“தனியார்மயம் ஆக்கப்படாது.. அப்படி ஒரு பிளானே இல்லை”.. இஸ்ரோ திட்டவட்டம்!

  • பெங்களூர்: இஸ்ரோ நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டுப் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கத் திட்டமிட்டு வருவதாக செய்திகள் பரவிய நிலையில், தனியார்மயமாக்கும் திட்டம் இல்லவே இல்லை என இஸ்ரோ திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    Advertisement

    தனியார் விண்வெளித் துறை அமைப்பான IN-SPACe-இன் தலைவர் பவன் கோயங்கா, எதிர்காலத்தில் ஏவுகணைகளையும், செயற்கைக் கோள்களையும் தயாரிக்கும் பணியிலிருந்து இஸ்ரோ விலகிக்கொள்ளும் என்றும், அந்தப் பணிகளைத் தனியார் துறையே மேற்கொள்ளும் எனவும் அண்மையில் தெரிவித்திருந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    ராக்கெட் தயாரிப்புப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு குறித்து அதிருப்தி தெரிவித்து, இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு இஸ்ரோ ஊழியர்கள் கடிதம் எழுதினர். இஸ்ரோவின் எதிர்கால திட்டம் குறித்து எழுத்துப்பூர்வமாக பதிலளிக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

    இஸ்ரோ ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்பது அமைப்புகள், விண்வெளி முகமையைத் தனியார்மயமாக்கும் அரசின் கொள்கை மற்றும் ஊழியர்களின் எதிர்காலம் குறித்துக் கேள்விகளை எழுப்பி, இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தன.

    இதனைத் தொடர்ந்து இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வெளியான தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை, தவறானவை. இஸ்ரோ ஒருபோதும் தனியார்மயம் ஆக்கப்படாது. அதன் முக்கியத்துவமும் எந்தக் காலத்திலும் குறையாது என்பதை நாங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். மேம்பட்ட விண்வெளி ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு, தேசிய மற்றும் மூலோபாய திட்டங்கள், விண்வெளி அறிவியல் ஆய்வுகளில் இந்தியாவின் முதன்மை நிறுவனமாக இஸ்ரோ தொடர்ந்து செயல்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    மேலும், விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பு என்பது இஸ்ரோவின் பங்கைக் குறைப்பதற்காக அல்ல என்றும், நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பங்களைச் சந்தைப்படுத்துவதில் தனியார் துறை ஈடுபடும்போது, நாட்டின் அடுத்தகட்ட மேம்பட்ட விண்வெளி திட்டங்களில் இஸ்ரோ கூடுதல் கவனம் செலுத்த இது வழிவகுக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    புதிய கட்டமைப்பின் கீழ், இஸ்ரோவின் திறன்களுக்குப் பக்கபலமாக விளங்கும் வகையில், விண்வெளி மதிப்புச் சங்கிலி முழுவதும் தனியார் தொழில்துறை, புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த சீர்திருத்தங்கள் விண்வெளித் துறையின் விரிவாக்கமே தவிர, தனியார்மயமாக்கல் அல்ல என்றும் இஸ்ரோ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    2020-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு, பின்னர் இந்திய விண்வெளிக் கொள்கை 2023 மற்றும் அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளின் படிப்படியான தாராளமயமாக்கல் ஆகியவற்றின் மூலம் நிறுவனமயமாக்கப்பட்ட சீர்திருத்தங்கள், உலகளவில் அதிக போட்டித்தன்மை கொண்ட விண்வெளிச் சூழலமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    English Summary

    ISRO has issued a strong clarification on its future role, rejecting speculation that the government's push to expand private sector participation in the space industry is aimed at privatising.