை நிறுத்தி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது "கவிதா" என்று மட்டும் பயன்படுத்துவது அல்லது கணவர் குடும்பப் பெயரைச் சேர்த்து "கவிதா D" என்று மாற்றுவது ஆகிய இரண்டு மாற்று வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இந்த ஊகங்கள், ஜோதிட ஆலோசனையின் பேரில் தனது பெயரின் ஆங்கில எழுத்துக்களில் ஸ்பெல்லிங் மாற்றம் செய்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவை நினைவூட்டுவதாக ஆந்திராவின் தெலுங்கு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. மேலும், கவிதாவின் ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர், தொழில் மற்றும் அரசியல் முக்கியத்துவத்தைக் குறிக்கும் 10-ஆம் வீடு வலுவாக இருந்தாலும், அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் 9-ஆம் வீட்டில் சில சிக்கல்கள் இருப்பதாகக் கூறியதாக கூறப்படுகிறது. அவரது ஜாதகத்தில் செவ்வாய், சூரியன் மற்றும் சனி பலமாக இருப்பதாகவும், ராகு சாதகமற்ற நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தையோ அல்லது வெற்றியையோ அடைய அவர் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கவிதா இறுதியில் தனது பெயரை மாற்றுவாரா அல்லது ஜோதிடப் பரிந்துரைகளைப் பின்பற்றுவாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.