வெடிக்கும் புதிய போராட்டம்.. வீதியில் இறங்கிய பள்ளி மாணவர்கள்! ஆதரவாக நிற்கும் கரப்பான் பூச்சி கட்சி

  • லக்னோ: கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் மாணவர்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை கோரிக்கைகளுக்காக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அப்படி தான் உபி மாநிலத்தில் பள்ளிக்கு செல்லும் சாலை சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சுமார் 300 பள்ளி மாணவர்கள் 6 கிமீ தூரம் பேரணி சென்றுள்ளனர்.

    Advertisement

    உத்தரப் பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள கங்வா கா தேரா, பச்சி கா தேரா ஆகிய கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், தங்கள் பள்ளிக்கு செல்லும் சாலை மோசமான நிலையில் இருப்பதாக நீண்ட காலமாக குற்றஞ்சாட்டி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக மழை காலங்களில் சாலை முழுவதும் சேறும் சகதியுமாகி, தண்ணீர் தேங்கி நிற்பதாகவும் இதனால் பள்ளிக்கு செல்வதே பேரும் போராட்டமாக இருப்பதாகவும் மாணவர்கள் கூறினர்.

    Advertisement

    போராட்டம்

    இந்தச் சூழலில் தான் நேற்று செவ்வாய்க்கிழமை சுமார் 300 மாணவர்கள் மற்றும் 100 பெற்றோர் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் தொடக்க பள்ளி மாணவர்களாகும். தேசிய கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் சுமார் 6 கிமீ நடந்து சென்று, தங்களது கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் நேரடியாக தெரிவிக்க முயன்றனர்.

    ஆனால், ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். சில மாணவர்கள் உள்ளே செல்ல முயன்றபோது, போலீசார் அவர்களை மீண்டும் வெளியே அழைத்து வந்தனர். போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியே தள்ளியதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் அங்கேயே காத்திருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் பின்னர் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பினர்.

    Advertisement

    பள்ளி மாணவர்கள்

    இது தொடர்பாக பள்ளி மாணவர்கள் கூறுகையில், "மழை பெய்தவுடன் சாலையில் சேறும் சகதியும் தேங்கி விடுகிறது. நடந்து செல்வதே மிகவும் கடினமாக உள்ளது. பல நேரங்களில் பள்ளி சீருடை முழுவதும் சேறு பட்டுவிடுகிறது. இந்த பிரச்சனை குறித்து அதிகாரிகளிடம் ஏற்கெனவே 4 முதல் 5 முறை புகார் அளித்துவிட்டோம். ஆனால், இதுவரை எங்களுக்கு நிரந்தர தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. சாலைகளில் தண்ணீர் அதிகம் நிற்பதால் பெரும் சிரமமாக இருக்கிறது" என்றனர்.

    இதற்கு முன்பும் ஜூலை 3ம் தேதி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் இதே பிரச்சனைக்காக போராட்டம் நடத்தினர். அப்போது நிர்வாகம் சாலையில் மண்ணை கொட்டி தற்காலிகமாக பாதையை சீரமைத்தது. ஆனால், மீண்டும் மழை பெய்ததால் சாலை மோசமான மோசமடைந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    Advertisement

    சாலை அமைக்க ஒப்புதல்

    இந்த பிரச்சனை குறித்து தங்களுக்கு தெரியும் என்றும் நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த ஏற்கெனவே நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக ஹமீர்பூர் மாவட்ட அதிகாரி ராகேஷ் குமார் தெரிவித்துள்ளார். சுமார் 1,600 மீட்டர் நீளமுள்ள சாலை மோசமான நிலையில் இருப்பதாகவும், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதை அவரும் ஒப்புக்கொண்டார்..

    அங்கு தார் சாலை போடும் திட்டம் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்ததாகவும், தற்போது தான் வனத்துறையின் என்ஓசி கிடைத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் சுமார் ரூ.1.81 கோடி மதிப்பிலான திட்டம் தயாரிக்கப்பட்டு அரசிடம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும் என்றும் ராகேஷ் குமார் கூறினார்.

    Advertisement

    கரப்பான் பூச்சி கட்சி ஆதரவு

    பள்ளி மாணவர்கள் நடத்திய இந்த போராட்டத்திற்கு கரப்பான் பூச்சி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. போராட்டம் தொடர்பான வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள கரப்பான் பூச்சி கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே, "தங்கள் எதிர்காலத்துக்காக போராடும் இந்த குழந்தைகளுக்கு வாழ்த்துகள். அவர்கள் கேட்பது தங்கள் பள்ளிக்குச் செல்ல ஒரு சாலை மட்டுமே. இந்தியா சுதந்திரம் அடைந்து கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்குப் பிறகும் இதை கேட்க கூடாதா? இது பல ஆண்டுகளுக்கு முன்பே செய்து முடிக்கப்பட்டிருக்க வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    English Summary

    Around 300 school students and 100 parents in Uttar Pradesh Hamirpur marched 6 km to demand a proper road to their school(மாணவர் போராட்டம் கரப்பான் பூச்சி கட்சி ஆதரவு): Student protest Cockroach Janata party support.