காத்மாண்டு: நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானத்தின் நிலை என்ன என்பது குறித்து அவரது உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து 24 மணி நேரமாக எந்த தகவலும் இல்லை என்கிறார்கள்.
நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் நேற்று காலை கோஷி ஆற்றில் காலை 9 மணிக்கு திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. திபெத் பகுதியில் இருந்து வந்த வெள்ளத்தால் வீடுகள், சாலைகள், பாலங்கள் மற்றும் நீர் மின் திட்டங்கள் கடும் சேதமடைந்தன.
ராசுவா பகுதியில் பனி சூழ்ந்த ஏரி உருகி மொத்தமாக ஏரி வெளியேறிதால் வெள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் 105 பேர் இந்த வெள்ளத்தில் சிக்கி மாயமானதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அது போல் அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 384 சுற்றுலா பயணிகள் மாயமாகிவிட்டனராம். இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 109 பேர் வெவ்வேறு சுற்றுலா நிறுவனங்கள் மூலம் நேபாளம், திபெத்திற்கு வந்தனர். இவர்களில் 37 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆன்மீக பயணத்தில் சுமார் 57 பேர் நேபாளம் சென்றனர். இவர்களில் 20 பேரின் பத்திரமாக உள்ள நிலையில் மீதமுள்ள 37 பேரின் நிலை தெரியவில்லை. இந்த நிலையில் மயிலாடுதுறையை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானமும் கும்பகோணம் ஏஜென்சி மூலம் நேபாளம் சென்றிருப்பதாகவும் அவரின் நிலை அறிய முடியவில்லை என்றும் அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டால் லைன் கிடைக்கவில்லை என்றும் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். அவரை விரைந்து மீட்க மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 157 பேர் இறந்துவிட்டனர். நூற்றுக்கணக்கானோர் மாயமாகிவிட்டனர். இந்த காட்டாற்று வெள்ளம் குறித்த வீடியோ வெளியான நிலையில் அதன் வீரியத்தை பார்த்தால் சுனாமி போல் அத்தனையையும் வாரி சுருட்டிக் கொண்டு செல்வதை போல் இருக்கிறது. பலர் தங்களது கண் முன்னே உறவினர்கள் அடித்துச் சென்றது குறித்து கதறிய காட்சிகள் காண்போரை பதைபதைக்க வைக்கிறது. நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் அல்லது தமிழகத்தில் உள்ள குடும்பத்தினர் உதவிக்கு உடனடியாக தொடர்பு கொள்ள அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்குள் 1800 309 3793, வெளிநாடு - +91 80 6900 9900, தொடர்புக்கு +91 80 6900 9901, தமிழ்நாடு இல்லம் (டெல்லி)- 92895 16712. நேபாள வெள்ளத்தின் எதிரொலியாக பீகாரின் மேற்கு சம்ப்ரான் மாவட்டம் , வால்மீகி நகரில் அமைந்துள்ளது கண்டக் அணை. இது நேபாள எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. நேபாளத்தில் நிலநடுக்கம், பனிப்பாறை வெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம் அப்படியே சீறிப் பாய்ந்து நாராயணி நதியில் கலந்து இந்த கண்டக் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. கண்டக் அணைக்கான நீர்வரத்து நேற்று 1,04,400 கன அடியாக இருந்தது. தற்போது 36 மதகுகளும் திறக்கப்பட்டு சுமார் 2 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பீகாரில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.