சொந்த கட்சியில் இருந்தே நீக்கப்படும் மம்தா? திரிணாமுல் MLAக்கள் கூட்டத்தில் காத்திருந்த அதிர்ச்சி

  • கொல்கத்தா: மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தனது சொந்த கட்சியிலேயே ஓரங்கட்டப்படுகிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அதன் வரலாற்றிலேயே மிக மோசமான உட்கட்சி மோதலைச் சரிவைச் சந்தித்து வருகிறது. இன்று நடந்த திரிணாமுல் எம்எல்ஏ கூட்டத்தில் மொத்தமுள்ள 80 எம்எல்ஏக்களில் வெறும் 8 பேர் மட்டுமே கலந்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    மேற்கு வங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர் மம்தா. அந்தக் காலகட்டத்தில் ஒட்டுமொத்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் அவரது கண்ட்ரோலில் தான் இருந்தது. ஆனால், தேர்தல் தோல்விக்குப் பிறகு நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. சொந்தக் கட்சியிலேயே அவரை ஓரங்கட்ட ஆரம்பித்துவிட்டனர். இது மம்தாவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.

    Advertisement

    வெறும் 8 பேர்

    சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிடம் மம்தா பானர்ஜி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவரது தலைமைக்கு எதிராகக் கட்சிக்குள் பெரும் கிளர்ச்சி வெடித்துள்ளது. மம்தா பானர்ஜியின் கொல்கத்தா இல்லத்தில் வெள்ளிக்கிழமை அன்று அவசரக் குழுக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. இதில் அனைத்து எம்எல்ஏக்களும் வர வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், அங்கே வந்திருந்த கூட்டத்தைப் பார்த்த கட்சித் தலைமை அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டது. சில நாட்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தை 60 எம்எல்ஏக்கள் புறக்கணித்த நிலையில், இன்று நடந்த கூட்டத்தில் நிலைமை அதை விட மோசம். மொத்தமுள்ள 80 எம்எல்ஏக்களில் வெறும் 8 பேர் மட்டுமே அதில் கலந்து கொண்டனர்.

    Advertisement

    கைவிட்டனர்

    எம்எல்ஏக்கள் மட்டுமல்லாமல், எம்பிக்களும் கூட மம்தாவை கைவிட்டுவிட்டனர். லோக்சபாவில் திரிணாமுல் காங்கிரஸுக்கு இருக்கும் 28 எம்பிக்களில் வெறும் 4 பேர் மட்டுமே வந்திருந்தனர். அதில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜியும் ஒருவர். அதேபோல 13 ராஜ்யசபா எம்பிக்களில் டெரெக் ஓ பிரையன், டோலா சென் ஆகிய 2 பேரைத் தவிர மற்ற 11 பேரும் கூட்டத்தைப் புறக்கணித்தனர். எம்எல்ஏக்கள் தரப்பில் ஃபிரஹாத் ஹக்கீம், குணால் கோஷ், மதன் மித்ரா உள்ளிட்ட 8 பேர் மட்டுமே நேரில் வந்தனர்..

    ஆதரவு

    திரிணாமுல் காங்கிரஸில் இருந்து மம்தாவால் விலக்கப்பட்ட ரிதாப்ரதா பானர்ஜிக்கு ஆதரவாகப் பல எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். அவரை தான் எதிர்க்கட்சித் தலைவராகவும் தேர்வு செய்துள்ளனர். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரிதாப்ரதா பானர்ஜி சில அதிரடி குண்டுகளை வீசியுள்ளார். அதாவது அவர், "அதிருப்திப் பட்டியலில் இருக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும். ஏற்கனவே 2/3 பங்குக்கும் அதிகமான எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் உள்ளனர். சட்டமன்றக் கூட்டத்தொடர் நடக்கும்போது இந்த எண்ணிக்கை இன்னும் உயரும்" என்று நேரடிச் சவால் விடுத்துள்ளார்.

    Advertisement

    காரணம் என்ன

    மம்தா பானர்ஜி தனது சொந்தத் தொகுதியான பவானிபூரிலேயே சுவேந்து அதிகாரியிடம் தோற்றதுதான் இந்த ஒட்டுமொத்தப் புரட்சிக்கும் பிள்ளையார் சுழி போட்டது. அதன் பிறகுதான் தலைமைக்கு எதிரான குரல்கள் வெளிப்படையாக எழ தொடங்கியது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர மம்தா முதலில் இரண்டு எம்எல்ஏக்களைக் கட்சியிலிருந்து நீக்கினாலும், நிலைமை கைமீறிப் போய்விட்டது.

    இப்போதுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களில் குறைந்தது 20 பேர் தற்போது பாஜகவுடன் தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆட்சி அதிகாரத்தை இழந்த கையோடு, கட்சியில் இருக்கும் எம்எல்ஏ, எம்பிக்களையும் தக்க வைக்க முடியாமல் தவித்து வரும் தீதி மம்தா பானர்ஜி, இந்த இக்கட்டான அரசியல் சுனாமியிலிருந்து எப்படித் தப்பிக்கப் போகிறார் என்பதே இப்போது பெரிய கேள்வியாக உள்ளது.

    English Summary

    Trinamool Congress faces its worst internal rebellion following the election defeat(மேற்கு வங்கத்தில் தனித்து விடப்படும் மம்தா): TMC political Crisis as only 8 MLAs attend Mamata Banerjee meeting.