அந்த 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்

  • கொல்கத்தா: மேற்கு வங்க அரசியலில் இப்போது மிகப் பெரிய அரசியல் திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. முன்னாள் முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் இல்லத்தில் சிஐடி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். போலி கையெழுத்து விவகாரம் தொடர்பாக மம்தா வீட்டில் சோதனை நடந்ததாகக் கூறப்படுகிறது. இது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    மேற்கு வங்கத்தில் இப்போது அரசியல் சூழல் மொத்தமாக மாறியுள்ளது. அங்கு மம்தா ஆட்சியில் இருந்த வரை அவரை எதிர்த்து வாய் திறக்கக் கூட அவரது கட்சியில் யோசித்தனர். ஆனால், ஆட்சி போன பிறகு, தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு சொந்தக் கட்சியிலேயே அவருக்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. முதலில் எம்எல்ஏக்கள் மம்தாவுக்கு எதிராகத் திரும்பிய நிலையில், நேற்று எம்பிக்களும் மம்தாவுக்கு எதிராகத் திரும்பின.

    Advertisement

    சிஐடி

    இதற்கிடையே மம்தாவின் வீட்டில் சிஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். கொல்கத்தாவில் உள்ள ஹரிஷ் சாட்டர்ஜி தெருவில் மம்தா பானர்ஜியின் வீடு மற்றும் கட்சியின் தலைமை அலுவலகம் உள்ளது. இன்று மதியம் சுமார் 12 மணியளவில், சிஐடி அதிகாரிகள், காளிகாட் போலீசார் மற்றும் பெண் காவலர்கள் அடங்கிய ஒரு பெரிய குழு அங்குச் சென்றது. அங்கு அவர்கள் சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

    தற்போது மூன்று இடங்களில் சிஐடி குழுக்கள் சோதனையிட்டு வருகின்றன. கொல்கத்தாவில் உள்ள மம்தா பானர்ஜியின் இல்லம், அவரது உறவினரும், எம்பியுமான அபிஷேக் பானர்ஜியின் அலுவலகம், அபிஷேக் பானர்ஜியின் இல்லம் என 3 இடங்களில் சோதனை நடைபெற்றது. மம்தா பானர்ஜி இப்போது டெல்லியில் உள்ள நிலையில், இந்தச் சோதனை நடக்கிறது.

    Advertisement

    என்ன புகார்

    'போலி கையெழுத்து' புகார் தொடர்பாகவே இந்தச் சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. அதாவது நடந்து முடிந்த தேர்தலில் மம்தா தோல்வி அடைந்திருந்தார். இதையடுத்து மூத்த எம்.எல்.ஏ சோவன்தேப் சட்டோபாத்யாயவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க மம்தா முடிவு செய்தார். இது தொடர்பாகச் சட்டசபையில் சபாநாயகரிடம் கடிதம் ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்துக்கள் இருந்தன. ஆனால், அதில் உள்ள பல கையெழுத்துக்கள் போலியானவை என்று புகார் எழுந்தது. இதுவே தற்போது சிஐடி விசாரணைக்குக் காரணமாகியுள்ளது.

    சோதனை

    இந்த விவகாரத்தில் சிஐடி ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்குப் பதிலளித்த திரிணாமுல் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, "எம்எல்ஏக்களின் கையெழுத்துக்கள் ஹரிஷ் சாட்டர்ஜி சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்தான் சேகரிக்கப்பட்டன" என்று கூறியிருந்தார். அவர் கொடுத்த இந்தத் தகவலின் அடிப்படையிலேயே, சிஐடி அதிகாரிகள் இன்று அந்த அலுவலகத்திற்கும், மம்தா பானர்ஜியின் வீட்டிற்கும் சோதனை நடத்தியுள்ளனர்.

    Advertisement

    அந்த 14 கையெழுத்து

    திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த ரிதாப்ரதா பானர்ஜி மற்றும் சந்திபன் சாஹா ஆகிய இரண்டு எம்எல்ஏக்கள் தான் முதலில் இந்தப் புகாரைச் சபாநாயகரிடம் கொண்டு சென்றனர். சபாநாயகரிடம் வழங்கப்பட்ட கடிதத்தில் மொத்தம் 70 கையெழுத்துக்கள் இருந்த நிலையில், அதில் 14 கையெழுத்துக்கள் போலியானது என அவர்கள் குற்றம் சாட்டினர். இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி திரிணாமுல் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மேற்கு வங்கத்தில் தற்போது சுவேந்து அதிகாரி முதலமைச்சராக இருக்கும் சூழலில், மம்தா பானர்ஜி மற்றும் அவரது கட்சி கடும் அரசியல் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் இந்த சிஐடி விசாரணை மம்தா பானர்ஜிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

    English Summary

    West Bengal CID and Kalighat police conducted raids at three locations(மேற்கு வங்கத்தில் மம்தா இல்லத்தில் அதிரடி சோதனை): CID Raids in Mamata Residence latest news in tamil.