குண்டுக்கட்டாக தூக்கி வரப்பட்ட TRS தலைவர் கவிதா! ரேவந்த் ரெட்டிக்கு எதிரான போராட்டத்தில் கைது!

  • ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் போடுப்பல் பகுதியில் அம்மாநில போராட்ட வீரர்களுக்கு நில உரிமை வழங்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது, தெலுங்கானா ரக்ஷண சேனா (TRS) கட்சியின் தலைவர் கவிதா குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    தெலுங்கானா தனி மாநிலப் போராட்டத்தின் போது தீவிரமாகப் பங்கேற்ற வீரர்களுக்கு 250 சதுர அடி வீட்டு மனைகள் வழங்கப்படும் என்று காங்கிரஸ் அரசு தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, உப்பல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட போடுப்பல் பகுதியில் கவிதா தலைமையில் ஒரு நாள் அடையாளப் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது.

    Advertisement

    பரபரப்பான சூழல்

    போராட்டம் நடைபெறவிருந்த தெலங்கானா உத்யம கருல ரக்ஷண காலனி பகுதியில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டக் களத்திற்கு வரவிடாமல்.. தலைவர்களை வீட்டு காவலில் வைத்திருந்தனர். மேலும், போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களையும் போலீசார் அகற்றினர். இருப்பினும், தடையை மீறி அங்கு வந்த கவிதா போராட்டத்தைத் தொடங்க முயன்றார்.

    அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, கவிதா மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி, பொல்லாரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    கவிதாவின் குற்றச்சாட்டு

    கைது செய்யப்பட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, "பெண்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியுள்ளனர். காங்கிரஸ் அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றக் கோருவது ஜனநாயக விரோதமா? இந்த அரசின் வீழ்ச்சிக்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது. போராட்ட வீரர்களுக்கு நிலம் கிடைக்கும் வரை எங்களது போராட்டம் ஓயாது" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

    Advertisement

    கவிதா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, பொல்லாரம் காவல் நிலையத்தின் முன் திரண்ட டி.ஆர்.எஸ் கட்சியினர் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

    English Summary

    TRS Chief Kavitha: The arrest of Telangana Rakshana Sena (TRS) leader Kavitha—who was forcibly taken into custody while protesting for land rights for the state's activists in the Boduppal area—has caused a stir.