கிலோ முந்திரி வெறும் 50 ரூபாயா? இந்தியாவின் ஆச்சரியமான 'முந்திரி கிராமம்' - ஒரு விசித்திரப் பயணம்!

  • ராய்ப்பூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் ஒரு கிலோ முந்திரி ரூ 50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அந்த கிராமத்திற்கு சென்றால் நீங்கள் முந்திரியை கிலோ கணக்கில் இல்லை, மூட்டை மூட்டையாக அள்ளிக் கொண்டு செல்லலாம்.

    Advertisement

    நாவில் நீர் ஊறவைக்கும் சுவை, மொறுமொறுப்பான தன்மை.. முந்திரி என்றாலே நம் நினைவுக்கு வருவது அதன் ராஜ மரியாதையும், பாக்கெட்டை பதம் பார்க்கும் அதன் விலையும்தான்.

    Advertisement

    ஒரு கிலோ முந்திரி வாங்க வேண்டுமென்றால் குறைந்தது 800 முதல் 1000 ரூபாய் வரை செலவழிக்க வேண்டும். ஆனால், ஒரு கிலோ தக்காளி அல்லது உருளைக்கிழங்கு விற்கும் விலைக்கு முந்திரி விற்கும் ஒரு இடம் இந்தியாவில் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

    ஆம்! ஜார்கண்ட் மாநிலத்தின் ஜாம்தாரா மாவட்டத்தில்தான் இந்த அதிசயம் நடக்கிறது. 'ஜாம்தாரா' என்ற பெயரை கேட்டதும் பலருக்கு நெட்பிளிக்ஸில் வெளியான புகழ்பெற்ற 'சைபர் க்ரைம்' வெப் சீரிஸ்தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்த 'சைபர் திருடர்களின் தலைநகரத்திற்கு' பின்னால் ஒரு இனிப்பான பக்கமும் ஒளிந்திருக்கிறது.

    Advertisement

    சாலையோரக் குவியல்கள்: ஜாம்தாரா நகரிலிருந்து வெறும் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது 'நாலா' (Nala) என்ற கிராமம். இந்த கிராமத்திற்குள் நீங்கள் நுழைந்தால், சாலையின் இருபுறமும் காய்கறிகளைப் போல முந்திரிகள் குவித்து வைக்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். இங்கே ஒரு கிலோ முந்திரி வெறும் 30 ரூபாய் முதல் 100 ரூபாய்க்குள் கிடைக்கிறது.

    சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தப் பகுதி வறண்ட நிலமாகவே இருந்தது. 2010-ம் ஆண்டு ஜாம்தாராவின் மாவட்ட ஆட்சியராக இருந்த கிருபானந்த் ஜா என்பவர், இந்தப் பகுதியின் மண்ணும் தட்பவெப்ப நிலையும் முந்திரி சாகுபடிக்கு ஏற்றதாக இருப்பதைக் கண்டறிந்தார். அவரது முயற்சியால், வனத்துறை மூலம் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் முந்திரி கன்றுகள் நடப்பட்டன. இன்று அந்தப் பகுதி ஒரு பிரம்மாண்ட முந்திரித் தோட்டமாக உருவெடுத்துள்ளது.

    Advertisement

    ஏன் இவ்வளவு மலிவு?

    இவ்வளவு விளைச்சல் இருந்தும், இங்குள்ள விவசாயிகளின் நிலை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளது. இங்கு முந்திரியைப் பதப்படுத்தும் (Processing Plant) தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. இதனால், மரத்திலிருந்து பறிக்கப்படும் முந்திரிகளை அப்படியே விற்க வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர்.

    முறையான சந்தை வசதி இல்லாததால், இடைத்தரகர்கள் இன்றி நேரடியாகச் சாலையோரங்களில் மிகக் குறைந்த விலைக்கு விற்று விடுகின்றனர்.

    எதிர்கால நம்பிக்கை: "எங்கள் ஊரில் விளையும் முந்திரி உலகத்தரம் வாய்ந்தது. ஆனால், அதைச் சுத்திகரிக்க வசதி இல்லாததால் குறைந்த விலைக்கு விற்கிறோம். இங்கே ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டால், எங்கள் வாழ்வாதாரம் உயரும்" என்கிறார்கள் அந்த கிராம மக்கள்.

    Advertisement

    விலை உயர்ந்த முந்திரியை ஏழைகளும் வாங்கிச் சுவைக்கும் இடமாக 'நாலா' கிராமம் இருந்தாலும், அந்த விவசாயிகளின் உழைப்பிற்கு ஏற்ற விலை கிடைக்க ஒரு தொழிற்சாலை அமைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. அடுத்த முறை ஜார்கண்ட் பக்கம் சென்றால், இந்த 'முந்திரி சொர்க்கத்தை' எட்டிப் பார்க்க மறந்துவிடாதீர்கள்.

    English Summary

    A village in Jharkhand has grabbed attention for selling cashew nuts at an astonishingly low price of just ₹50 per kilogram. With cashew cultivation thriving in the area, visitors can reportedly buy the popular dry fruit in bulk, making the village a unique destination for bargain hunters and agricultural enthusiasts alike.