ஹைதராபாத்: வாட்ஸ்அப்பில் வரும் ஒரு மெசேஜுக்கு 'NO' என்று பதில் அளித்தாலே வங்கி கணக்கில் உள்ள பணம் முழுவதும் பறிபோகும் புதிய சைபர் மோசடி குறித்து ஹைதராபாத் காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனார் எச்சரித்துள்ளார். ஓடிபி எண் பகிராத போதிலும், சந்தேகத்திற்குரிய லிங்குகளை கிளிக் செய்யாத போதிலும் ஒருவரின் வாழ்நாள் சேமிப்பு சில நொடிகளில் பறிபோய் இருக்கிறது.. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சைபர் குற்றவாளிகளும் புதுப்புது வழிகளில் மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர். அந்த வகையில் வங்கிக் கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி, அதற்கு பதிலளிப்பவர்களின் பணத்தைத் திருடும் புதிய மோசடி தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இது குறித்து ஹைதராபாத் காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனார், வீடியோ ஒன்றைப் பகிர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் இளைஞர் ஒருவர் இந்த புதிய வகை சைபர் குற்றத்தால் பணத்தை இழந்த சம்பவம் குறித்து தெரிய வந்ததாக குறிப்பிட்டுள்ளார். சைபர் குற்றவாளிகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 'ஆட்டோ எக்ஸிகியூஷன் ஃபைல் அட்டாக்' என்ற ஆபத்தான முறையில் மோசடி செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த மோசடியில் முதலில், பாதிக்கப்பட்ட நபருக்கு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து வாட்ஸ்அப் மெசேஜ் ஒன்று வரும். அதில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து, "இந்தப் பரிவர்த்தனையை நீங்கள் மேற்கொள்ளவில்லை என்றால் உடனடியாக 'NO' என்று பதிலளிக்கவும்" என்று மற்றொரு மெசேஜ் அனுப்பப்படும். வங்கி கணக்கில் பணம் பறிபோய்விட்டதோ என்ற பதற்றத்தில், அந்த நபர் 'NO' என்று டைப் செய்து பதில் அனுப்புவார். ஆனால், அதுவே அவருக்கு ஆபத்தாக மாறுவதாக சஜ்ஜனார் எச்சரித்துள்ளார். இந்த மோசடியில், மெசேஜில் மறைந்திருக்கும் மால்வேர் ஸ்கிரிப்ட்கள், ஒருவர் 'NO' என்று பதில் அனுப்பியதும் செயல்பட தொடங்குவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சில நொடிகளிலேயே ஹேக்கர்கள் சம்பந்தப்பட்ட நபரின் மொபைல் போனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை முழுவதுமாக திருடிவிடுவதாக சஜ்ஜனார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஓடிபி எண்ணை பகிரவில்லை. சந்தேகத்திற்குரிய லிங்க் எதையும் கிளிக் செய்யவும் இல்லை. ஆனால், ஒரு மெசேஜுக்கு 'NO' என்று பதில் அளித்ததால் மட்டுமே அவரது வாழ்நாள் சேமிப்பு பறிபோனதாகக் காவல் ஆணையர் குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய சைபர் மோசடியிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சஜ்ஜனார் அறிவுறுத்தியுள்ளார். வங்கிப் பரிவர்த்தனைகள் தொடர்பாக அடையாளம் தெரியாத எண்களில் இருந்து வரும் மெசேஜ்களுக்கு 'YES' அல்லது 'NO' என்று பதிலளிக்க வேண்டாம். இதுபோன்ற மெசேஜ்களை பார்த்துப் பதற்றமடையாமல், அந்த எண்ணை பிளாக் செய்துவிடுங்கள். வங்கி கணக்கிலிருந்து உண்மையிலேயே பணம் எடுக்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள, வாட்ஸ்அப் மெசேஜுக்குப் பதிலளிப்பதற்கு பதிலாக வங்கியின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியில் நேரடியாகச் சரிபார்க்க வேண்டும். ஒருவேளை இதுபோன்ற மோசடியில் சிக்கிப் பணத்தை இழந்துவிட்டால், பணம் பறிபோன முதல் ஒரு மணி நேரம் ரொம்பவே முக்கியம். அதற்குள் சைபர் க்ரைம் போலீசாரை தொடர்பு கொண்டு புகாரளிக்க வேண்டும்.சைபர் க்ரைம்
நோ என மெசேஜ் செய்தால் காலி
சேமிப்பு பறிபோனது
என்ன செய்ய வேண்டும்