லக்னோ: அயோத்தி ராமர் கோயிலில் நடந்த திருட்டு இப்போது பெரிதாக வெடித்துள்ளது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ராமர் கோயில் தொடர்பான தகவல்களை கேட்க முடியாது என மத்திய அரசு அளித்துள்ள விளக்கம் பேசுபொருளாகியுள்ளது.
ராமர் கோயில் உண்டியல் தொடர்பாக நடந்த மிக பெரிய முறைகேடு இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் பல பூதாகரமான தகவல்கள் வெளியே வருகிறது. இதற்கிடையே ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்திருந்த விளக்கம் இப்போது வேகமாக பரவி வருகிறது.
அயோத்தியில் உள்ள ராமர் கோவில் வளாகத்தை நிர்வகிக்கும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளை, மத்திய அரசுக்கோ அல்லது உத்தரப் பிரதேச அரசுக்கோ பதிலளிக்கக் கடமைப்பட்டது அல்ல என்றும் தனது சொந்த முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரம் அதற்கு உண்டு என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது. மத்திய தகவல் ஆணையத்திடம் கடந்தாண்டு சமர்ப்பிக்கப்பட்ட இந்த தகவல், ராமர் கோவில் நன்கொடை திருடப்பட்ட விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது இந்த சமயத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திர அறக்கட்டளை என்பது ஒரு முழுமையான சுதந்திரமான அமைப்பு என்று குறிப்பிட்டுள்ளது. ராமர் அறக்கட்டளையை மத்திய அரசோ அல்லது மாநில அரசோ கட்டுப்படுத்தாது என்பதோடு, இந்த அமைப்புக்கு அரசு சார்பில் நிதியும் வழங்கப்படுவதில்லை என்று கூறப்பட்டு இருந்தது. கடந்த 2019 நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் உத்தரவுக்கு இணங்க மட்டுமே இந்த அறக்கட்டளை உருவாக்கப்பட்டது என்றும் இதில் மத்திய அரசின் பங்கு வெறும் வழிகாட்டுதலாக மட்டுமே இருப்பதாகவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அறக்கட்டளையின் நிதி, நிர்வாகம் என எதிலும் அரசுக்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது என்பதால் அதன் செயல்பாடுகள் குறித்து முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அந்த அறக்கட்டளைக்கே உரியது என்று கூறப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த அறக்கட்டளை குறித்த விவரங்களைக் கோரி விண்ணப்பதாரர் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் அரசு இந்த அறக்கட்டளை உருவாக்கியுள்ளதாகவும், அதன் பெரும்பாலான அறங்காவலர்களை அரசே நியமித்து இருப்பதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் ஒரு பொது அதிகாரம் கொண்ட அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று விண்ணப்பதாரர் வாதிட்டார். மேலும், கையகப்படுத்தப்பட்ட சுமார் 70 ஏக்கர் நிலமும் இந்த அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த மத்திய தகவல் ஆணையம், ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திர அறக்கட்டளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராது என தீர்ப்பளித்தது. நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் இந்த அறக்கட்டளை உருவாக்கப்படவில்லை, மாறாக உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரிலேயே உருவாக்கப்பட்டது என்பதை ஆணையம் சுட்டிக்காட்டியது. மேலும், இது அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லை என்பதோடு, அரசின் நிதி உதவியும் இதற்கு வழங்கப்படாததால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்க வேண்டிய கட்டாயம் இந்த அறக்கட்டளைக்கு இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த விளக்கம் வந்து ஓராண்டு ஆகிவிட்டது என்றாலும் கூட இப்போது ராமர் கோயில் உண்டியலில் பணம் திருடப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இது இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது. ஒருவேளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த அறக்கட்டளை இருந்திருந்தால் கூட வெளிப்படைத்தன்மை இருந்திருக்குமோ என சிலர் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இந்தத் திருட்டு விவகாரம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த பல மாதங்களாக திட்டமிட்டு நன்கொடை பணத்தை திருடி வந்துள்ளனர். கோவிலில் உள்ள சிசிடிவி கேமராக்கள் எங்கே உள்ளது என்பதை கண்டுபிடித்து, அதை மறைத்து உண்டியல் பணத்தை திருடியுள்ளனர். முதலில் வளாகத்திற்குள் இருக்கும் கழிவறைகளில் மறைத்து வைத்து, பின்னர் வெளியே கொண்டு சென்றுள்ளனர். வீடியோக்கள் அனைத்தும் 45 நாட்களில் டெலிட் ஆகிவிடுவதால் இதை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்தது.அயோத்தி ராமர் கோயில்
விளக்கம்
பின்னணி
வராது
அயோத்தி விவகாரம்