பிரபல யூடியூபர் கைது.. இங்கிலாந்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி? பரபர புகார்

  • ஹைதராபாத்: இங்கிலாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் பிரபல தெலுங்கு யூடியூபர் ரமணா நந்தனா கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த போது போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இருப்பினும், ரமணா நந்தனா தன் மீதான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

    Advertisement

    எப்படியாவது வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டால் அங்கேயே செட்டில் ஆகிவிடலாம் என்பதால் பலரும் வெளிநாடு செல்லவே ஆர்வமாக இருக்கிறார்கள். இருப்பினும், இதை பயன்படுத்தி சில நேரங்களில் மோசடிகளும் கூட நடக்கிறது. அப்படியொரு புகாரில் தான் இப்போது பிரபல யூடியூபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    ரமணா நந்தனா கைது

    இங்கிலாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக தெலுங்கு யூடியூபர் ரமணா நந்தனா கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இங்கிலாந்தில் இருந்து ஹைதராபாத் விமான நிலையம் வந்த ரமணா நந்தனாவை போலீசார் பிடித்துள்ளனர். யூடியூப் சேனல் மூலம் பிரபலமான ரமணா நந்தனாவும், அவரது கணவர் ஜகர்லமுடி மதுகரும் லண்டனில் வேலை வாங்கி தருவதாகக் கூறி அதிகளவில் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    Advertisement

    ஆந்திர பிரதேசத்தின் என்டிஆர் மாவட்டத்தில் உள்ள இப்ராஹிம்பட்டினம் காவல் நிலையத்தில் ரமணா நந்தனா, அவரது கணவர் மதுகர் மற்றும் அவரது தந்தை மோகன் ராவ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பிடிபட்ட ரமணா நந்தனாவை இப்ராஹிம்பட்டினம் போலீசாரிடம் ஒப்படைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ரூ.15 லட்சம் மோசடி?

    இங்கிலாந்தில் வசிக்கும் மமில்லப்பள்ளி சிவகிராந்தி குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து விசா நீட்டிப்பு, வேலைவாய்ப்பு உதவி பெற்று தருவதாக கூறி ரமணா நந்தனா பணம் வாங்கினாராம். அவர்கள் தங்களுக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கையில் பல வங்கி கணக்குகளுக்கு பல தவணைகளில் ரூ.15 லட்சம் பணத்தை அனுப்பியதாக சிவகிராந்தி குமார் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    ஆனால் விசா சேவைகள் கிடைக்கவில்லை என்றும் தனக்கு வழங்கப்பட்ட ஆவணம் போலியானது என்பது பின்னர் தெரியவந்ததாகவும் சிவகிராந்தி கூறியுள்ளார். தொடர்ந்து பணத்தை திரும்பக் கேட்டபோது, ரூ.2 லட்சம் மட்டுமே திருப்பி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஜகர்லமுடி மதுகர் முதல் குற்றவாளியாகவும், ரமணா நந்தனா இரண்டாவது குற்றவாளியாகவும், மோகன் ராவ் மூன்றாவது குற்றவாளியாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மோசடி மற்றும் ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மறுப்பு

    இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை ரமணா நந்தனா ஏற்கனவே மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தானும் தனது கணவரும் அந்த ஆலோசனை நிறுவனத்தை நடத்தவோ அல்லது அதற்கு உரிமையாளர்களாகவோ இல்லை என்று தெரிவித்துள்ளார். தங்களது பெயர்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் வேண்டும் என்றே தங்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இதுபோல புகாரளிக்கப்பட்டுள்ளதாகவும் நந்தனா தெரிவித்திருந்தார்.

    Advertisement

    கைது ஏன்?

    மேலும், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ரமணா நந்தனாவும் அவரது கணவரும் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மறுபுறம் மூவருக்கும் எதிராக லுக் அவுட் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாகவே ரமணா நந்தனா விமான நிலையத்திற்கு வந்தபோது போலீசாரால் பிடிக்கப்பட்டுள்ளார்.

    யூடியூப் மூலம் பிரபலமான ரமணா நந்தனா, பிரபல நடிகர் சிரஞ்சீவி நடித்திருந்த மன சங்கர வர பிரசாத் கரு என்ற படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது வேலைவாய்ப்பு மோசடி புகார் தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English Summary

    Popular Telugu YouTuber Ramana Nandana has been arrested at Hyderabad airport in connection with an fraud(வேலைவாய்ப்பு மோசடியில் ஹைதராபாத் யூடியூபர் கைது): YouTuber Arrested in Hyderabad over job fraud.