ஜெய்ப்பூர்: நம் நாடு சுதந்திரமடைந்து 79 ஆண்டுகள் ஆகும் நிலையில் முதல் முறையாக கிராமத்துக்குள் வந்த அரசு பஸ்சை பார்த்து கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
இந்தியா சுதந்திரமடைந்து 79 ஆண்டுகள் ஆகிவிட்டது. அனைத்து கிராமங்களுக்கும் அடிப்படை வசதிகள் கிடைத்து விட்டது என்ற நினைத்தால் அதுதான் தவறு. இன்னும் கூட ஒவ்வொரு மாநிலங்களிலும் பல கிராமங்கள் அடிப்படை வசதிகள் இன்றி உள்ளன. குறிப்பாக பல கிராமங்களில் பஸ் வசதிகள் இல்லை. அதில் ஒரு கிராமம் தான் ராஜஸ்தான் மாநிலம் குர்தால் மற்றுமு் கிரோட் கிராமங்கள். சுதந்திர இந்தியாவில் கடந்த 79 ஆண்டுகளாக இந்த கிராமங்களுக்குள் பஸ் சென்றதே கிடையாது. கிராம மக்கள் எங்காவது செல்ல வேண்டும் என்றால் சைக்கிள், டூவீலர் இல்லாவிட்டால் நடந்தே தான் செல்ல வேண்டும். தங்களின் கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் நீண்டகாலமாக அரசும், அரசு அதிகாரிகளும் செவிசாய்க்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில் தான் இறுதியாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி முதல் முறையாக குர்தால், கிரோட் கிராமங்களுக்கு அரசு பஸ் சேவை வழங்கப்பட்டுள்ளது. கிராமத்திற்குள் வந்த இந்த பஸ்சை பார்த்த மக்கள் மேளதாளத்துடன் ஆடிப்பாடி வரவேற்றனர். ஆரத்தி எடுத்தனர். பஸ்சுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டது. பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களை கவுரவித்தனர். தலையில் 'டர்பன்' (தலைப்பாகை) அணிவித்தனர். மாலை போட்டு கவுரவித்தனர். மேலும் பலரும் புதிதாக வந்த அரசு பஸ்சின் முன்னால் நின்று செல்போனி்ல செல்பி எடுத்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.