ரஃபேலையே வீழ்த்துமாம்.. பாக்., பாணியில் சீனாவிடம் ஜே-10சிஇ போர் விமானங்களை வாங்கும் வ.தேசம்

  • டாக்கா: சீனாவின் தயாரிப்பான 4.5ம் தலைமுறையை சேர்ந்த ஜே-10சிஇ போர் விமானங்களை வங்கதேசம் வாங்க உள்ளது. பாகிஸ்தான் உடனான போரில் இந்தியாவின் ரஃபேல் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுவதால் தான் இந்த விமானங்களை நாங்கள் வாங்க இருக்கிறோம் என்று வங்கதேசம் விளக்கம் கூறி சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    Advertisement

    வங்கதேசத்தில் பிஎன்பி கட்சியின் ஆட்சி நடக்கிறது. பிரதமராக தாரிக் ரஹ்மான் உள்ளார். தற்போது நம் நாட்டுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். அவரை அனுப்பி வைக்க வங்கதேசம் கூறி வரும் நிலையில் மத்திய அரசு மறுத்து வருகிறது. இதுதான் தற்போது இருநாடுகள் இடையேயான உறவில் பிரச்சனையாக உள்ளது.

    Advertisement

    அதேவேளையில் சீனாவுடன், வங்கதேசம் நட்பு பாராட்டி வருகிறது. ஷேக் ஹசீனா இருந்த வரை அவர் நம்முடன் நட்பாக இருந்த நிலையில் தற்போதைய அரசு சீனாவுடன் மீண்டும் நெருக்கமாக செயல்பட தொடங்கி உள்ளது. சீனாவிடம் இருந்து போர் விமானங்களை வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    வங்கதேசத்தை எடுத்து கொண்டால் விமானப்படையில் வீக்காக உள்ளது. வங்கதேசத்திடம் தற்போது 36 எஃப்-7 எம்ஜி ரக போர் விமானங்கள் உள்ளன. இது சீனாவின் தயாரிப்பாகும். சீனாவின் J-7 ரக விமானத்தை மேம்படுத்தி வங்கதேசத்திற்காக பிரத்யேகமாக இந்த விமானம் வடிவமைக்கப்பட்டது. இதனால் விமானப்படை நவீனமயமாக்க வங்கதேசம் முயன்று வருகிறது. வங்கதேசத்தை பொறுத்தவரை சீனாவிடம் இருந்து தான் அதிகமான ஆயுதங்களை வாங்கி வருகிறது.

    Advertisement

    எஃப்-7 ரக போர் விமானங்களை தவிர கே-8 உள்ளிட்ட சீனாவின் பயிற்சி விமானங்கள், சீனாவின் டாங்கிகள், கப்பல்கள், ஏவுகணைகளை வங்கதேசம் வைத்துள்ளது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் பாணியில் வங்கதேசம், சீனாவிடம் இருந்து நவீன போர் விமானங்களை வாங்க முடிவெடுத்துள்ளது. அதாவது சீனாவிடம் இருந்து ஜே-10சிஇ போர் விமானங்களை வாங்க வங்கதேசம் முடிவெடுத்துள்ளது. சீனாவின் ஜே-10சிஇ விமானங்களை பாகிஸ்தான் முதலில் வாங்கியது. இப்போது 2வது நாடாக வங்கதேசம் இந்த போர் விமானங்களை வாங்கி உள்ளது.

    அதன்படி சீனாவிடம் இருந்து 20 ஜே-10சிஇ போர் விமானங்களை 2.3 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.2.3 பில்லியன் டாலர் என்பது இந்திய ரூபாயில் 22,000 கோடியாகும். வங்கதேசம், சீனாவிடம் இருந்து விமானம் வாங்குவது பிரச்சனையில்லை. ஆனால் இந்த விமானம் நம் நாட்டின் ரஃபேல் போர் விமானங்களை வீழ்த்தியதால் தான் அதனை வாங்குகிறோம் என்று வங்கதேசம் கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

    Advertisement

    இதுதொடர்பான விவரம் வங்கதேசத்தின் செய்தி தகவல் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ''சீனாவின் ஜே-10சிஇ போர் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போர் விமானங்களை வாங்குவதற்கான முன்மொழிவு மற்றும் இறுதி ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சகம் மற்றும் ஆயுதப்படை பிரிவிடம் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.

    இதுபற்றி வங்கதேசத்தின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை ஆலோசகர் ஜாஹெட் உர் ரஹ்மான் கூறுகையில், ''சீனாவிடம் இருந்து ஜே-10சிஇ எனும் போர் விமானங்களை வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் சீனாவின் ஹெலிகாப்டர்கள், முக்கியப் பிரமுகர்களின் போக்குவரத்துக்கான ஹெலிகாப்டர்கள், ட்ரோன்களும் வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.

    Advertisement

    நடப்பு நிதியாண்டில் தேவையான பட்ஜெட் ஒதுக்கீடு கிடைக்கும் பட்சத்தில் இந்த போர் விமானங்களை வாங்குவது உடனடியாக தொடங்கும். இல்லையென்றால் அடுத்த பட்ஜெட்டிற்கு பிறகு வாங்கப்படும். கடந்த ஆண்டு மே மாதம் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்பட்டது. இந்த சமயத்தில் பாகிஸ்தான் தரப்பில் 'AESA' (Active Electronically Scanned Array) ரேடார்கள் மற்றும் 'PL-15' ரக நீண்ட தூர ஏவுகணைகள் பொருத்தப்பட்ட 'ஜே-10சிஇ' போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டது. இந்த போரில் இந்தியாவின் 'ரஃபேல்' (Rafale) போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அதனை மனதில் வைத்து வாங்க உள்ளோம்.

    Advertisement

    ரஃபேல் மற்றும் யூரோஃபைட்டர் டைஃபூன் போன்ற ஐரோப்பிய போர் விமானங்களை ஒப்பிடும்போது சீனாவின் இந்த போர் விமானத்தின் விலை குறைவாக உள்ளது. அதே வேளையில் இந்த விமானங்கள் அதற்கு நிகராக போரில் செயல்பட்டுள்ளன. இதனால் இந்த விமானங்கள் வாங்குவதில் ஆர்வமாக இருக்கிறோம்'' என்றார்.

    சமீபத்திய போர்ச்சூழலில் இந்த விமானத்தின் நேரடி அனுபவம் எங்களிடம் உள்ளது. இதனால் நாங்கள் சீனாவின் ஜே-10சிஇ போர் விமானங்களை வாங்க முடிவெடுத்துள்ளோம்'' என்றார். இதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் தான் நம்மிடம் சம்மட்டி அடி வாங்கியது. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள், ராணுவ தளம், விமான தளம் உள்ளிட்டவை அழிக்கப்பட்டன. பாகிஸ்தானின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஆனால் நம்முடைய ரஃபேல் போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறினாலும் அதற்கான ஆதாரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இப்படியான சூழலில் ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய நிகழ்வை அடிப்படையாக வைத்து ஜே-10ஜேஇ போர் விமானங்களை வாங்குவதாக வங்கதேசம் கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

    English Summary

    Bangladesh is set to purchase Chinese-made 4.5-generation J-10CE fighter jets. The country has sparked controversy by stating that it is acquiring these aircraft because they reportedly shot down an Indian Rafale fighter jet during a conflict with Pakistan.