டெல்லி: பிரபல ஏஐ சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா (Nvidia) சிஇஓ ஜென்சன் ஹுவாங்கை சீன உளவுத்துறை தனது வலையில் சிக்கவைக்க முயன்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக சீனா முதல்முறையாக வாய் திறந்துள்ளது. இதை திட்டவட்டமாக மறுத்துள்ள சீனா, இந்த புகார்களுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும் சீனாவுக்கு எதிரான அவதூறு பிரச்சாரம் என்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகின் முன்னணி ஏஐ சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் சிஇஓ ஜென்சன் ஹுவாங்கை சுற்றி தற்போது சர்ச்சை வெடித்துள்ளது. அமெரிக்க உளவுத்துறை நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அதாவது சீனாவுக்காக தகவல்களை சேகரித்து வந்ததாக சந்தேகிக்கப்படும் பெண் தொழிலதிபருடன் ஹுவாங் நெருக்கமான உறவில் இருந்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
அந்த பெண் தொழிலதிபருடன் திருமணத்தை தாண்டி கள்ள உறவில் ஜென்சன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து என்விடியா நிர்வாக குழுவிடமும் ஜென்சன் ஒப்புக்கொண்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சீனா இது தொடர்பாக மவுனம் கலைத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன், அனைத்து குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் மேலும், "சீன உளவாளி தொடர்பான இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. இது சீனாவுக்கு எதிராக நடத்தப்படும் அவதூறு பிரச்சாரம்" என்று அவர் தெரிவித்தார். சீன அரச ஊடகங்களும் இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை விமர்சித்துள்ளன. நியூயார்க் டைம்ஸ் செய்தி அமெரிக்கா- சீனா உறவை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதாக சீன உடகங்கள் சாடியுள்ளன. சீன அரசுக்கு சொந்தமான குளோபல் டைம்ஸ், "சீனா- அமெரிக்கா உறவுகள் மேம்பட தொடங்கும் ஒவ்வொரு முறையும், மறைமுகமாக தாக்குதல் நடத்துபவர்கள் இருக்கிறார்கள்" என்று சாடியுள்ளது. இதற்கு முன்பும் கூட ஒரு முறை ஜென்சனை சீன உளவுத்துறைக்கு நெருக்கமான ஒரு பெண் உளவு பார்த்தாக வந்த தகவலை சீனா மறுத்திருந்தது. இப்போது இந்த விவகாரம் பெரியளவில் வெடித்துள்ள நிலையில், சீனா மீண்டும் இதை மறுத்துள்ளது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று என்விடியா நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இந்த சர்ச்சை ஒருபுறம் இருக்க, சீனாவுக்கு மேம்பட்ட ஏஐ சிப்களை விற்பனை செய்வதில் ஹுவாங் எடுத்த நிலைப்பாடும் இப்போது பேசுபொருளாகியுள்ளது. சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி, என்விடியாவின் H200 சிப்களைச் சீனாவுக்கு விற்பனை செய்ய அனுமதியை கூட பெற்று கொடுத்தார்.. இந்த சூழலில் தான் உளவாளி என்று சந்தேகிக்கப்படும் பெண் உடன் அவருக்கு இருந்த தொடர்பு சர்ச்சையாக வெடித்துள்ளது. இதற்கிடையே இந்த சர்ச்சை காரணமாக என்விடியா பங்குகள் கடுமையாக சரிந்தது. இந்ச சர்ச்சை முடியும் வரையில் என்விடியா பங்குகள் இதேபோல தான் இருக்கும் என தெரிகிறது.சர்ச்சை
மறுப்பு
சீன உளவுத்துறை
பேசுபொருள்