பீஜிங்: சீனாவின் எல்லையோரப் பகுதியில் அமைந்துள்ள ஒரு விவசாயப் பண்ணை, மொத்த சோஷியல் மீடியாவையும் தன் பக்கம் இழுத்துள்ளது.. இதற்கு காரணம், அதே சீனாவை சேர்ந்த ஸுவோ சியாயோங் என்ற பண்ணை உரிமையாளர்தான்.. மங்கோலிய எல்லையின் தெற்குப் பகுதியில் உள்ள தனது பிரம்மாண்ட புல்வெளியில் பணிபுரிய ஆட்கள் தேவை என வெளியிட்ட ஒரு சாதாரண விளம்பரம் தான், இன்று சீனாவில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. அப்படியென்ன நடந்தது?
ஸுவோ சியாயோங் என்பவர் 2,000 ஹெக்டேர் அதாவது சுமார் 4,942 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்டமான பண்ணை வைத்துள்ளார்.. இந்த பண்ணையில் சுமார் 3,000 ஆடுகளையும் வைத்துள்ளார்..
இந்த ஆடுகளை பராமரிப்பதற்காக, விளம்பரம் ஒன்றை கடந்த ஏப்ரல் மாத இறுதியில் வெளியிட்டிருந்தார். அதில், கோடைகாலத்தில் ஆடுகளை வெளியில் கூட்டிச் சென்று மேய்ப்பதற்கும், குளிர்காலத்தில் அவற்றை பாதுகாப்பாகப் பராமரிப்பதற்கும் இரண்டு பேர் தேவை, தம்பதியினராக வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். மங்கோலிய எல்லைப் பகுதி என்பதால், குளிர்காலத்தில் அங்கு நிலவும் காலநிலை கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மிகக் கொடூரமானதாக இருக்கும். வெப்பநிலை மைனஸ் 30 டிகிரிக்கும் கீழே குறைந்து ஒட்டுமொத்தப் பகுதியுமே பனிப்பொழிவால் உறைந்து போய்விடும். அத்தகைய கடுமையான சூழலில், பண்ணைக்குள்ளேயே ஆடுகளுக்குத் தீவனம் அளிப்பது மற்றும் கொட்டகையைத் தூய்மைப்படுத்துவது போன்ற கடினமான பணிகளைச் செய்ய வேண்டியிருக்கும் என்பதால் தான், பண்ணை ஓனர் தம்பதியினராக வேலைக்கு தேடியுள்ளார். இந்த வேலைக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்ததற்குக் காரணம், பண்ணை உரிமையாளர் அறிவித்திருந்த நம்பமுடியாத ஊதியமும் சலுகைகளும் தான். அதனால்தான் இந்த செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே 59 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த வேலைக்குத் தேர்வாகும் ஒரு நபருக்கு மாதச் சம்பளமாக 8,000 யுவான் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது நம்ம ஊர் மதிப்பில் 1 நபருக்கு, 1 மாதத்திற்கு 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகும். இது சீனாவில் உள்ள தனியார் நிறுவனங்களின் சராசரி நகர்ப்புற சம்பளமான 6,000 யுவானை விட மிக அதிகமாகும். இதுமட்டுமன்றி, பண்ணையிலேயே தங்குவதற்கான இலவச இடம் மற்றும் அவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் அனைத்தையும் பண்ணை உரிமையாளரே வழங்குவதாகவும் அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தது. இதனால் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் அப்படியே சேமிக்க முடியும் என்ற அரிய வாய்ப்பு இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த வேலைக்கு இவ்வளவு பெரிய கூட்டம் குவிந்ததன் பின்னணியில் சீனாவின் தற்போதைய பொருளாதார நெருக்கடி ஒளிந்துள்ளது. அந்த நாட்டில் ஒட்டுமொத்த வேலையின்மை 5 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதோடு, தனியார் துறை வருமானமும் வீழ்ச்சியடைந்துள்ளது. வாரத்தில் 6 நாட்கள், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஓய்வில்லாமல் வேலை செய்யும் "996" என்ற கொடுமையான கார்ப்பரேட் கலாச்சாரத்தால் இளைஞர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கழிவறைக்குக் கூட செல்ல நேரமில்லாமல், கைகள் வீங்கி கொப்புளங்கள் வரும் வரை ஒரு நாளைக்கு 13 மணி நேரத்திற்கும் மேலாக தொழிற்சாலைகளில் வேலை செய்யும் சோர்வூட்டும் வாழ்க்கைக்குப் பயந்தே பல பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பித்துள்ளனர். மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி மற்றும் இந்த ஆண்டில் மட்டும் 12.7 மில்லியன் பட்டதாரிகள் புதிதாக வேலை சந்தைக்குள் நுழைவது போன்ற காரணங்களால் நகர்ப்புற வேலைகள் அரிதாகிவிட்டன. விண்ணப்பித்தவர்களில் பத்தில் ஒரு பங்கினர் சமீபத்தில் பல்கலைக்கழகப் படிப்பை முடித்தவர்கள் என்றும், மற்றவர்கள் கடன் சுமை மற்றும் பணியிட அரசியலால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் பண்ணை உரிமையாளர் ஸுவோ சியாயோங் ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளார். கடைசியில் தன்னிடம் குவிந்த 700 விண்ணப்பங்களில் இருந்து ஆடு வளர்ப்பில் ஏற்கனவே நல்ல முன் அனுபவம் கொண்ட தம்பதிகளை அவர் வேலைக்குத் தேர்ந்தெடுத்துள்ளாராம்..!!சீன ஆட்டு பண்ணை
பண்ணையில் ஆடு மேய்க்கும் வேலைசீன தம்பதிக்கு ஜாக்பாட்
700 விண்ணப்பங்கள்