முதலீட்டை ஈர்க்க மதுபான கொள்கையை தளர்த்தும் குஜராத்.. ட்ரை ஸ்டேட் ஆக இருந்தாலும் முதலீடு முக்கியம்!

  • குஜராத் மாநில அரசு, தோலேரா சிறப்பு முதலீட்டு பகுதியில் (Dholera SIR) GIFT City போன்று மது விற்பனை மற்றும் நுகர்வு விதிகளை தளர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. குஜராத் மாநிலம் ஒரு ட்ரை ஸ்டேட் அதாவது மதுபானம் விற்கவோ, தயாரிக்கவோ, அருந்தவோ தடை செய்யப்பட்ட மாநிலம்.

    Advertisement

    இப்படியிருக்கையில் குஜராத் அரசு சமீபத்தில் வெளிநாட்டு முதலீட்டுகளை ஈர்க்கவும், புதிய நிறுவனங்களை கொண்டு வரவும் மதுபான கொள்கையில் பல்வேறு தளர்வுகளை செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக ஏற்கனவே குஜராத்தின் அடையாளமாக இருக்கும் கிஃப்டி சிட்டியில் சில கட்டுப்பாடுகள் உடன் மதுபானம் அருந்த வழிவகை செய்துள்ளது.

    Advertisement

    இதன் வழியில் உலகளாவிய நிறுவனங்களையும், உயர் தரமான தொழில்முறை வல்லுநர்களையும், முதலீடுகளையும் தோலேரா சிறப்பு முதலீட்டு பகுதியில் (Dholera SIR) ஈர்க்கும் நோக்கில் மதுபான கொள்கையில் இப்பகுதிக்கு தளர்வு அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஏன் இந்த மாற்றம்?

    தோலேரா, இந்தியாவின் முதல் பசுமை நகரமாக (Greenfield Smart City) உருவாக்கப்பட்டு வருகிறது. இங்கு டேட்டா சென்டர்கள், செமிகண்டக்டர் தொழிற்சாலைகள், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் உற்பத்தி துறைகளில் பெரிய அளவிலான முதலீடுகள் வரத் தொடங்கியுள்ளன.

    ஆனால், ட்ரை மாநிலமான குஜராத்தில் மது விற்பனை தொடர்பான கடுமையான விதிகள், வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிமாநில ஊழியர்களை ஈர்க்கும் வகையில் இல்லை என்று அரசு கருதுகிறது.

    Advertisement

    இதனால், GIFT City-யில் ஏற்கனவே அமலில் உள்ள தளர்வான மது கொள்கையை, தோலேராவிலும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு ஏற்ற வாழ்க்கைச் சூழலை உருவாக்க அரசு முயற்சித்து வருகிறது.

    என்னென்ன தளர்வுகள் வரலாம்?

    இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டால், தோலேரா SIR-இல் பின்வரும் விதிகள் அமலுக்கு வரக்கூடும்:

    வெளிநாட்டு பார்வையாளர்கள் மற்றும் வெளிமாநில ஊழியர்கள், அரசு வழங்கிய அடையாள அட்டையைக் காட்டி மட்டுமே மது அருந்தலாம். இதற்கு தனி அனுமதி தேவையில்லை.
    தோலேரா சிறப்பு முதலீட்டு பகுதியில் (Dholera SIR) பணிபுரியும் ஊழியர்கள், எளிதான முறையில் மது நுகர்வு அனுமதி பெறலாம்.
    அனுமதி பெற்றவர்கள், ஒரே நேரத்தில் ஐந்து விருந்தினர்களுக்கு மது பரிமாறலாம்.
    மது விற்பனை மற்றும் நுகர்வு, உரிமம் பெற்ற ஹோட்டல்கள், கிளப்கள் மற்றும் உணவகங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும்.

    Advertisement

    மேலும், GIFT City-யில் மதுபானத்தின் மீதான VAT வரி 65% இலிருந்து 25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதே வரி சலுகை தோலேராவுக்கும் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தோலேராவுக்கு என்ன பயன்?

    தோலேராவில் தற்போது உலகத் தரம் வாய்ந்த ஆடம்பர ஹோட்டல் ஒன்று கட்டி முடியும் நிலையில் உள்ளது. இது உலகளாவிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை வரவேற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மதுபான விதிகளை தளர்த்துவதன் மூலம், தோலேராவை உலகளாவிய வணிக மையமாக மாற்ற குஜராத் அரசு முயற்சிக்கிறது.

    இந்த நடவடிக்கை, தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் உயர் தரமான வேலைகளை உருவாக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஏற்ற வாழ்க்கைச் சூழலை வழங்க முடியும்.

    Advertisement

    தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும்?

    குஜராத் போன்ற ட்ரை மாநிலம் கூட, முதலீட்டை ஈர்க்க மது விற்பனையில் தளர்வுகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. முதலீட்டாளர்களை கவர்வதில் மாநிலங்களுக்கு இடையேயான போட்டி எந்த அளவுக்கு கடுமையாக இருக்கிறது என்பதை காட்டுகிறது.

    தமிழ்நாடு ட்ரை மாநிலம் அல்ல என்றாலும், TASMAC-இன் வர்த்தக முறை மற்றும் கடுமையான மது விற்பனை விதிகள், உயர் தரமான தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் திறமையான பணியாளர்களை ஈர்க்கும் வகையில் இல்லை என்பது நீண்ட கால குற்றச்சாட்டாகவே உள்ளது.

    தற்போதைய சூழலில், TASMAC-ஐ மேம்படுத்துவது மற்றும் இரவு நேர பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்துவது, உயர் தரமான வேலைகளையும், திறமையான இளைஞர்களையும் தமிழ்நாட்டுக்கு ஈர்க்க அவசியமாக உள்ளது. இல்லையெனில், மற்ற மாநிலங்கள் முதலீடுகளை வேகமாக இழுத்துச் செல்லும்.

    English Summary

    Gujarat, a traditionally dry state, is considering GIFT City-style liquor policy relaxations in Dholera SIR to attract international companies, foreign professionals, and large-scale investments in semiconductors and technology. The move highlights how states are competing aggressively to create business-friendly environments for global talent and capital.