டெல்லி: ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த Gen-Z இளைஞர்களின் போராட்டம் பெரிய அளவில் கவனம் பெற்றிருந்த நிலையில், தற்போது Gen-Alpha மாணவர்களும் தங்கள் கோரிக்கைகளுக்காக ரோட்டில் இறங்கி போராடி.. வெற்றி பெற்றிருக்கின்றனர். Gen-Alpha மாணவர்களின் போராட்டம்தான் தற்போது ஹாட் டாப்பிக்!
2010-2024 காலக்கட்டத்தில் பிறந்தவர்களைதான் Gen-Alpha தலைமுறையினர் என்று சொல்கிறார்கள். இவர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி.. மொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்த Gen-Z இளைஞர்களை விட.. ரொம்பவே சூடானாவர்களாக இருக்கின்றனர்.
இவர்கள் கடந்த 2 நாட்களில் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் நடத்திய போராட்டங்கள் மூலம் பேசுபொருளாக மாறியிருக்கின்றனர். முதல் போராட்டம் மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் பகுதியில் உள்ள அரசு பெண்கள் பள்ளிக்காக நடந்தது. இந்த பள்ளியை இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முயற்சித்தது. இப்போது இருக்கும் இடத்திலிருந்து 8 கி.மீ தள்ளி, தௌத்கேடி எனும் கிராமத்தில் பள்ளியை மாற்ற முடிவெடுக்கப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவை நகர்ப்புற பகுதிகளில் இருந்தால்தான் போக்குவரத்துக்கு மிகவும் வசதியானதாக இருக்கும். கிராமப்புறங்களில் இருக்கிறது எனில், சரியான போக்குவரத்து வசதியுடன் அந்த கிராமம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இது எதுவும் இல்லாமல்.. பொட்டல் காட்டுக்கு நடுவே பள்ளியை மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையில் இறங்கியது. மாணவர்களும், பெற்றோர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 15 கி.மீ தள்ளி பள்ளியை மாற்றினால்.. பள்ளிக்கு போய் வரும் செலவு அதிகமாகும். கூலி வேலை செய்து குழந்தைகளை படிக்க வைக்கும் பெற்றோர்களால்.. எப்படி இந்த செலவை ஈடு செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பியிருந்தனர். என்ன சொன்னாலும் மாவட்ட நிர்வாகம் அதை காதில் வாங்கிக்கொண்டதை போல தெரியவில்லை. எனவே ஒரு கட்டத்தில் டென்ஷனான பள்ளி மாணவிகள் 300 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது 2 மாணவிகள் மயக்கமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள், "மாவட்ட ஆட்சியரிடம் நேருக்கு நேர் நின்று.. ஏழை மாணவர்கள் படித்து ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகக்கூடாதா? கல்வி என்பது எங்களின் அடிப்படை உரிமை. அதை எங்களிடமிருந் பறிக்க வேண்டாம்" என்று தைரியமாக பேசியிருக்கின்றனர். விஷயம் கையை மீறி போனதை உணர்ந்த மாவட்ட நிர்வாகம், மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்திருக்கிறது. இரண்டாவது சம்பவம் ராஜஸ்தானில் நடந்திருக்கிறது. அல்வார் மாவட்டம் தானாகாசி தாலுகாவுக்கு உட்பட்ட ஜோதவாஸ் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், மேற்கூரை இடிந்து விழுந்ததால்.. மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து ஒரு நாள் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆதாம் ஏவாள் கதையே பழசு என்று சொல்லுகிற அளவுக்கு.. ஆதி காலத்து கட்டிடமாக இந்த பள்ளி இருக்கிறது. கடந்த புதன் கிழமை திடீரென பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடியிருக்கிறார்கள். போதாத குறைக்கு மொத்தம் உள்ள 174 மாணவர்களுக்கு சேர்த்து ஒரே ஒரு ஆசியர் மட்டும்தான் இருக்கிறார். பள்ளிக்கு என 3 வகுப்பறைகள்தான் இருக்கின்றன. மழை பெய்தால்.. மேற்கூரை ஓழுகும். இதை இப்படியே விட்டால் உயிர் பலி வாங்கிவிடும் என்பதை உணர்ந்த மாணவர்களும், கிராம மக்களும் பள்ளியின் மெயின் கேட்டை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். உங்கள் பிள்ளைகளாக இருந்தால்.. இப்படி ஒரு பள்ளியில் படிக்க வைப்பீர்களா? என்று அதிகாரிகளிடத்தில் கேள்வி எழுப்பினர். போராட்டம் தீவிரமடைந்ததை உணர்ந்த கல்வித்துறை அதிகாரிகள், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து தற்காலிகமாக 7 ஆசிரியர் நியமக்கப்பட்டிருக்கின்றனர். புதிய கட்டிடம் கட்டுவதற்கு உயர் அதிகாரிகளுக்கு புரபோசல் அனுப்பப்பட்டிருக்கிறது. 48 மணி நேரத்தில் பள்ளிக்கு சாலை அமைத்து தரப்படும், மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும் என்று கூறியுள்ளனர். இப்படியாக Gen-Alpha மாணவர்கள் தங்கள் கோரிக்கையை வென்றுள்ளனர்.Gen-Alpha மாணவர்கள்
பள்ளி இடமாற்றம்
அலட்சிய போக்கு
போராட்டத்தில் மாணவர்கள்
இரண்டாவது சம்பவம்
பழைய கட்டிடம்
போராட்டம் வெற்றி