கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு

  • இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவிருந்த முன்னாள் எம்.பி மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் ஆட்சேபனையைத் தொடர்ந்து மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

    Advertisement

    இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் காலியாக இருக்கும் 24 ராஜ்யசபா இடங்களை நிரப்ப இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 3 இடங்களுக்குத் தேர்தல் நடத்தப்படுகிறது. அங்கு பாஜக இரு இடங்களில் எளிதாக வெல்லும் சூழல் இருக்கிறது. இதற்கிடையே அங்குக் காங்கிரஸ் சார்பில் மீனாட்சி நடராஜன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அவர் வேட்புமனு தாக்கலும் செய்திருந்தார்.

    Advertisement

    நிராகரிப்பு

    இருப்பினும், அவரது வேட்புமனுவைத் தேர்தல் ஆணையம் நிராகரித்தது. மாநிலங்களவை தேர்தலுக்காக மீனாட்சி நடராஜன் தாக்கல் செய்த வேட்புமனுவில், அவர் மீதான ஒரு நீதிமன்ற வழக்கு குறித்த தகவலை மறைத்ததாகத் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் பாஜக புகார் அளித்தது. இந்தப் புகாரை ஆய்வு செய்த தேர்தல் அதிகாரி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் கீழ் விதிமுறைகளை மீறியதாகக் கூறி, மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை நிராகரித்தார்.

    என்ன காரணம்

    பாஜகவின் புகாரின்படி, 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஏ. ஸ்ரீலதா என்பவர் ஒரு வழக்கைத் தொடர்ந்தார். இதில் மீனாட்சி நடராஜன் நான்காவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 2025 செப்டம்பர் மாதம் நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு மீனாட்சி நடராஜன் தரப்பில் பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

    Advertisement

    இந்த வழக்கை ரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்தபோது, கடந்த நவம்பர் மாதம் இந்த வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்தத் தகவல்களை அவர் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடவில்லை என்பதே பாஜகவின் முக்கிய குற்றச்சாட்டு.

    காங்கிரஸ் விளக்கம்

    காங்கிரஸ் கட்சி இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுக்கிறது. இது ஒரு கிரிமினல் வழக்கு அல்ல என்றும், வெறும் சிவில் நோட்டீஸ் மட்டுமே என்றும் காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர். 10 கோடி ரூபாய் இழப்பீடு கோரி அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு வழக்கறிஞர் மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளது என்றும், அவர் மீது எந்த எப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்படவில்லை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் விவேக் தன்கா தெரிவித்துள்ளார். காந்தியின் கொள்கை கொண்ட ஒரு பெண்ணைக் கண்டு பாஜக பயப்படுகிறது என்று மபி எதிர்க்கட்சித் தலைவர் உமங் சிங்கார் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    மத்தியப் பிரதேசத்தைப் பொறுத்தவரை மொத்தம் 3 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 230 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 164 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனால் இரண்டு இடங்களை அவர்கள் எளிதாக வெல்ல முடியும். காங்கிரஸிடம் 63 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஆனால் இருவர் வாக்களிக்கத் தகுதியற்றவர்கள் என்பதால், அக்கட்சியின் பலம் 61 ஆக உள்ளது.

    அரசியல் சூழல்

    மூன்றாவது இடத்தைக் கைப்பற்ற இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. காங்கிரஸ் தனது எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்க அவர்களை கர்நாடகாவிற்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டு, தனி விமானத்தையும் தயார் செய்திருந்தது. ஆனால், மீனாட்சி நடராஜனின் மனு நிராகரிக்கப்பட்டதால், இப்போது அந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது பாஜகவுக்குச் சாதகமாக முடிந்துள்ளது.

    Advertisement

    இந்த விவகாரம் தொடர்பாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தலைமையிலான குழு டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால், முறையான முன் அனுமதி பெறாததால் அதிகாரிகளைச் சந்திக்க முடியவில்லை. புதன்கிழமை இது குறித்து விரிவான மனுவை அளிக்கக் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    English Summary

    Nomination of its Rajya Sabha candidate Meenakshi Natarajan has been rejected by the returning officer following an objection raised by the BJP(மத்திய பிரதேச ராஜ்யசபா தேர்தல் நாமினேஷன்): Madhya Pradesh Rajya Sabha Election latest news in tamil.