போபால்: மத்திய பிரதேசத்தில் நின்ற ரயிலில் தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து ரயிலில் பயணித்தவர்கள் உயிரை காப்பாற்றி கொள்ள அருகே உள்ள தண்டவாளத்தில் குதித்தனர். அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த ரயில் மோதி 4 பேரும் பலியாகினர்.
மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள ஹேதம்பூர் ரயில் நிலையம் அருகே இன்று மாலை கஜுராஹோ-உதய்பூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 19665) நின்றது. எதிரே வரும் ரயில் கடந்து செல்வதற்காக இந்த ரயில தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
அப்போது ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியது. இதனால் பீதியடைந்த பயணிகள் ரயில் பெட்டிகளில் இருந்து அவசரஅவசரமாக கீழே இறங்கினர். சிலர் ரயில் வாசல் மற்றும் அவசர வழி வழியாக கீழே குதித்தனர். இப்படி தீவிபத்தில் இருந்து உயிரை காப்பாற்ற கீழே குதித்தவர்களில் சிலர் பக்கத்து தண்டவாளத்தில் போய் விழுந்தனர். அந்த சமயத்தில் அந்த தண்டவாளத்தில் வேகமாக பெரோஸ்பூர்-சியோனி படால்கோட் எக்ஸ்பிரஸ் ரயில்(20424) வந்தது. கண் இமைக்கும் நொடியில் அந்த ரயில் தண்டவாளத்தில் குதித்தவர்கள் மீது மோதியது. இதில் 4 பேர் படுகாயமடைந்து பலியாகினர். அதேவேளையில் பலர் காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ரயில்வே பாதுகாப்பு படை , ரயில்வே போலீஸ் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் கஜுராஹோ - உதய்பூர் இன்டர்சிட்டி ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய தகவலில் உண்மையில்லை என்பதும், அது வதந்தி என்பதும் தெரியவந்தது. இதனால் வதந்தியை நம்பி உயிரை காப்பாற்ற ரயில் பெட்டியில் இருந்து கீழே குதித்தவர்களில் 4 பேர் இன்னொரு ரயில் மோதி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.