636 ஆண்டுகள் பழமையான மசூதி கும்பமேளாவுக்காக இடிப்பு? விடிய விடிய போராட்டம்! உஜ்ஜைனில் பரபரப்பு

  • உஜ்ஜைன்: 2028ம் ஆண்டு நடைபெற உள்ள சிம்ஹஸ்தா கும்பமேளாவை முன்னிட்டு உஜ்ஜைன் நகரில் சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இதற்கு அங்குள்ள முஸ்லிம் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழமை மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

    Advertisement

    கும்பமேளா என்பது இந்தியாவின் 4 புனித இடங்களில் சுழற்சி முறையில் நடக்கும் இந்துக்களின் புனித நிகழ்வாகும். இது பிரயாக்ராஜ் (அலகாபாத்), ஹரித்வார், நாசிக், மற்றும் உஜ்ஜைன் நகரங்களில் சுழற்சி முறையில் நடத்தப்படும். உஜ்ஜைனில் நடக்கும் கும்பமேளா சிம்ஹஸ்தா என்று அழைக்கப்படும் நிலையில், இது 2028ம் ஆண்டு நடைபெறவுள்ளது.

    Advertisement

    சாலை விரிவாக்கம்

    இந்த கும்பமேளாவை முன்னிட்டு உஜ்ஜைன் மாநகராட்சி, நகரின் முக்கியமான சாலைகளை விரிவுபடுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரதான சாலையை 15 மீட்டர் அகலத்துக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. சிம்ஹஸ்தா கும்பமேளாவின்போது மிக பெரிய அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சாலை விரிவாக்கம் தேவை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இந்தத் திட்டம் உஜ்ஜைன் டெவலப்மென்ட் பிளான் 2035ன் ஒரு பகுதியாகும். இந்த சாலை விரிவாக்கம் செய்ய வேண்டிய ரூட்டில் தான் ஷாஹி மசூதி வருகிறது. குறிப்பாக மசூதியில் தொழுகை நடத்தும் கூடத்தின் ஒரு பகுதி, 120 அடி உயர மினாரத் மற்றும் மஸ்ஹர் சவுக் ஷாஹி ஆகியவற்றின் சில பகுதிகளை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    பழமையான மசூதி

    இருப்பினும், பழமையான மசூதியை அகற்ற அங்குள்ள முஸ்லீம் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சாலையை கண்டிப்பாக அகலப்படுத்த வேண்டுமென்றால், மசூதிக்கு எதிரே இருக்கும் கட்டிடத்தை அகற்றுவதன் மூலம் மேற்கொள்ளலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மத வழிபாட்டு தலங்களை சாலை விரிவாக்கத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இந்த மசூதி 636 ஆண்டுகள் பழமையானது என்றும் 1390ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மசூதியை இடிக்கக்கூடாது என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

    இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் செப்டம்பர் 9ம் தேதி தள்ளுபடி செய்தது. மாநகராட்சி சட்டப்படி தேவையான நடைமுறைகளைப் பின்பற்றி, பாதிக்கப்படும் தரப்பினரிடம் ஆட்சேபனைகளையும் கேட்டதாக நீதிமன்றம் கூறியது.

    Advertisement

    நீதிமன்றம்

    குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டு தலம் என்பதால் மட்டும் அதை குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்ட வாதத்தையும் நீதிமன்றம் ஏற்கவில்லை. அதே சாலையில் ஏற்கனவே 10 கோயில்கள் மற்றும் ஒரு மசூதியின் பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், உஜ்ஜைன் முழுவதும் சுமார் 80 மத வழிபாட்டுத் தலங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. எனவே, இந்த நடவடிக்கை பாரபட்சமானது என்று கூற முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.

    விடிய விடிய போராட்டம்

    நீதிமன்ற உத்தரவு வெளியானாலும், களத்தில் பிரச்சனை முடிவுக்கு வரவில்லை. மேலும், மசூதி நிர்வாகமும் மேல்முறையீடு செய்துள்ளது. இந்தச் சூழலில் தான் ஞாயிற்றுக்கிழமை மசூதியில் ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். அவர்களில் பலர் இரவு அங்கேயே தங்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Advertisement

    இதையடுத்து மசூதியை இடிக்கக் கூடாது என்றும் மத வழிபாட்டுத் தலங்களை பாதுகாத்தபடியே சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். போலீசார் தற்போது இடிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாமல், மசூதி நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக உஜ்ஜைன் எஸ்.பி. தெரிவித்துள்ளார். இதற்கிடையே மஜ்லீஸ் தலைவர் அசாதுதீன் ஒவைசியும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

    English Summary

    Dispute has emerged in Ujjain over the proposed removal of part of the 636-year-old Shahi Mosque for road widening ahead of the 2028 Simhastha Kumbh Mela(உஜ்ஜைனில் பழமையான மசூதி இடிக்கப்படுவதால் சர்ச்சை): Ujjain Shahi Mosque issue in tamil.