மொத்த சொத்தையும் பணிப்பெண்ணுக்கு எழுதி வைத்துவிட்டு.. தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகர்!

  • ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த நடிகர் ரங்கநாத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்போது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், அவரது மரணத்தை விட அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தியது அவரது உயில் தான். அதாவது தனது சொத்துகள் அனைத்தையும் பல ஆண்டுகளாக தன்னை கவனித்து வந்த பணிப்பெண்ணுக்கு எழுதி வைத்துவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டிருந்தார்.

    தனிமையில் இருக்கும்போது யாராக இருந்தாலும் கடுமையான மன அழுத்தம் ஏற்படும். நல்ல மனநிலையில் இருக்கும் போது நாம் யோசித்து கூட பார்க்காத பல விஷயங்களை நாம் தனிமையில் இருந்தால் எடுப்போம். அப்படி தான் பிரபல தெலுங்கு நடிகர் கடந்த 2015ல் ஒரு மோசமான முடிவை எடுத்தார்.

    தற்கொலை

    2015 டிசம்பர் 19ஆம் தேதி, ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் ரங்கநாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது 66 வயதான அவரது தற்கொலை தெலுங்கு சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில், வீட்டின் சுவரில் கருப்பு மார்க்கர் பேனாவால் அவர் எழுதியிருந்த சில வரிகள் தற்கொலையை விட பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.

    வீட்டு பணிப்பெண்

    தனது சேமிப்பு பணம் அனைத்தையும் தன்னை நீண்ட காலமாக கவனித்து வந்த வீட்டு பணிப்பெண மீனாட்சிக்கு வழங்குமாறு குடும்பத்தினரிடம் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். மேலும், பணிப்பெண்ணை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் அவர் எழுதி வைத்திருந்தார். இந்த முடிவை அவர் ஏன் எடுத்தார் என்பது குறித்து விளக்கம் எதையும் அவர் தரவில்லை. தற்கொலை செய்வதற்கு முன்பு தனது நண்பர்கள் சிலருக்கும், எழுத்தாளர் பி.தேவதாஸ் உள்ளிட்டோருக்கும் "Goodbye" என்ற மெசேஜ்ஜை மட்டும் அனுப்பியிருந்ததாக கூறப்படுகிறது.

    யார் இவர்

    சென்னையில் பிறந்த இவரது இயற்பெயர் திருமலா சுந்தர ஸ்ரீ ரங்கநாத். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு இந்திய ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றினார். 1969ஆம் ஆண்டு இயக்குநர் பாப்பு இயக்கிய 'புத்திமந்துடு' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் அக்கினேனி நாகேஸ்வரராவ் மற்றும் விஜய நிர்மலா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    அதன்பிறகு 40க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த ரங்கநாத், பின்னர் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் கவனம் செலுத்தினார். சுமார் 46 ஆண்டு திரை பயணத்தில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் தெலுங்கு சினிமாவில் ஹிட் அடித்துள்ளது.

    பின்னணி

    திரையுலகில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருந்த ரங்கநாத், 2009ஆம் ஆண்டு தனது மனைவியை இழந்தார். அதன் பின்னர் நீண்ட காலமாக தனிமை மற்றும் மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகின. மனைவி இறந்த பிறகு ரங்கநாத் அடிக்கடி தற்கொலை குறித்து பேசியதாகவும், அதற்காக மனநல ஆலோசனையும் பெற்றதாகவும் அவரது மகள் நீரஜா தெரிவித்திருந்தார்.

    ரங்கநாத் தற்கொலை நடந்த நாளில், வழக்கம்போல் அவரது வீட்டு பணிப்பெண் மீனாட்சி மதியம் உணவு சமைத்து வைத்து சென்றுள்ளார். விழா ஒன்றில் கலந்து கொள்ள ரங்கநாத்திற்கு அழைப்பிதழை கொடுக்க சிலர் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். இருப்பினும், நீண்ட நாட்கள் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர்கள் மகள் நீரஜாவுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ரங்கநாத் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.

    குடும்பத்தினர்

    ரங்கநாத்துக்கு மகள் நீரஜா தவிர மேலும் ஒரு மகனும், மற்றொரு மகளும் உள்ளனர். இறுதி சடங்குகள் முடிந்த பிறகு, தனது தந்தையின் கடைசி விருப்பத்தை மதித்த அவரது பிள்ளைகள், அவர் சேமித்து வைத்திருந்த பணத்தை வீட்டு பணிப்பெண் மீனாட்சியிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

    தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.

    English Summary

    Veteran Telugu actor Ranganath death in 2015 shocked the film industry(தனது சொத்தை வேலைக்காரிக்கு எழுதிய வைத்த நடிகர்): Telugu actor left his savings to the housemaid who cared for him for years.