சவுதிக்கு டாடா காட்டிய இந்தியா.. சத்தமின்றி மாறிய திட்டம்.. இதில் அம்பானிக்கு தான் அதிக லாபம்!

  • டெல்லி: உலக எரிசக்தி சந்தையில் நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதி உத்தியில் ஒரு மிகப் பெரிய அதிரடி மாற்றத்தைச் செய்துள்ளது. கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் சூழலில், நிலைமையைச் சமாளிக்க ஜாம்பவான்களான சவூதி அரேபியா மற்றும் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, வேறு ஒரு நாட்டிடம் இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய்யை வாங்கி குவிகிறதாம்.

    Advertisement

    வளைகுடாவில் நடக்கும் போர் சர்வதேச அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாகக் கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் இது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ரேட் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவும் தனது உத்தியை மாற்றியுள்ளது.

    Advertisement

    கச்சா எண்ணெய்

    வெனிசுலா இந்த மே மாதத்தில் மட்டும் நாள் ஒன்றுக்குச் சுமார் 4,17,000 பேரல் (bpd) கச்சா எண்ணெய்யை இந்தியாவிற்கு வழங்கியுள்ளதாக எரிசக்தி சரக்குக் கண்காணிப்பு நிறுவனமான 'கெப்லர்' தெரிவித்துள்ளது.. கடந்த ஏப்ரல் மாதத்தில் இது 2,83,000 பேரலாக மட்டுமே இருந்தது. அதற்கு முந்தைய 9 மாதங்களாக வெனிசுலாவிடமிருந்து இந்தியா ஒரு சொட்டு எண்ணெய் கூட வாங்காத நிலையில், மே மாதம் நிலைமை மொத்தமாக மாறியுள்ளது. இது உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

    மே மாத டேட்டாவை எடுத்துப் பார்த்தால்.. இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த நாடுகளில் ரஷ்யா வழக்கம் போல முதலிடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து ஐக்கிய அமீரகம் அடுத்த இடத்தில் இருக்கிறது. இந்த இரு நாடுகளுக்குப் பிறகு அடுத்தபடியாக வெனிசுலா 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

    Advertisement

    வெனிசுலா

    மேற்கு ஆசியப் போர், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக எகிறியுள்ளது. இந்தச் சூழலில், மற்ற நாடுகளின் கச்சா எண்ணெய்யை விட வெனிசுலாவின் எண்ணெய் விலை மிகவும் மலிவாகக் கிடைப்பதுதான் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் அவர்களை நோக்கித் திரும்ப முக்கிய காரணமாக இருக்கிறது.

    ஆனால், வெனிசுலாவின் கச்சா எண்ணெய் மிகவும் கனமானது மற்றும் அதிக சல்பர் கொண்டது. இதனைச் சுத்திகரிப்பது சாதாரண ஆலைகளுக்குக் கடினம். ஆனால், குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அதிநவீன மற்றும் சிக்கலான சுத்திகரிப்பு உள்கட்டமைப்புக்கு இந்த வகை எண்ணெய்யை மிக ஈஸியாக பிரித்துவிடும். இதனால் வெனிசுலாவின் மலிவான ரேட் எண்ணெய்யால் ரிலையன்ஸ் தான் பெரியளவில் பயன் பெறுகிறது.

    Advertisement

    சவுதி

    பிப்ரவரியில் ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு வரை இந்தியாவின் 3வது பெரிய சப்ளையராக இருந்த சவூதி அரேபியா, தற்போது அந்த இடத்தை வெனிசுலாவிடம் பறிகொடுத்துள்ளது. சவூதி அரேபியாவின் கச்சா எண்ணெய் விலை மிக அதிகமாக இருந்ததால், இந்திய நிறுவனங்கள் சவூதி எண்ணெய்யைப் புறக்கணித்தன. இதன் விளைவாக, ஏப்ரல் மாதத்தில் 6,70,000 பேரலாக இருந்த சவூதி எண்ணெய் விநியோகம், இந்த மே மாதத்தில் 3,40,000 பேரலாகப் பாதியாகச் சரிந்துள்ளது.

    ஈரான்

    அமெரிக்கா பொருளாதாரத் தடைகளைச் சற்றே தளர்த்தியதால், கடந்த ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஈரானிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை வாங்கத் தொடங்கியது. ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. தற்போது ஈரான் துறைமுகங்களைச் சுற்றி அமெரிக்கக் கடற்படை முற்றுகை இட்டுள்ளதால், இந்த மே மாதத்தில் ஈரானிடமிருந்து ஒரு பேரல் எண்ணெய் கூட இந்தியாவிற்கு வரவில்லை.. விநியோகம் மீண்டும் முழுமையாக ஸ்தம்பித்தது.

    Advertisement

    அதேபோல, ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் ஈராக்கும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் இந்தியாவிற்கு 9,69,000 பேரல் எண்ணெய் வழங்கிய ஈராக், இந்த மே மாதத்தில் வெறும் 51,000 பேரல் மட்டுமே வழங்க முடிந்துள்ளது. இந்த இடைவெளியைத் தான் இந்தியா இப்போது வெனிசுலா மற்றும் அமீரகம் மூலம் நிரப்பியுள்ளது.

    English Summary

    Amid Middle East conflict and rising oil prices, India shifted its crude oil import strategy in May(கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவின் திட்டம்): India Crude Oil Import Strategy latest news in tamil.