ஜார்க்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் 3 பேரும் ராஜினாமா.. கடும் போராட்டத்தால் முடிவு!

  • ராஞ்சி: ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (JPSC) நடத்திய தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் எழுந்த கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், தேர்வு ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

    Advertisement

    ஜார்க்கண்டில் பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராஞ்சியில் மாணவர் குழுக்களின் போராட்டம் 17-வது நாளை எட்டியுள்ள நிலையில், இரண்டு தனித்தனி மாணவர் குழுக்களுடன் நேற்று ஆறு மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, 14-வது ஜே.பி.சி.எஸ் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வின் முதல்நிலைத் தேர்வு உட்பட மூன்று தேர்வுகளை ரத்து செய்ய ஜார்க்கண்ட் அரசு ஒப்புக்கொண்டது.

    Advertisement

    14வது ஜேபிஎஸ்சி தேர்வு தொடர்பானதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து விசாரிக்க, அமலாக்க இயக்குநரகத்தை ஈடுபடுத்த வேண்டும் என்ற போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கும் அம்மாநில அரசு ஒப்புக்கொண்டது.

    பெரும் போராட்டங்களுக்கு மத்தியில், ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (JPSC) மூன்று உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்தனர். ஜார்க்கண்ட் லோக் பவன் வெளியிட்ட அறிக்கையின்படி, அஜிதா பட்டாச்சார்யா, அனிமா ஹன்ஸ்டா மற்றும் ஜமால் அகமது ஆகியோரின் ராஜினாமாவை ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் ஏற்றுக்கொண்டார்.

    மாணவர்களின் இரு குழுக்களைச் சந்தித்த குழுவில் அங்கம் வகித்த தொழில்நுட்ப மற்றும் உயர் கல்வி அமைச்சர் சுதிவ்ய குமார் சோனு, அரசு 98 சதவீத கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாகக் கூறியபோதிலும், ஜார்கண்ட் பணியாளர் தேர்வு ஆணையம் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டு, JPSC தொடர்பான அனைத்து தேர்வுகள் குறித்தும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் வரை தாங்கள் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

    English Summary

    Amid massive protests, three members of the Jharkhand Public Service Commission (JPSC) resigned. Jharkhand government agreed to cancel three examinations.