சபரிமலையில் துலாம் மாத பூஜைக்கான நடைத் திறப்பு! பஸ்கள் இல்லாததால் முதல் நாளே பக்தர்கள் சாலை மறியல்!

  • சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி/ துலாம் மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்ட முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Advertisement

    சபரிமலை ஐயப்பன் கோயில் துலாம் மாத (ஐப்பசி மாத பிறப்பு) பூஜைக்காக நேற்றைய தினம் நடை திறக்கப்பட்டது. தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் ஐயப்பனை தரிசிக்க ஏராளமானோர் சபரிமலைக்கு வந்திருந்தனர்.

    Advertisement

    நிலக்கல்- பம்பை வழித்தடத்தில் போதிய கேரள அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. அந்த பகுதியில் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அவ்வழியே பேருந்துகள் அதிகம் இயக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

    நீண்ட நேரம் பேருந்துக்காக காத்திருந்த பக்தர்கள் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர்.

    அது போல் கோயிலிலும் அதிக கூட்டம் வந்ததால் அங்கு கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    Advertisement

    ஏற்கெனவே கோயிலில் கூட்ட நெரிசலில் பெரும் அவதியுடன் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள், பேருந்து கிடைக்காததால் மேலும் ஆத்திரம் அடைந்தனர். இந்த நிலையில் நிலக்கல்- பம்பை வழித்தடத்தில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் அட்டோடு வரை நீடித்தது.

    இதனிடையே அவ்வழியில் ஏற்பட்ட ஒரு விபத்தால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால்தான் சாமி தரிசனம் முடித்துவிட்டு திரும்பிய பக்தர்கள் போதிய பேருந்துகள் இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    ஐப்பசி மாத பூஜையின் போது ஐயப்பனை தரிசிக்க முதல் மூன்று நாட்களுக்கு ஆன்லைன் மூலம் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்களுக்கு மட்டும் தலா 60 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர்.

    Advertisement

    இதனால் ஸ்பாட் புக்கிங் மூலமாக வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் என தெரிகிறது. அடுத்த மாதம் வருடாந்திர மண்டல, மகரவிளக்கு சீசன் தொடங்குகிறது. இது 41 நாட்கள் இருக்கும்.

    ஐப்பசி மாத தொடக்கத்திலேயே போக்குவரத்து பிரச்சினை, கூட்டத்தை கட்டுப்படுத்தாது உள்ளிட்டவைகளால் பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ள நிலையில் மகரவிளக்கு சீசன் எப்படி இருக்குமோ என்ற கவலை பக்தர்களுக்கு தொற்றிக் கொண்டது.

    மேலும் நிலக்கல்- பம்பை இடையே சாலை சீரமைப்பு பணிகளையும் விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லாவிட்டால் அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ள வருடாந்திர சீசனும் பெரும் குழப்பத்திலேயே முடியும் என பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    தற்போது துலாம் பூஜைக்காக திறக்கப்பட்ட நடை அக்டோபர் 22 ஆம் தேதி வரை இருக்கும். அதன் பிறகு நடை அடைக்கப்பட்டு மகரவிளக்கு சீசனுக்காக நவம்பர் 16ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும்.

    English Summary

    Sabarimala Iyappan temple issue: Devottees are affected for lack of buses ply from Nilackal to Pampa during first day of Ippasi season.