பெருந்துயரத்தில் வெனிசுலா.. புரட்டி போட்ட நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 1000ஐ நெருங்கியது!

  • கராகஸ்: வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 920 ஆக உயர்ந்துள்ளது. 2,980 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட லா குவைரா மாகாணத்தில் ராணுவக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

    Advertisement

    நிலநடுக்கத்துக்குப் பிறகு காணாமல் போனவர்களின் தகவல்களைப் பதிவு செய்ய அரசு தொடங்கிய இணையதளத்தில் வெள்ளிக்கிழமை மதியம் வரை சுமார் 50,000 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், வெளிநாட்டு மீட்புக் குழுக்களும் நிவாரணப் பொருட்களும் வெனிசுலாவுக்கு வரத் தொடங்கியுள்ளன.

    Advertisement

    கடந்த புதன்கிழமை மாலை பொது விடுமுறை நாளில் தலைநகர் காரகாஸுக்கு மேற்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. லத்தீன் அமெரிக்காவை சமீபத்தில் இவ்வளவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதற்கு முன்னர் தாக்கியது கிடையாது.

    அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்புகள் 10,000-ஐத் தாண்டக்கூடும் என மதிப்பிட்டுள்ளது. இதற்கு முன் 1967-ல் வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 240 பேர் உயிரிழந்தது பதிவாகியிருந்தது.

    மீட்புப் பணிகள்

    இப்படி இருக்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலநடுக்கம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே டிரம்ப் ஏற்படுத்திய அரசியல் குழப்பத்திலிருந்து இன்னும் வெனிசுலா முழுமையாக வெளியே வராத நிலையில், இந்த நிலநடுக்கம் அந்நாட்டு மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

    Advertisement

    அரசு நிர்வாகத்தில் குழப்பம் இருப்பதால், மீட்புப் பணிகள் பல இடங்களில் சீரற்ற நிலையில் இருந்தன. காரகாஸ் அருகே உள்ள கடலோர நகரான லா குவைராவில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 100 கட்டிடங்கள், உள்பட பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்துள்ளன. கனரக மீட்பு இயந்திரங்கள் இல்லாததால் உள்ளூர் மக்கள் கைகளாலும் எளிய கருவிகளாலும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைத் தேடி வருகின்றனர்.

    மீட்புப் பணிகளுக்கு சர்வதேச உதவி

    சர்வதேச மீட்புக் குழுக்கள் வெனிசுலா செல்லத் தொடங்கின. டொமினிகன் குடியரசு முதலில் லா குவைராவுக்கு தனது குழுவை அனுப்பியது. அதைத் தொடர்ந்து மெக்சிகோ 250 மீட்பாளர்களையும், எல் சால்வடார் 188 பேரையும், ஸ்பெயின் சுமார் 100 பேரையும், கொலம்பியா 63 பேர் கொண்ட குழுவையும் அனுப்பியுள்ளன. சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் மற்றும் சிறப்பு உபகரணங்களுடன் மீட்புக் குழுக்களை அனுப்பியுள்ளன.

    Advertisement

    மனிதாபிமான உதவிகளை எளிதாக்கும் வகையில் தற்காலிகமாகத் தடைகளைத் தளர்த்திய அமெரிக்கா, நிவாரண நிதியாக 150 மில்லியன் டாலர் அளிப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, மீட்புக் குழுக்களை அனுப்ப உள்ளதாகவும், சேதமடைந்த காரகாஸ் விமான நிலையத்தை இயக்க பென்டகன் உதவும் என்றும் தெரிவித்தார். கொலம்பியா, சுவிட்சர்லாந்து, எல் சால்வடார் உள்ளிட்ட நாடுகளும் நிவாரணப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை அனுப்பியுள்ளன. இந்த உதவிகளுக்கு ரோட்ரிக்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

    English Summary

    A powerful earthquake has struck Venezuela, resulting in 920 fatalities and causing massive destruction, particularly in the La Guaira region. As thousands remain trapped beneath the rubble and local resources are stretched thin, international rescue teams and humanitarian aid from various countries, including the US and Spain, are arriving to support urgent relief operations.