டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள தரை தொட்டியை திறந்து பார்த்த குடும்பத்தினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த தொட்டிக்குள் ஏராளமான பாம்புகள் கிடந்தன. மொத்தம் 27 பாம்புகள் தண்ணீரில் நெளிந்த நிலையில் வனத்துறையினர் அதனை பிடித்து சென்றனர். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
உங்கள் வீட்டில் தரை தொட்டி இருக்கிறதா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு தான்.. அதாவது தற்போது ஒவ்வொரு வீடுகளிலும் தரை தொட்டி அமைப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. தரையை தோண்டி அதற்குள் தொட்டி அமைத்து தண்ணீரை சேமித்து பயன்படுத்துவதை தற்போது பல குடும்பங்கள் வாடிக்கையாக வைத்துள்ளன. இதில் பலரும் தரைத்தொட்டியை சரியாக பராமரிப்பது இல்லை.
எப்போதும் மூடி தானே இருக்கிறது என்று தொட்டியை சுத்தம் செய்யாமல் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் புழு, பூச்சிகள் தரை தொட்டியில் வசிப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் இங்கே ஒரு வீட்டில் 27 பாம்புகள் தரை தொட்டியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள சராய் கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் வீட்டில் தரை தொட்டி அமைத்துள்ளது. இந்நிலையில் தான் தரை தொட்டியை சுத்தம் செய்வதற்காக அவர்கள் திறந்து பார்த்தனர். அப்போது தொட்டிக்குள் இருந்த தண்ணீரில் ஏராளமான பாம்புகள் நெளிந்தன. இதனை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தரை தொட்டிக்குள் உயிர் வாழ்ந்த பாம்பு குட்டிகளை பிடித்தனர். மொத்தம் 27 பாம்பு குட்டிகளை அவர்கள் உயிருடன் பிடித்து சென்றனர். பிடிக்கப்பட்ட பாம்புகள் அனைத்தும் வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டன. இதுபற்றி வனச்சரக அதிகாரி சிஷ்பால் சிங் கூறுகையில், ''தரை தொட்டிக்குள் 27 பாம்பு குட்டிகளை பிடித்து வனப்பகுதியில் விட்டோம். இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. தரை தொட்டிக்குள் இவ்வளவு பாம்புகள் எப்படி சென்றன? என்பது தெரியவில்லை'' என்றார். இதுதொடர்பாக பாம்பு பிடிப்பவர் ஒருவர் கூறுகையில், ''பிடிபட்ட பாம்புகள் செக்கர்டு கீல்பேக் (Checkered Keelback) வகையை சேர்ந்த பாம்புகளாகும். இவை ஆசிய நீர்ப்பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது தண்ணீரில் வாழும். இதனால் மனிதர்களுக்கு பாதிப்பு கிடையாது. இந்த பாம்பின் விஷம் என்பது தவளை, மீன்களை மட்டுமே கொல்லும் தன்மை கொண்டது'' என்றார். இதற்கிடையே தான் தரை தொட்டியில் இருந்து பாம்பு குட்டிகளை பிடித்தது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒரே தொட்டியில் 27 பாம்புகள் சிக்கிய சம்பவம் சராய் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.