Aadhar: இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் அட்டை கிடையாது! சொன்னது போல் செக் வைத்த அமித்ஷா!

  • குவஹாத்தி: சட்டவிரோத குடியேற்றக்காரர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அசாம் மாநில அரசு ஒரு அதிரடியான மற்றும் அதீத துணிச்சலான முடிவை எடுத்துள்ளது. இனி அசாம் மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட எவருக்கும் புதிய ஆதார் அட்டைகள் வழங்கப்படாது என்று அம்மாநில அமைச்சரவை அதிரடியாக அறிவித்துள்ளது.

    Advertisement

    ஊடுருவலைத் தடுக்க 'ஆதார்' தடை!

    அசாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மா சனிக்கிழமை அன்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் ஆதார் அட்டையைப் பெற்று, அதன் மூலம் இந்தியக் குடியுரிமை கோருவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இனி ஆதார் அட்டை வழங்கப்படாது. ஆனால், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ஆதார் வழங்கும் பணி வழக்கம் போல் தொடரும்" என்றார்.

    Advertisement

    100 சதவீதத்தைத் தாண்டிய ஆதார் புள்ளி விவரம்!

    இந்த முடிவுக்குப் பின்னால் உள்ள அதிர்ச்சிகரமான காரணத்தையும் முதல்வர் விளக்கினார். "அசாமின் சில மாவட்டங்களில் ஆதார் அட்டை பெற்றவர்களின் எண்ணிக்கை, அந்த மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையை விட 100 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. இது எப்படி சாத்தியம்? கூடுதல் ஆதார் அட்டைகளைப் பெறுபவர்கள் யார் என்பதை நாம் கண்டறிய வேண்டும். சட்டவிரோத வங்கதேச குடியேற்றக்காரர்கள் எக்காரணம் கொண்டும் ஆதார் அட்டையைப் பெற்றுவிடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்," என்று அவர் தெரிவித்தார்.

    யாருக்கெல்லாம் விதிவிலக்கு?

    இந்தத் தடையிலிருந்து சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    பழங்குடியினர் (ST), பட்டியலினத்தவர் (SC) மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள். இவர்களுக்கு மட்டும் 2027 மார்ச் மாதம் வரை ஆதார் அட்டை பெற அனுமதி உண்டு.

    சிறப்பு அனுமதி: மிக முக்கியமான அல்லது விதிவிலக்கான சூழல்களில் ஆதார் அட்டை தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மாநில அரசுக்குப் பரிந்துரை அனுப்ப வேண்டும். அரசு அந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்து தகுதியிருந்தால் மட்டுமே அனுமதி வழங்கும்.

    2027 முதல் முழுமையான தடை!

    வரும் 2027 ஏப்ரல் 1-ம் தேதி முதல், அசாம் மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட எவருக்கும் (பழங்குடியினர் மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட) ஆதார் அட்டை வழங்கும் பணி முற்றிலும் நிறுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

    Advertisement

    அமித் ஷாவின் தேர்தல் முழக்கமும், அசாம் அரசின் நடவடிக்கையும்!

    கடந்த மார்ச் மாதம் தேர்தல் பிரச்சாரத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பாஜகவிற்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பளியுங்கள், அசாமில் உள்ள ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் கண்டறிந்து வெளியேற்றுவோம்" என்று முழக்கமிட்டார்.

    ஊடுருவல்காரர்கள் அசாம் மக்களின் வேலைவாய்ப்பு, உணவு மற்றும் நிலத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

    அமித் ஷாவின் அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாகவும், அசாம் மாநிலத்தின் பூர்வகுடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் விதமாகவும் இந்த 'ஆதார் தடை' நடவடிக்கை பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டே, பெரியவர்களுக்கு ஆதார் வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று முதல்வர் சர்மா எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    பின்னணி என்ன?

    வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள அசாமில், சட்டவிரோத குடியேற்றம் என்பது பல தசாப்தங்களாக ஒரு பெரும் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனையாக இருந்து வருகிறது.

    தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தொடர்பான சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில், அடையாள ஆவணமாகக் கருதப்படும் ஆதாரை முடக்குவதன் மூலம், ஊடுருவல்காரர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும் என அசாம் அரசு நம்புகிறது.

    அசாம் அரசின் இந்த அதிரடி முடிவு, நாடு முழுவதும் உள்ள அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    In a major move aimed at curbing illegal immigration, the Government of Assam has announced that new Aadhaar cards will no longer be issued to individuals above the age of 18 in the state. The decision, approved by the state cabinet, is being presented as part of stricter identity verification and population management measures, triggering nationwide discussion over its impact and implementation.