தாமதமான ரயில்.. வழக்கு போட்ட பயணி.. ரூ.35,000 இழப்பீடு வழங்க ரயில்வேக்கு உத்தரவு

  • ஹைதராபாத்: முன்கூட்டியே எந்த தகவலும் தெரிவிக்காமல் ரயிலை திடீரென மாற்றுப்பாதையில் இயக்கியதால் ரயில் தாமதம் ஆனதாகவும் இதனால் தன்னால் முக்கியமான மீட்டிங்கில் கலந்து கொள்ள முடியாமல் போனதாகவும் சொல்லி பயணி ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம், சம்பந்தப்பட்ட பயணிக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    நமது நாட்டில் ஒவ்வொரு நாளும் பல கோடி பேர் பயன்படுத்தும் ஒரு பொது போக்குவரத்தாக ரயில்கள் உள்ளன. இதனால் ரயில்களில் ஏற்படும் தாமதம் என்பது பல கோடி பேரை பாதிக்கும். திடீரென தாமதம் ஆகும்போது நம்மில் பலரும் புலம்பிவிட்டு கடந்து சென்றுவிடுவோம். ஆனால், இங்கு ஒருவர் தாமதமான ரயிலுக்கு இழப்பீடு பெற்றிருக்கிறார். இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!

    Advertisement

    என்ன நடந்தது

    அதாவது ரயிலை திடீரென மாற்றுப்பாதையில் இயக்கியதால் ரயில் தாமதமானதாக சொல்லி பயணி ஒருவர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் தன்னால் முக்கியமான மீட்டிங் ஒன்றில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் ரிட்டர்ன் விமானத்தையும் தவறவிட்டதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்தபோது தான் சம்பந்தப்பட்ட பயணிக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெற்கு ரயில்வேக்கு ஹைதராபாத் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    வழக்கு

    தெலங்கானா மாநிலம் கோத்தாபேட்டை சேர்ந்த முந்திரி வியாபாரி ராமகிருஷ்ணா.. இவர் கடந்த 2024 செப்டம்பர் 30ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருந்த முக்கிய தொழில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.1,428 செலுத்தி பிரீமியம் தட்கல் டிக்கெட் புக் செய்திருந்தார்.

    Advertisement

    அவர் ரயிலை பிடிக்க செப்டம்பர் 28ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றபோது தான், அந்த ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதை அவர் அறிந்தார். இது குறித்து ரயில்வே தரப்பில் இருந்து எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பதே அவரது முக்கியமான புகாராக இருக்கிறது.

    தாமதம்

    திடீரென இப்படி ரூட்டை மாற்றியதால் ரயில் சுமார் 16 மணி நேரம் தாமதமாகியுள்ளது. அந்த ரயில் செப்டம்பர் 30-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு தான் டெல்லி சென்றடைந்தது. இதனால் அவரால் அந்த மீட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. மேலும், இதனால் டெல்லியில் இருந்து திரும்புவதற்காக முன்பதிவு செய்திருந்த விமானத்தையும் தவறவிட்டார். இது தொடர்பான வழக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் விசாரணைக்கு வந்தது.

    Advertisement

    அப்போது சிக்னல் அமைப்பை நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற்றதால் ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்தது. மேலும், விஜயவாடா, கம்மம், வாரங்கல் மற்றும் நாக்பூரில் இருந்து ரயிலில் ஏறவிருந்த பயணிகளுக்கு மட்டும் எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பப்பட்டதாகவும், சென்னை நிலையத்தில் இருந்து டிக்கெட் புக் செய்தோருக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை என்றும் ரயில்வே ஒப்புக்கொண்டது.

    ரயில்வே மீது தவறு

    இந்த விவகாரத்தை விசாரித்த ஆணையம், வழித்தட மாற்றம் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தால், மனுதாரர் மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளை செய்திருக்க முடியும் என்று குறிப்பிட்டது. இது முழுக்க முழுக்க சேவை குறைபாடு தான் என்று சுட்டிக்காட்டிய நுகர்வோர் ஆணையம், ரயில் துறை தான் இதற்கு பொறுப்பு என்றும் கூறியது.

    Advertisement

    இந்த தாமதம் காரணமாக ஏற்பட்ட நஷ்டத்திற்கான போதுமான ஆதாரங்களை மனுதாரர் தாக்கல் செய்யவில்லை என்பதால் அந்த கோரிக்கையை ஆணையம் ஏற்கவில்லை. இருப்பினும், ரயில்வேயின் அலட்சியத்தால் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், அசௌகரியம் மற்றும் திரும்பும் விமானத்தை தவறவிட்டது ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ரூ.25,000 இழப்பீடும், வழக்கு செலவாக ரூ.10,000வழங்க தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட்டது. அதன்படி மொத்தம் ரூ.35,000 வழங்க வேண்டும் என்று ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.

    English Summary

    A consumer commission has directed Southern Railway to pay ₹35,000 compensation to a passenger after a train was diverted without prior notice(ரயில் தாமதம் காரணமாக ரயில்வேக்கு அபராதம்): Train delay Compensation latest news in tamil.