மது விற்பனைக்கு தடை.. DJ இசை கூடவே கூடாது.. துர்கா பூஜைக்கு புதிய கட்டுப்பாடுகளை போட்ட பாஜக அரசு

  • கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள துர்கா பூஜை கொண்டாட்டங்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார். அதன்படி பூஜை கொண்டாட்டங்களின்போது மதுபான விற்பனைக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல டிஜே இசைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    நவராத்திரி சமயத்தில் கொண்டாடப்படும் துர்கா பூஜை தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும். அதிலும் குறிப்பாக மேற்கு வங்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் மிக பெரியளவில் இந்த துர்கா பூஜை கொண்டாடப்படும்.

    Advertisement

    மேற்கு வங்க முதல்வர்

    இதற்கிடையே துர்கா பூஜை நடத்தும் குழுக்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சுவேந்து அதிகாரி, இந்த ஆண்டு துர்கா பூஜை பாரம்பரிய முறையில் கொண்டாடப்படும் என்றார். சமஸ்கிருத மற்றும் வங்காள கலாச்சார மரபுகளை ஒன்றிணைக்கும் வகையில் விழா நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், துர்கா பூஜை நடத்துவதற்கான உரிமையை பெற யாரும் உயர் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை இருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

    உரிமை உள்ளது

    அவர் மேலும், "யார் ஒருவரும் எந்தவொரு மதத்தை கடைப்பிடிப்பதற்கான உரிமையை அரசியலமைப்பு உறுதி செய்கிறது. கடந்த சில ஆண்டுகளாக திருவிழா கொண்டாட்டங்கள் என்ற பெயரில் சில ஏற்பாடுகள் திணிக்கப்பட்டன. இந்த ஆண்டு அது நடக்காது. மேற்கு வங்க சுற்றுலா துறை சார்பில் மகாளயா தினத்தன்று கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மிக பெரிய நிகழ்ச்சி நடத்தப்படும்" என்றார்.

    Advertisement

    இதனிடையே, கொல்கத்தாவின் ரெட் ரோட்டில் மம்தா பானர்ஜி முதல்வராக இருந்தபோது தொடங்கப்பட்ட துர்கா பூஜை கார்னிவல் நிகழ்ச்சி இந்த ஆண்டு நடத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    துர்கா சிலைகள்

    துர்கா சிலைகளை கரைக்கும் நிகழ்வின்போது ஆற்றங்கரைகளில் கிரேன்களை பயன்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது என்று சுவேந்து அதிகாரி கூறினார். பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், சிலை கரைப்பு நிகழ்வின்போதும் டிஜே இசைக்கு முழுமையான தடை விதிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், அஷ்டமி நாளில் அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருக்கும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

    பொருளாதார வசதி இல்லாததால் பூஜை கொண்டாட்டங்களை நடத்த முடியாத சிறிய பூஜை குழுக்களுக்கு அரசு சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். அதேநேரத்தில், போதுமான நிதி வசதி கொண்ட பெரிய பூஜை குழுக்கள் அரசு வழங்கும் நிதியுதவியைப் பெற வேண்டாம் என்றும் சுவேந்து அதிகாரி கேட்டுக்கொண்டார்.

    Advertisement

    ஏற்க முடியாது

    அதேநேரம் துர்கா பூஜை ஏற்பாடுகள் என்ற பெயரில் சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை தேவையின்றி மறிக்க அரசு அனுமதிக்காது என்றும் முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர், "தேசிய நெடுஞ்சாலைகளை மறிக்க முடியாது. சாலைகளை மறித்து பூஜை நடத்த கூடாது. இதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கவனமாக பின்பற்ற வேண்டும். பூஜை ஏற்பாடுகளை போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்படாத வகையில் செய்ய வேண்டும்" என்றார்.

    மேற்கு வங்கத்தின் மிக பெரியளவில் துர்கா பூஜை கொண்டாடப்படும். இந்தாண்டு துர்கா பூஜை அக்டோபர் 10ஆம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தா உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் இந்த விழாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் பங்கேற்பதுடன், முக்கிய கலாச்சார மற்றும் சுற்றுலா நிகழ்வாகவும் துர்கா பூஜை உருவெடுத்துள்ளது.

    English Summary

    West Bengal Chief Minister Suvendu Adhikari has announced new guidelines for this year’s Durga Puja celebrations(துர்கா பூஜை மேற்கு வங்கம்): West Bengal Durga Puja latest news in tamil.