காந்திநகர்: ஜவுளிக்கடை உரிமையாளர் ஒருவர் தன்னிடம் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு தலா ரூ.1 லட்சத்தை தீபாவளி போனஸாக வழங்கி அசத்தி உள்ளார். இவ்வளவு பெரிய தொகையை எதிர்பார்க்காத ஊழியர்கள் கண்கலங்கி நன்றி சொன்ன வீடியோ இணையதளத்தில் கவனம் பெற்றுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களுக்கு போனஸ், ஸ்வீட் பாக்ஸ், பட்டாசுகள் வழங்கி வருகின்றன. தீபாவளி பண்டிகையை தங்களின் ஊழியர்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக இந்த போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் அல்லது அதனை விட குறைவான தொகையை போனஸாக வழங்குகின்றன. ஆனால் சில நிறுவனங்கள் தீபாவளி போனஸாக ஊழியர்கள் எதிர்பார்க்காத 'கிப்ட்'களையும் தற்போது வழங்க தொடங்கி உள்ளன. அந்த வகையில் குஜராத்தின் சூரத்தில் ஜவுளிக்கடை நடத்தி வரும் ஒருவர் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி வழங்கி உள்ளார். சூரத்தின் மோட்டா வரச்சா பகுதியில் ராம்ஸ்வரூப் முண்டே என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது ஜவுளிக்கடையில் 20 பேர் ஊழியர்களை பணியாற்றி வருகின்றனர். இந்த 20 ஊழியர்களுக்கும் தற்போது தீபாவளி போனஸ் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 லட்சம் ரொக்கப்பணம், ஸ்வீட் உள்ளிட்டவற்றை வர் தீபாவளி போனஸாக வழங்கி உள்ளார். இதனை எதிர்பார்க்காத ஊழியர்கள் ஆனந்த் கண்ணீர் வடித்தனர். ஜவுளிக்கடை உரிமையாளர் ராம்ஸ்வரூப் முண்டேவை அன்போடு கட்டியணைத்து நன்றி தெரிவித்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் ராம்ஸ்வரூப் முண்டேவை பாராட்டி வருகின்றனர். இதுபற்றி ராம்ஸ்வரூப் முண்டே கூறுகையி்ல, ''என்னிடம் பணியாற்றும் 20 பேரும் வெறும் ஊழியர்கள் இல்லை. அவர்களை என்னுடைய குடும்ப உறுப்பினர்களாக பார்க்கிறேன். இதனால் அவர்கள் ஏன் பணக்கஷ்டத்தில் தீபாவளி கொண்டாட வேண்டும்? என்று நினைத்தேன். தீபாவளியையொட்டி அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ரொக்கப்பணம் கொடுத்து வாங்க வேண்டும். அவர்களின் முகத்தில் உண்மையாகவே புன்னகை மலர வேண்டும் என்று நான் விரும்பினேன். இதனால் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் கிப்ட்டுகளை தீபாவளி போனஸாக வழங்கி உள்ளேன்'' என்றார். இந்த போனஸ் தொடர்பாக அவரிடம் வேலை செய்யும் ரேகாபென் பலாடா என்ற ஊழியர் கூறுகையில், ''எங்களுக்கு இவ்வளவு பெரிய தொகை தீபாவளி போனஸாக கிடைக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. நான் புதிதாக வீடு வாங்க நினைத்தேன். அதற்கு பணம் தேவையாக இருந்தது. இந்த பணம் வீடு வாங்க உதவும்'' என்றார்.