ஹைதராபாத்: தெலங்கானாவில் 18 வயதாகும் நர்சிங் மாணவி ஒருவர் தனது வீட்டில் தனியாக இருந்த கோலம் போலீசாரை ஆடிப்போக வைத்துள்ளது. விடுமுறை காரணமாக சொந்த கிராமத்தி தங்கியிருந்த அவருக்கு, பக்கத்து வீட்டில் வசிக்கும் நபரால் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தப்பி ஓடிய அந்த நபரை பிடித்தால் தான் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியவரும்.
தெலங்கானா மாநிலம், ஜுலுருபாடு மண்டலம், வெங்கன்னபாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது கணவர் காலமாகிவிட்டார். இதனால் ராஜேஸ்வரி கூலி வேலை செய்து பிள்ளைகளை காப்பாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகள் தான் ஹரிணி. இவர் கம்மம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்காக மாணவி ஹரினி, தனது சொந்த கிராமத்திற்குத் திரும்பி வந்துள்ளார். வீட்டில் தனியாகத்தான் இருந்தார். ஹரிணியின் தாய் ராஜேஸ்வரி வேலைக்கு போய்விட்டார்.
அண்மையில் மாணவி ஹரிணியை காணவில்லை.. தாயார் ராஜேஸ்வரி வீட்டிற்குத் திரும்பியபோது மகளைக் காணாததால் பயந்து போனார். வீட்டின் வளாகத்தில் உள்ள குளியலறைக்குப் பின்னால் ஹரிணி சடலமாக கிடந்ததை கண்டு கதறி அழுதார். இதையடுத்து அவர் உடனடியாக போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறையினரும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆதாரங்களைச் சேகரித்தனர். தொடர்ந்து ஹரிணி பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் மீது சந்தேகம் தெரிவித்தார். இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் கழுத்து நெரிக்கப்பட்டதே மரணத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட முடிவுகளில் தெரியவந்துள்ளது.. இதனால், காவல்துறையினர் இவ்வழக்கை கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், முக்கிய சந்தேக நபரைத் தேடும் பணியில் காவல் குழுக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கோத்தகுடம் டிஎஸ்பி ஆதி நாராயணா தெரிவித்தார். டிஎஸ்பி ஆதிநாரயாணா கூறுகையில், "ஹரிணி கழுத்து நெரிக்கப்பட்டதால் உயிரிழந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. பிரேதப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், 'சந்தேகத்திற்கிடமான மரணம்' என்ற நிலையில் இருந்த இவ்வழக்கு, பிஎன்எஸ் (BNS) சட்டப்பிரிவு 103(1)-ன் கீழ் 'கொலை வழக்கு' என மாற்றி உள்ளோம். முக்கிய சந்தேக நபர் தலைமறைவாக உள்ளார்; அவரைப் பிடிப்பதற்கான முயற்சிகளை எங்கள் குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன" என்றார். காவல்துறை வட்டாரத்தினர் கூறுகையில், "வழக்கு விசாரணையில் முக்கியமாகக் கருதப்படும் பக்கத்து வீட்டு நபர் உட்படச் சில சந்தேக நபர்களைக் கண்டறிந்துள்ளோம். அவர்களைக் கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறோம். பாலியல் ரீதியான தாக்குதல் ஏதேனும் நடந்ததா என்பதை உறுதிப்படுத்த, விரிவான தடயவியல் மற்றும் மருத்துவ அறிக்கைகளுக்காகக் காத்திருக்கிறோம்," என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. விசாரணையாளர்கள் பாதிக்கப்பட்ட மாணவிக்கு அறிமுகமானவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்; அத்துடன் சம்பவ இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட ஆதாரங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவத்திற்கு முன் ஹரிணியின் நடமாட்டம் மற்றும் அதைத் தொடர்ந்து சந்தேக நபர்களின் நடமாட்டம் ஆகியவை குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணைக்கு பின்னரே என்ன நடந்தது என்பது உறுதியாக தெரியவரும்.