பெட்ரோல் என்ன உங்க அப்பா வீட்டுல இருந்து வருமா? இனிமேல் E20 தான்.. ஆவேசமாக பேசிய பாஜக தலைவர்

  • போபால்: மத்திய அரசு E20 பெட்ரோலை ஊக்குவித்து வரும் போதிலும், அதற்கு ஒரு தரப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே E20 பெட்ரோலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கடுமையாக சாடியுள்ள பாஜக எம்.பி. ஜனார்தன் மிஸ்ரா, "சுத்தமான பெட்ரோல் உங்க அப்பா வீட்டு சொத்தா?" என அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    மத்திய அரசு இப்போது பெட்ரோலில் எத்தனாலை கலக்கும் E20 திட்டத்திற்கு முழுமையாக ஆதரவு கொடுத்து வருகிறது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட மத்திய அரசு முழுமையாக ஆதரவு கொடுத்து வருகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதி தொடங்கி சுற்றுச்சூழல் மேம்பாடு வரை பல காரணங்களை மத்திய அரசு சொல்கிறது.

    Advertisement

    சர்ச்சை

    இதற்கிடையே பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை பாஜக எம்.பி. ஜனார்தன் மிஸ்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். "சுத்தமான பெட்ரோல் உங்க அப்பா வீட்டு சொத்தா?" என அவர் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் ரேவா தொகுதி பாஜக எம்பியான ஜனார்தன் மிஸ்ரா, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி சார்பு மற்றும் சர்வதேச சூழலை சுட்டிக்காட்டி எத்தனால் கலப்பு பெட்ரோலின் அவசியத்தை விளக்கினார்.

    இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய்யில் சுமார் 20 சதவீதத்தை மட்டுமே நாடு உள்நாட்டில் உற்பத்தி செய்வதாகவும், மீதமுள்ள 80 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் மிஸ்ரா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "சர்வதேச அளவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய்யை கொண்டு வருவதில் இப்போது சிக்கல்கள் நிலவுகின்றன. சில நேரங்களில் இந்தியாவுக்கு எண்ணெய் கொண்டு வரும் கப்பல்கள் கூடுதலாக சுமார் 18,000 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டிய சூழல் இருக்கிறது.

    Advertisement

    அப்பன் வீட்டு சொத்தா?

    இப்படிப்பட்ட சூழலில் பிரதமர் நரேந்திர மோடி பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்க வேண்டும் என்று கூறும்போது, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்குகிறார்கள்.. எத்தனால் வேண்டாம், சுத்தமான பெட்ரோல் வேண்டும் என்று ஒரு கோஷ்டி கேட்டு கொண்டு இருக்கிறார்கள். சுத்தமான பெட்ரோல் உங்க அப்பா வீட்டு சொத்தா? நாட்டிலேயே சுத்தமான பெட்ரோல் இல்லை என்றால், உங்களுக்கு மட்டும் அது எங்கிருந்து வரும்?

    நாம் மாற்று எரிபொருட்களை நோக்கி நகர வேண்டும். பிரேசிலை பாருங்கள். எத்தனால் பயன்பாட்டில் பிரேசில் முன்னணியில் இருக்கிறது. அங்கு முழுமையாக எத்தனால் மூலம் இயங்கும் வாகனங்கள் கூட உள்ளன. இந்தியாவிலும் அதுபோல எத்தனால் மட்டும் பயன்பாடும் வாகனங்களை நாம் உருவாக்க வேண்டும். எத்தனால் கலப்பதால் வாகனங்களின் இஞ்சின்களுக்கு பாதிப்பு ஏற்படாது. எனவே எத்தனால் கலப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்றது!" என்று அவர் ஆவேசமாக பேசினார். எத்தனால் மட்டுமின்றி பயோகேஸ், சிஎன்ஜி உள்ளிட்ட மாற்று எரிபொருட்களை ஊக்குவிக்கும் அரசின் முயற்சிகளையும் ஜனார்தன் மிஸ்ரா பாராட்டினார்.

    Advertisement

    குற்றச்சாட்டு

    இந்தியாவில் பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனால் கலக்கும் E20 திட்டம் தொடர்பாக தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. எத்தனாலை 20% பெட்ரோலில் கலப்பதால் பழைய வாகனங்களின் இன்ஜின் செயல்திறன், மைலேஜ் குறைவு மற்றும் சில பாகங்கள் பாதிக்கப்படுவதாக ஒரு தரப்பினர் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்கள். இதற்காக அவர்கள் போராட்டங்களிலும் இறங்கியுள்ளனர்.

    மறுப்பு

    இருப்பினும், இதை திட்டவட்டமாக மறுக்கும் மத்திய அரசு, E20 பெட்ரோல் தொடர்பாக விரிவான சோதனைகள் மற்றும் கள ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் இஞ்சினின் அசாதாரண தேய்மானம், அரிப்பு அல்லது வாகனத்தின் ஆயுட்காலம் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான ஆதாரம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி சார்பை குறைக்க உள்நாட்டில் கிடைக்கும் மாற்று எரிபொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நிலைப்பாடாக உள்ளது.

    English Summary

    BJP MP Janardan Mishra remark questioning those opposing E20 petrol has triggered controversy(E20 பெட்ரோல் போராட்டங்களால் அதிருப்தியில் பாஜக): BJP is not happy over E20 Petrol in tamil.