“நீட் வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்களை தூக்கில் போடுங்க” தற்கொலை செய்த மாணவியின் தாயார் வேண்டுகோள்

  • டெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும், இது மட்டும் போதாது என்றும் வினாத்தாள் கசிவுக்கு காரணமான குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று நீட் மறு தேர்வு மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Advertisement

    மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் படித்து வந்த 18 வயது மாணவி அகான்ஷா சதுர்வேதி, நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பால் மன உளைச்சல் அடைந்து கடந்த மே 20 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.

    Advertisement

    இந்நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இளைஞர்களின் தொடர் போராட்டத்தால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அகான்ஷாவின் தாயார் நீலம் சதுர்வேதி, "எந்த ஒரு நடவடிக்கையும் என் மகளை மீண்டும் கொண்டு வரப்போவதில்லை. கல்வி அமைச்சரின் ராஜினாமாவில் எங்களுக்கு எந்தத் திருப்தியும் இல்லை.

    மாணவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், ஒரு அமைச்சர் ராஜினாமா செய்வதால் மட்டும் அவரது பொறுப்பு முடிந்துவிடாது. வினாத்தாள் கசிவில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.

    மத்திய பிரதேசத்தை சேர்ந்த அகான்ஷாவின் குடும்பம் மகளின் மருத்துவக் கனவுக்காக நாக்பூருக்குக் குடிபெயர்ந்தது. அகான்ஷாவின் தந்தை ஒரு சிறிய நிலத்தில் விவசாயம் செய்து கொண்டே, மகளின் நீட் பயிற்சி வகுப்புக் கட்டணத்திற்காக நாக்பூரில் சமையல் வேலையும் செய்து வந்தார். ஒட்டுமொத்த குடும்பத்தின் கனவாகவும் அகான்ஷாவின் மருத்துவப் படிப்பு இருந்தது.

    Advertisement

    நீட் தேர்வில் 650-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெறுவேன் என்று நம்பிக்கையுடன் இருந்தார் அகான்ஷா. நீட் முறைகேட்டால் மறு தேர்வு என்ற அறிவிப்பு, அகான்ஷாவின் கனவில் மண்ணள்ளிப் போட்டது. மன உளைச்சலில் அவர் தற்கொலை எனும் முடிவைத் தேர்ந்தெடுத்தார். மகளின் மறைவுக்குப் பிறகு, அவரது தந்தைக்கு இருமுறை மாரடைப்பு ஏற்பட்டுத் தற்போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    அகான்ஷா எழுதிய தற்கொலை குறிப்பில், "அம்மா, அப்பா, உங்கள் மகள் நன்றாகப் படித்து டாக்டர் ஆவாள் என்று நீங்கள் நம்பினீர்கள். ஆனால் மீண்டும் நீட் தேர்வு எழுத எனக்குத் தைரியம் இல்லை. முதல் முறையில் நான் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருப்பேன், ஆனால் மறுத்தேர்வில் மீண்டும் என்னால் சிறப்பாகச் செயல்பட முடியுமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
    என்னை மன்னித்து விடுங்கள் அம்மா, அப்பா... நான் எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டேன்" என்று எழுதியிருந்தார்,

    Advertisement

    நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் மறுதேர்வு அழுத்தத்தால் நாடு முழுவதும் 20 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் ஒரு மாத காலமாகத் தொடர்ந்த போராட்டங்களையடுத்து செவிசாய்த்துள்ளது மத்திய அரசு.

    English Summary

    The mother of a NEET aspirant akanksha, who had died by suicide, now demanded nothing but the death penalty for the paper leak culprits.