மோடி அரசு சீக்கிரமே கவிழப்போவது உறுதி.. பொடி வைத்து பேசும் மம்தா.. உற்று கவனிக்கும் பாஜக தலைகள்!

  • கொல்கத்தா: மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜக தலைமையிலான புதிய அரசு அங்கே பொறுப்பேற்றுள்ள நிலையில், அங்கு அரசியல் களம் மொத்தமாக மாறியுள்ளது. பாஜகவுக்கு எதிரான அரசியலை ஆரம்பித்துள்ள மம்தா பானர்ஜி, டெல்லியில் ஆளும் பாஜக விரைவில் தூக்கியெறியப்படும் என அதிரடியாக விமர்சித்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாடு உடன் மேற்கு வங்கத்திலும் தேர்தல் நடந்த நிலையில், அங்கும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக அங்கு மம்தா தலைமையிலான திரிணாமுல் அரசு ஆட்சி செய்த நிலையில், இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுவேந்து அதிகாரி தலைமையிலான புதிய பாஜக அரசு பதவியேற்றதுள்ளது.

    Advertisement

    திரிணாமுல்

    புதிய அரசு வந்தது முதலே அங்குள்ள நடைபாதை வியாபாரிகள் மற்றும் சிறுபான்மையினர் இலக்கு வைக்கப்படுவதாகத் திரிணாமுல் காங்கிரஸ் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இந்தச் சூழலில், மம்தா பானர்ஜி தனது இல்லத்தில் நடத்திய திரிணாமுல் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பாஜகவுக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

    பாஜக அகற்றப்படும்

    அந்தக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, "மாநிலத்தில் புதிதாக அமைந்துள்ள பாஜக அரசு நமது அரசியல் சாசனத்தைச் சிதைத்து வருகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய வன்முறைகள் என்ற பெயரில் சிறுபான்மைச் சமூகத்தினர் திட்டமிட்டு டார்கெட் செய்யப்படுகிறார்கள். ஏழை நடைபாதை வியாபாரிகளின் கடைகள் புல்டோசர்கள் கொண்டு இடித்துத் தள்ளப்படுகின்றன. ஆனால், இந்த அராஜகம் நீண்ட காலம் நீடிக்காது.. டெல்லியில் உள்ள பாஜக அரசும் மிக விரைவில் அதிகாரத்தில் இருந்து அகற்றப்படும்" என ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார்.

    Advertisement

    மம்தாவின் உறவினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜியின் இல்லத்திற்கு கொல்கத்தா மாநகராட்சி நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் அனுமதியற்ற கட்டுமானங்களை இடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதில் விஷயம் என்னவென்றால் இந்த நோட்டீஸை அனுப்பிய கொல்கத்தா மாநகராட்சி இன்னும் திரிணாமுல் காங்கிரஸின் பிடியில்தான் உள்ளது. மம்தாவின் மிக நெருங்கிய ஆதரவாளரான ஃபிர்ஹாத் ஹக்கிம் தான் இன்னமும் கொல்கத்தாவின் மேயராகப் பதவியில் இருக்கிறார். அப்படியிருக்கும் போது அபிஷேக் வீட்டிற்கு நோட்டீஸ் வந்தது பேசுபொருள் ஆகியுள்ளது.

    அபிஷேக் பானர்ஜி

    இந்த நோட்டீஸ் விவகாரம் குறித்துக் கூட்டத்தில் பேசிய அபிஷேக் பானர்ஜி, "பாஜகவினர் தங்களுக்கு வேண்டியதைச் செய்து கொள்ளட்டும். என் வீட்டை இடித்தாலும் சரி, எத்தனை நோட்டீஸ்கள் அனுப்பினாலும் சரி, இதற்கெல்லாம் நான் அஞ்சப் போவதில்லை. என்ன நடந்தாலும் பாஜகவுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும்" எனச் சவால் விட்டுள்ளார்.

    Advertisement

    மேலும், தற்போதைய முதலமைச்சர் சுவேந்து அதிகாரியை 2014ம் ஆண்டின் நாரதா ஸ்டிங் ஆபரேஷன் ஊழல் வழக்கைக் குறிப்பிட்டுச் சாடிய அவர், "மேற்கு வங்கம் எத்தனையோ முதலமைச்சர்களைப் பார்த்திருக்கிறது, ஆனால் கேமராவிற்கு முன்னால் லஞ்சம் வாங்கிய ஒரு நபர் முதலமைச்சராக அமர்ந்திருப்பது நமது மாநில வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை" என ஆவேசமாகச் சாடினார்.

    போராட்டம்

    பாஜக அரசின் இந்த அதிரடி ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராகத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நாளை கொல்கத்தாவில் பிரம்மாண்டப் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது. கொல்கத்தாவின் பாலிகுஞ்ச், ஹவுரா சந்திப்பு மற்றும் சீல்டா நிலையம் ஆகிய மூன்று மிக முக்கிய இடங்களில் புல்டோசர் நடவடிக்கைகளுக்கு எதிராகப் பிரம்மாண்டப் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

    English Summary

    TMC Chief Mamata Banerjee and MP Abhishek Banerjee launched a fierce attack on CM Suvendu Adhikari's newly formed BJP government(மத்திய அரசை மிக கடுமையாக சாடிய மம்தா): Mamata Banerjee targets BJP latest news in tamil.