ஜெருசலேம்: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது. இதற்கு எதிராக ஈரான் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் களமிறங்கியிருக்கின்றனர். இதனால் செங்கடலில் தற்போது உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
போர் நிறுத்தம் எனில் அதை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும். ஆனால், இங்கு நான்தான் பெரிய கை! என்று நினைத்துக்கொண்டு பெய்ரூட் மீது அட்டாக் செய்தது இஸ்ரேல். இவ்வளவு பஞ்சாயத்துகளுக்கும் இந்த நடவடிக்கைதான் காரணம்.
லெபனான் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்பதுதான் ஈரானின் முக்கியமான டிமாண்ட். ஆனால், இதை மதிக்காமல் இஸ்ரேல் தாக்குதல் நடத்த, பதிலுக்கு ஈரான் உள்ளே வர.. துணைக்கு ஹூதி கிளர்ச்சியாளர்களும் களத்தில் இறங்கியிருக்கின்றனர். "செங்கடலில் இஸ்ரேலிய கப்பல் போக்குவரத்துக்கு முழுமையான தடையை நாங்கள் அறிவிக்கிறோம். இஸ்ரேலின் எந்த கப்பலாக இருந்தாலும் அதை நாங்கள் ராணுவ இலக்காகத்தான் கருதுவோம்," என்று ஹூதி ஆயுதப் படையினர் வெளிப்படையாக கூறியிருக்கின்றனர். அதேபோல இஸ்ரேலின் முக்கிய இலக்குகளை நோக்கி ஏவுகணைகளை ஏவியதாகவும், அவை துல்லியமாக இலக்குகளைத் தாக்கியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதனால் செங்கடல் பகுதியில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையில், ஏமனிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையை அடையாளம் கண்டுள்ளதாகவும், அதை இடைமறிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. இது ஒருபுறம் இருக்கையில், மற்றொரு முக்கிய நிகழ்வாக, இஸ்ரேல் மீது ஈரான் இரண்டாவது கட்ட ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதனால் இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்து வருகின்றன. முன்னதாக, ஈரானின் தெஹ்ரான், தப்ரிஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய நகரங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேலின் நெவாடிம் (Nevatim) மற்றும் டெல் நோஃப் (Tel Nof) ஆகிய இரண்டு முக்கிய விமானப்படை தளங்களைத் தாக்கியுள்ளதாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்துள்ளது. ஈரானின் ரேடார் தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு நிச்சயம் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும். எனவே, ஈரானுக்கு எதிரான இந்த ராணுவ நடவடிக்கை பல நாட்கள் நீடிக்கக்கூடும் என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. நிலைமையைச் சமாளிக்க கூடுதல் ரிசர்வ் படை வீரர்களைத் திரட்ட இஸ்ரேலிய ராணுவம் தயாராகி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் மிகப்பெரிய மோதலாக இது பார்க்கப்படுகிறது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.உள்ளே வந்த ஈரான்
உச்சக்கட்ட பதற்றம்
முக்கிய இடங்கள் மீது தாக்குதல்
பல நாட்கள் நீடிக்க வாய்ப்பு