தெற்காசியாவின் மிகப்பெரிய தனியார் ஏவுகணை உற்பத்தி மையம்.. அதானி டிஃபென்ஸ் ரூ.2,500 கோடி முதலீடு!

  • சிவ்புரி: இந்தியாவின் பாதுகாப்புத் துறையை உள்நாட்டிலேயே வலுப்படுத்தும் நோக்கில், அதானி டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் மத்தியப் பிரதேச மாநிலம் சிவ்புரியில் தெற்காசியாவின் மிகப்பெரிய தனியார் ஒருங்கிணைந்த ஏவுகணை உற்பத்தி மையத்திற்கான அடிக்கல்லை நாட்டியுள்ளது. ரூ.2,500 கோடி முதலீட்டில் அமையவுள்ள இந்த திட்டத்தின் மூலம் சுமார் 5,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய ஜீத் அதானி, "தெற்காசியாவிலேயே ஏவுகணை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் தயாரிப்பு முதல் முழுமையான ஏவுகணை அமைப்புகள் வரை அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் முதல் தனியார் மையம் இது" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

    Advertisement

    மேலும், இங்கு நடுத்தர மற்றும் நீண்ட தூரம் செல்லக்கூடிய ஏவுகணை அமைப்புகள் தயாரிக்கப்பட உள்ளன. மேலும், இதனுடன் காம்போசிட் ப்ரோபெல்லண்ட், டிஎன்டி (TNT) மற்றும் வெடிமருந்து தரத்திலான பொருட்கள் தயாரிக்கும் பிரிவுகளும் இந்த வளாகத்தில் அமையவுள்ளன. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம், 50-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிலகங்கள் (MSMEs) இதனுடன் ஒருங்கிணைக்கப்பட்டு பிரத்யேக பாதுகாப்பு விநியோகச் சங்கிலி உருவாக்கப்படும்.

    பிரதமர் நரேந்திர மோடியின் 'ஆத்மநிர்பர் பாரத்' (சுயசார்பு இந்தியா) திட்டத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க DRDO மற்றும் இந்திய ஆயுதப் படைகளுடன் அதானி டிஃபென்ஸ் நெருங்கிப் பணியாற்றி வருகிறது.

    Advertisement

    ஏற்கனவே மத்திய பிரதேசத்தின் குவாலியரில் உள்ள அதானி பாதுகாப்பு உற்பத்தி மையத்தில் லைட் மெஷின் துப்பாக்கிகள் (LMGs), அசால்ட் ரைபிள்கள் மற்றும் கார்பைன்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 2,000 லைட் மெஷின் துப்பாக்கிகள் (LMGs) திட்டமிட்ட காலத்திற்கு 11 மாதங்களுக்கு முன்பாகவே இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அமையவுள்ள சிவ்புரி மையமும், குவாலியர் மையமும் இணைந்து மத்தியப் பிரதேசத்தை இந்தியாவின் பாதுகாப்புத் துறை கண்டுபிடிப்புகளின் இரட்டை மையமாக மாற்றும் என ஜீத் அதானி கூறினார்.

    கடந்த ஆண்டு போபாலில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி, மத்தியப் பிரதேசத்தில் ரூ.1.10 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என அறிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாகவே இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    ஏற்கனவே கட்னி மாவட்டத்தில் ரூ.4,000 கோடி சிமெண்ட் ஆலை முதலீடுகளும், குணா மாவட்டத்தில் அண்மையில் தொடங்கப்பட்ட ரூ.1,060 கோடி சிமெண்ட் திட்டமும் அதானி குழுமத்தால் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மின்சாரம் மற்றும் காற்றாலை திட்டங்கள் மூலமாகவும் அதானி குழுமம் ம.பி-யில் கால்பதித்துள்ளது.

    சிவ்புரியில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, மாநில எரிசக்தி துறை அமைச்சர் பிரத்யும்னன் சிங் தோமர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

    English Summary

    Adani Defence & Aerospace laid the foundation stone for what it described as South Asia's largest private-sector integrated missile manufacturing ecosystem in Shivpuri, Madhya Pradesh. ₹2,500 crore project is expected to generate around 5,000 direct and indirect employment opportunities while strengthening India's indigenous defence manufacturing capabilities.