பெய்ஜிங்: சமீபத்தில் தங்கத்தின் விலை குறைந்திருந்தது. இந்த சான்ஸை பயன்படுத்திக்கொண்ட சீனா.. இதுவரை இல்லாத அளவுக்கு தங்கத்தை வாங்கி குவித்திருக்கிறது. இது அமெரிக்காவுக்கு பெரிய அச்சத்தை கொடுத்திருக்கிறது. அதைவிட இந்தியாவுக்கு பெரிய நெருக்கடியையும் கொடுத்திருக்கிறது.
தங்கம்தான் எல்லாமே! எதிர்காலம் இனி இப்படித்தான் மாறப்போகிறது. இதை முன்கூட்டியே உணர்ந்த சீனா.. தங்கத்தை இஷ்டத்துக்கும் வாங்கி குவித்து வருகிறது.
சர்வதேச அளவில் சமீபத்தில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் (31.103 கிராம்) ரூ.3.4 லட்சத்திற்கு குறைந்தது. முன்பு இருந்த விலையை விட இது 7% குறைவாகும். இதுதான் சான்ஸ் என்று உணர்ந்த சீனா, சுமார் 25.8 டன் அளவுக்கு தங்கத்தை வாங்கி குவித்துள்ளது. இவ்வளவு தங்கத்தை வைத்து சுமார் 32.25 லட்சம் சவரன் நகைகளை செய்ய முடியும். அந்நாட்டின் தங்க இருப்பு குறித்த அதிகாரப்பூர்வ டேட்டாவை மேற்கோள் காட்டி.. சீனா 25.8 டன் அளவுக்கு தங்கத்தை வாங்கியிருப்பதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் செய்தியை வெளியிட்டிருக்கிறது. இதற்கு இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து வாங்கியதையும் சேர்தால்.. கடந்த 10 மாதங்களில் மட்டும் சீனா சுமார் 129 மெட்ரிக் டன் அளவுக்கு தங்கத்தை வாங்கி குவித்துள்ளது. இதனால் அந்நாட்டின் மொத்த தங்க கையிருப்பு 2,260 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமானதாக உயர்ந்திருக்கும். இந்த ஆண்டின் 3வது காலாண்டில், அதிக அளவில் தங்கம் வாங்கிய நாடுகளின் பட்டியலில் சீனாதான் முதலிடத்தில் இருக்கிறது. எந்த நாடு வேண்டுமானாலும் தங்கத்தை வாங்கலாம். அது அவர்களின் சுய விருப்பம். ஆனால், பிரச்சனை என்னவெனில் சீனா தங்கம் வாங்குவதால் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் சிக்கல் ஏற்படும் என்பதுதான். தங்கத்திற்கு பின்னாடி ஒரு லாஜிக் இருக்கிறது. அதாவது அமெரிக்க டாலர் ஏன் இவ்வளவு சக்தி வாய்ந்ததாக உள்ளது? காரணம் கச்சா எண்ணெய் டாலரில்தான் வாங்கப்படுகிறது. டாலருக்கு பின்னாடி கச்சா எண்ணெய் என்கிற மிகப்பெரிய சொத்து உள்ளது. அப்படியெனில், சொத்து இருந்தால்தான் அந்நாட்டு கரன்சியின் மதிப்பு உயரும். இப்போது சொல்லுங்கள் தங்கம் சொத்துதானே! சீனா அதைத்தான் செய்கிறது. தங்கத்தை வாங்கி குவிக்க.. குவிக்க அந்நாட்டு கரன்சியான யுவானின் மதிப்பை அதிகரிக்கும். இது இந்தியாவுக்கு பெரிய தலைவலி. சீனா அளவுக்கு நாமும் தங்கத்தை வாங்கவில்லை எனில்.. நிச்சயம் நம்முடைய ரூபாய் கரன்சியின் மதிப்பு குறையும். எனவே தங்கத்தை வாங்க வேண்டிய நெருக்கடிக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். அடுத்து.. அமெரிக்காவுக்கு பெரிய பிரச்சனை காத்திருக்கிறது. சீனா தங்கத்தை வாங்க அவங்க ஊரு கரன்சியை கொடுக்கவில்லை. மாறாக தங்களிடம் சேமிப்பில் உள்ள அமெரிக்க டாலரை கொடுக்கிறது. வணிகம் அறிந்தவர்களுக்கு மார்க்கெட் ரூல்ஸ் தெரியும். எது அதிகமாக சப்ளை ஆகிறதோ.. அதன் வேல்யூ குறையும். கோயம்பேடு சந்தைக்கு எப்போதும் வரும் 30 தக்காளி லாரிகளுடன் கூடுதலாக 10 லாரிகள் வந்தால்.. அன்னைக்கு தக்காளி ரேட் சரிந்துவிடும். அதுவே 30 லாரிகளுக்கு பதில் வெறும் 5 லாரிகள்தான் வருகிறது எனில்.. தக்காளிதான் அன்னைக்கு மார்க்கெட்டில் ராஜா. இதே ஃபார்முலாவைதான் சீனாவும் பின்பற்றுகிறது. டாலரை வெளியே விடுவதன் மூலம் அதன் மதிப்பு குறைய தொடங்கியருக்கிறது. ஒரேயடியாக மொத்த டாலரையும் விற்றுவிட்டால்.. அதன் மதிப்பு சட்டென குறைந்துவிடும். ஆனால்.. அதெல்லாம் தற்காலிகமானது. எனவே இதை உணர்ந்த சீனா கொஞ்சம் கொஞ்சமாக.. ரசித்து ரசித்து அமெரிக்காவை பழிவாங்க டாலரை மெதுவாக விற்று தங்கத்தை வாங்கி வருகிறது. இந்த நிலை இப்படியே போனால்.. நிச்சயம் அமெரிக்கா காலி. இந்தியா என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.