இந்தியாவின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதிலும் முக்கிய மைல்கல்லை ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) நிறுவனம் எட்டியுள்ளது.
அந்தமான் ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர ஆய்வுப் பணிகளில், இரண்டாவது முறையாகப் இயற்கை எரிவாயு இருப்பு (Natural Gas Discovery) கண்டறியப்பட்டுள்ளது. இந்த படுகையானது, வரும் காலங்களில் இந்தியாவின் மிக முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி மையமாக உருவெடுத்துள்ளது.
இதுக்குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் முக்கியத் தரவுகளைப் பகிர்ந்துள்ளார். அந்தமான் தீவுகளின் கிழக்குக் கடற்கரையிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில், 355 மீட்டர் கடல் ஆழத்தில் அமைந்துள்ள 'ஸ்ரீ விஜயபுரம்-3' (Sri Vijayapuram-3) என்ற ஆய்வு கிணற்றில் இந்த இயற்கை எரிவாயு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஈசீன் (Eocene) பாறை அமைப்பில், 1900 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட உற்பத்தி சோதனைகளின் போது, தொடர்ச்சியான எரிவாயு வெளியேற்றம் (Continuous flaring) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மத்திய அரசால் 2025 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட "சமுத்திர மந்தன்" (National Deep Water Exploration Mission) என்ற தேசிய ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்தின் கீழ் இந்த அதிரடிப் பணிகள் தொடங்கப்பட்டன. அந்தமான் கடல் பகுதியில் இதுவரை ஆயில் இந்தியா நிறுவனம் தோண்டிய 3 ஆய்வு கிணறுகளில், 2 கிணறுகள் எரிசக்தி இருப்பை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன. இதற்கு முன்னதாக, கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் இதே பகுதியில் உள்ள 'ஸ்ரீ விஜயபுரம்-2' கிணற்றில் 87 சதவீதம் உயர்தர மீத்தேன் கொண்ட இயற்கை எரிவாயு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலகப் புகழ்பெற்ற "கயானா பாணி" (Guyana-style) பிரம்மாண்ட ஆழ்கடல் எண்ணெய் வளத்தைப் போல, இந்த அந்தமான் கடல் படுகையிலும் சுமார் 184 பில்லியன் லிட்டர் (307 முதல் 370 மில்லியன் மெட்ரிக் டன்) எரிசக்தி வளங்கள் இருக்கலாம் என ஆரம்பக்கட்ட நில அதிர்வு (Seismic) தரவுகள் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பானது இந்தியாவின் பொருளாதார இறக்குமதிச் சுமையைக் குறைப்பதில் ஒரு மிகப்பெரிய கேம் சேஞ்சராக (Game Changer) அமையப்போகிறது. ஏனெனில், இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. இதனால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம், நாட்டின் பணவீக்கம் அதிகரித்து பெட்ரோல், டீசல் விலையும் எகிறுகிறது. தற்போது அந்தமான் கடலில் கண்டறியப்பட்டுள்ள இந்த இயற்கை எரிவாயுவின் தரம், கலவை மற்றும் வணிக ரீதியான சாத்தியக்கூறுகள் குறித்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுத் தீவிர ஆய்வுகள் நடந்து வருகின்றன.'சமுத்திர மந்தன்' திட்டம்
85% இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி?