டெல்லி: பெட்ரோல், டீசலின் விலை உயர்விற்கு பல காரணங்கள் உள்ளது. ஆனால் இதற்கு மிக முக்கிய காரணம், மத்திய அரசின் வரிவிதிப்பு முறைதான் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. தற்போது நேற்று விற்கும் விலையிலேயே இன்றும் விற்கிறது.
தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.91ஆகும். டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.13 ஆகும். இந்த முழுக்க இந்த விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
முதலில் பெட்ரோல் விலை உயர்வை பார்க்கும் முன் இதற்கு முன் விலை எப்படி இருந்தது என்று பார்க்க வேண்டும். கடந்த செப்டம்பர் 10ம் தேதிதான் சென்னை உட்பட பல இடங்களில் பெட்ரோல் விலை 80 ரூபாயை தொட்டது. 20 வருடம் முன் அதே நாளில் பெட்ரோல் விலை 23.94 ரூபாய்தான் இருந்தது. இந்த 20 வருடங்களில் இதன் விலை மொத்தமாக, 238 சதவிகிதம் அதிகம் ஆகியுள்ளது. இது வருடத்திற்கு சுமார் 12 சதவிகிதம் ஆகும்.
பெட்ரோல் விலை உயர்விற்கு மூன்று காரணங்கள் இருக்கிறது .
முதல் காரணம் - கச்சா எண்ணெய் விலை உயர்வு.
இரண்டாவது காரணம் - டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவு.
மூன்றாவது காரணம்- மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அதிகப்படியான வரி.
இந்த பெட்ரோல் விலை எப்போதும் 5 முக்கிய காரணிகளை கருத்தில் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது.
முதல் காரணி- எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலை. எவ்வளவு விலைக்கு கச்சா எண்ணெய்யை அரபு நாடுகளில் இருந்து இந்த நிறுவனங்கள் வாங்குகிறதோ அதை வைத்தும், டாலர் மதிப்பை வைத்தும், எண்ணெய் நிறுவனங்கள் ஒரு விலை வைக்கும். இந்த விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ள முடியும்.
இரண்டாவது காரணி - இந்த பெட்ரோலை பெட்ரோல் பங்குகளுக்கு கொண்டு செல்ல ஆகும் செலவு. இதையும் எண்ணெய் நிறுவனங்கள் நம்மிடம்தான் வாங்குகிறது.
மூன்றாவது காரணி - மத்திய அரசு நம்மிடம் வாங்கும் வரி.
நான்காவது காரணி - மாநில அரசு நம்மிடம் வாங்கும் வரி.
ஐந்தாவது காரணி - எண்ணெய் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கும் டீலருக்கு அளிக்கப்படும் பணம். இந்த ஐந்தும்தான் பெட்ரோல் விலையை நிர்ணயிக்கிறது.
உதாரணமாக, சென்னையில் 80.73 ரூபாய்க்கு பெட்ரோல் விற்கிறது என்றால், 40.45 ரூபாய் எண்ணெய் நிறுவனங்களுக்கு செல்லும். 19.83 ரூபாய் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு செல்லும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசுக்கு 6 ரூபாய் வரை செல்லும். மீதம் உள்ளது டீலருக்கு கமிஷனாக செல்லும்.
மன்மோகன் சிங் இருந்த போது, 2004ல் கச்சா எண்ணெய், பேரலுக்கு 36 டாலர் விற்றது. அதன்பின் 2011 பேரல் விலை 111 டாலராக உயர்ந்தது. இதனால் அப்போது பெட்ரோல் விலை உயர்ந்தது. மற்ற வரிகள் எதுவும் உயர்த்தப்படவில்லை. அதனால்தான் அப்போது (2013ல்) பெட்ரோல் விலை 76 ரூபாயை தொட்டது.
ஆனால் இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. அதாவது 111 டாலர் விலை விற்றபோது பெட்ரோல் விலை 75 ரூபாய் இருந்தது. இப்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 68 டாலர் மட்டுமே விற்கிறது. ஆனால் இப்போது பெட்ரோல் விலை 84 ரூபாய். மத்திய அரசு விதிக்கும் அதிகப்படியான வரியே இதற்கு காரணம். பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கும் இதுவே காரணம் ஆகும்.
இதற்கு சில பாஜகவினர் காரணம் தெரிவித்துள்ளனர். அதன்படி அரசின் நலத்திட்டங்களை பணம் தேவைப்படுவதால், பெட்ரோலுக்கு அதிக மத்திய அரசு விதி விதிக்கப்படுகிறது. இதனால்தான் விலை அதிகம் ஆகிறது. மாநில அரசு வேண்டுமானால் வரியை குறைக்கலாம் என்று கூறியுள்ளனர்.