ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு வேலைக்கான தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறி போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள், இன்று ஜார்க்கண்ட் சட்டசபையை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து போலீசார் தண்ணீர் பீரங்கி, கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு மிகவும் குழப்பமான ஒரு சூழல் உருவானது.
ஜார்க்கண்ட் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் ஹேமந்த் சோரனின் 51-வது பிறந்தநாளான இன்று தான் இந்த போராட்டம் உச்சம் அடைந்தது. அம்மாநிலத்தின் பழைய சட்டசபை கட்டிடத்தின் அருகே காலை 10.30 மணியளவில் தொடங்கிய பேரணி, புதிய சட்டசபை வளாகத்தை நோக்கி சென்றது.
தேசிய கொடிகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்த போராட்டக்காரர்கள், போலீசார் அமைத்திருந்த பல்வேறு தடுப்புகளை தாண்டி சென்றனர். ஜகந்நாத்பூர் கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த இறுதி தடுப்பை போராட்டக்காரர்கள் நெருங்கியபோது, போலீசார் தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தினர். ஆரம்பத்தில் போராட்டக்காரர்கள் தேசியக் கொடிகளை அசைத்தபடியும் நடனமாடியபடியும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், சட்டசபையை நோக்கி தொடர்ந்து முன்னேற முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். சட்டசபையில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இருந்த போராட்டக்காரர்களை தொடர்ச்சியாக கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன. போலீசார் தங்களை தாக்கியதாக சில போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். இருப்பினும், பெரும்பாலான இடங்களில் போலீசார் தீவிர தாக்குதல் எதையும் நடத்தவில்லை என்றே தெரிகிறது. பல்வேறு தடுப்புகளை தாண்டி மாணவர்கள் வந்தபோதும் போலீசார் அமைதியாகவே இருந்தனர். சட்டசபை கட்டிடத்திற்கு மிக நெருக்கமாக வந்த பிறகே தாக்குதல்களை நடத்தினர். ஜார்க்கண்டில் நடந்து வரும் இந்த போராட்டம் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையம், ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் செயல்பாடுகளில் உடனடியாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. மேலும், 14வது ஜார்க்கண்ட் PSC சிவில் சர்வீசஸ் தேர்வு உள்ளிட்ட 13 தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் அல்லது ஜார்க்கண்டை சேராத ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் JLKM தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ, ஆம்புலன்ஸ் மூலம் சட்டசபை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றார். ஸ்ட்ரெச்சரில் படுத்தபடியே அவர் போராட்டத்தில் கலந்து கொண்டார். இது தொடர்பாக அவர், "ஒன்பது நாட்களாக உண்ணாவிரதம் இருந்தபோதிலும், மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்க ஆம்புலன்ஸில் வந்துள்ளேன். ஆனால் அரசு தண்ணீர் பீரங்கி, கண்ணீர் புகைக் குண்டுகளை பயன்படுத்தி எங்கள் குரலை அரசு ஒடுக்குகிறது. மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும். இந்த போராட்டம் தற்போது மக்கள் இயக்கமாக மாறிவிட்டது" அவர் கூறினார். இதற்கிடையே தேர்வு முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளும் தீவிரமடைந்துள்ளன. JSSC-CGL உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணையை தொடங்கியுள்ளது. மாநில சிஐடி பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் உள்ளிட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.போராட்டம்
போலீசார் தடியடி
ரத்து செய்ய வலியுறுத்தல்
ஆம்புலன்ஸ் மூலம்